Home பெண்கள் உணவு உடல் கட்டாயம் உள்ளெடுக்க வேண்டிய காலை உணவின் முக்கியத்துவங்கள்!food-safety

கட்டாயம் உள்ளெடுக்க வேண்டிய காலை உணவின் முக்கியத்துவங்கள்!food-safety

43

food-safetyஅம்முக்குட்டி… தங்கக்குட்டி…’ எனக் குரலால் மனம் வருடி, காது மடல்கள், புருவம், கன்னங்களில் தடவிக் கொடுத்து, ஒரு பூவை காற்றும் வெயிலும் மலர்த்துவது போல குழந்தையைத் துயில் எழுப்பினால் அந்தக் காலை எப்படி இருக்கும்? நினைக்கவே இனிக்கிறதில்லையா? ‘மணி ஏழரை ஆச்சு… எந்திரி…’ என அம்மா எழுப்ப… ‘இன்னும் அஞ்சு நிமிஷம்… ப்ளீஸ்மா’ என்று செல்லம் கெஞ்ச… அம்மாவுக்கு டென்ஷன் எகிறும். ஒருவழியாக குழந்தையைக் குளிக்க வைத்து, யூனிஃபார்ம் அணிவித்து, சாப்பிட வைத்து, ஆட்டோவில் அடைத்து அனுப்பிய பிறகு பார்த்தால், வீடு போர்க்களமாகக் காட்சியளிக்கும். இந்தப் பரபரப்பில் 95 சதவிகிதக் குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை.

சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், மகிழ்ச்சியான மனநிலைக்கு வழிவகுக்கும்.

காலை உணவை தவிர்ப்பதால் வயிற்றில் அமிலம் சுரந்து, புண் ஆகி, நாளடைவில் அல்சர் பிரச்னையாக மாறும். உடல் வளர்ச்சியையும் பாதிக்கும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் குறைந்து சோர்வை ஏற்படுத்தும்.

சில வீடுகளில் எழுந்தவுடன் பால் கொடுப்பதால் செரிமானம் ஆகாமல் குழந்தைகள் மந்தமாகக் காணப்படுவார்கள். தொடர்ச்சியாக பால் குடிப்பது மட்டுமே உடல்நலத்தை மேம்படுத்தாது.

காலை உணவு சாப்பிடாமல் நொறுக்குத்தீனியை உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தால் பசியும் தீராது… உடலுக்கும் நன்மை இல்லை. எடையும் அதிகரிக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகும் உணவைத் தவிர்ப்பதால், உடல் அதிக சக்தியை செலவளிக்கிறது. இது சோர்வை அதிகரிக்கும். உடல் பலவீனத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். காய்ச்சல், சளி மற்றும் வைரஸ் தொற்றுகளின் பாதிப்பு அதிகமாகும். உடல்நலம் பாதிக்கப்படுவதால் இயல்பான வளர்ச்சியும் படிப்பும் பாதிக்கப்படும். இக்குழந்தைகள் கோபம், எரிச்சலுடன் காணப்படுவார்கள். எதிலும் நாட்டம் இல்லாமல் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு வெறித்தனமான செயல்களில் ஈடுபடும் அபாயமும் உண்டு.

காலை உணவு முறையாக இருந்தால்தான் ரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கும். மூளை, இதயம், செரிமான மண்டலம் மற்றும் எலும்பு, தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பருப்பு வகைகளை எடுத்துக்கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். கொழுப்பு நிறைந்த காலை உணவு மந்த நிலையை உருவாக்கும். மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், வைட்டமின் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் என சமச்சீர் காலை உணவு அவசியம்.

பட்டினி கிடக்கும் பச்சைக் குழந்தைகள்

தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவைத் தவிர்ப்பதற்கு நேரமின்மையைக் காரணம் காட்டுகிறார்கள்… ‘வாரத்தில் 3 – 5 நாட்கள் வரை காலை உணவை 22 சதவிகிதக் குழந்தைகள் தவிர்க்கிறார்கள். 20 சதவிகிதக் குழந்தைகள் வாரத்தில் ஓரிரு நாட்கள் தவிர்க்கிறார்கள். 58 சதவிகிதக் குழந்தைகள்தான் தினமும் சாப்பிடுகிறார்கள். அதுவும் சரிவிகித சத்துள்ளதா என்பது கேள்விக்குறி’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருந்தால் முதல் நாள் இரவே, அடுத்த நாள் சமையலை அவர்களுடன் சேர்ந்தே திட்டமிடுங்கள். கடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே காய்கறியைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு காயிலும் என்ன சத்து இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். காய்கறி குறித்து குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருங்கள். இந்த அனுபவங்கள் உணவைப் பற்றி கற்பனை செய்யவும், அதை சாப்பிடும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

”குளித்தல் உள்ளிட்ட அன்றாடக் கடமைகளைச் செய்து முடித்து, குழந்தைக்குப் பசித்த பிறகு உணவு தரலாம். வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். பாலுடன் கார்ன் ஃபிளேக்ஸ், அரை வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம். இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஓட்ஸ் காய்கறி கலவை அல்லது தேன் கலந்த ஓட்ஸ், அரை ஆப்பிள் கொடுக்கலாம். ரவையுடன் முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்த கேசரி அல்லது பிரெட் சாண்ட்விச் அல்லது வெண்ணெய் தடவிய பிரெட் கொடுக்கலாம். இட்லிக்கு நிலக்கடலை சட்னி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, வேக வைத்த முட்டை, பன்னீர் டோக்ளா என எளிய உணவுகளை வித்தியாசமாகச் செய்யலாம். காலை உணவோடு ஒரு பழம் நல்லது!”

சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். தனது பங்களிப்பை செலுத்தும் போது, அது தான் சமைத்த உணவு என்ற எண்ணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிடப் பழகும் குழந்தை. பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். தொலைக்காட்சி நேரத்தைக் குறைத்து, வேறு விளையாட்டுகளை அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள். காலை நேர டென்ஷனை தவிர்க்க இது உதவும். சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம். பெற்றோரும் சரிவிகித சத்துணவுக்கு மாறுவதே நல்லது. பசித்த வயிறும் அழுத கண்களுமாகச் செல்லங்களை பள்ளிக்கு வழியனுப்பும் நிலை மாறட்டும். தலைவாரி பூச்சூட்டி சத்தாக சாப்பிட வைத்து இன்முகத்துடன் வழியனுப்புவோம். முத்தங்களை பரிசாகப் பெறுவோம்!