Home ஆண்கள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது?

31

couple1-500x500‘‘திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம்.

குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்… பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் என பொது காரணிகளும் இருக்கலாம். மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட் கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35 வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். காசநோயானது ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை உருவாக்கும்.

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். விதைகளில் உற்பத்தியாகிற அணுக்கள் ஒரு இடத்தில் சேர்ந்திருக்கும். இந்த இடத்தில் இருக்கும் ஒரு வால்வு தாம்பத்தியம் கொள்கிறபோது விலகி, விந்தணுக்களை வெளியேற்றும்.

மற்ற நேரங்களில் விந்தணுக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மூடிக்கொள்ளும். இதனால்தான் சிறுநீர் கழிக்கும்போது விந்தணுக்கள் வெளியேறுவதில்லை. விந்தணுக்கள் பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் குழந்தையின்மை பிரச்சனை உண்டாகும். இந்த அடைப்பு, வெரிக்கோசிஸ் போன்ற அறுவைசிகிச்சைகள் செய்துகொண்டதின் பக்கவிளைவாகவும் நோய்த்தொற்றுகளின் காரணமாகவும் உண்டாகலாம்.

இக்குறைபாடுகளில் பெரும்பாலானவை விதைப்பையை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளாததாலேயே ஏற்படுகிறது. விதைப்பைக்கு ரத்த ஓட்டமும் நாம் சுவாசிக்கிற உயிர்க்காற்றும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதன் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும் (இது பெண்களின் கருப்பைக்கும் பொருந்தும்). ஆனால், கொழுப்பு உணவுகள், இறுக்கமான உடைகள், நீண்ட நேரம் பணிபுரிவது, போதுமான தண்ணீர் அருந்தாதது, உடல் சூடு போன்ற காரணங்களால் விதைப்பைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் தரம் குறைந்து விடுகிறது. ஹார்மோன் குறைபாடுகளால் விதையில் போதுமான வளர்ச்சி இல்லாததும் காரணமாக இருக்கிறது.

இன்று எல்லாவற்றுக்கும் கருவிகள் வந்துவிட்டதால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. வாகன வசதிகளும் வந்துவிட்டதால் நடக்கிற பழக்கமும் இல்லாமல் போய்விட்டது. வேலையும் கூட, உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறையாக இருக்கிறது. உட்கார்ந்தே செய்கிற வேலை என்றவுடன் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறவர்களை மட்டுமே நினைப்போம். அலுவலகங்களில் வேலை பார்க்கிறவர்கள், டாக்டர்கள், ஓட்டுநர்கள், வாட்ச்மேன் உள்பட பலரும் இந்த வாழ்க்கை முறையில்தான் இருக்கிறோம்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையாக, ‘முறையான உணவுமுறையைப் பின்பற்றுங்கள், சுகாதாரமாக இருங்கள், தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அடிப்படை மாற்றங்களைத்தான் முதலில் சொல்வோம். இரண்டாவது கட்டமாக உடல் பரிசோதனை (Physical examination) செய்தால், என்ன பிரச்சனை என்பதை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான மலட்டுத்தன்மையை இந்த இரு கட்டங்களிலேயே சரி செய்துவிடலாம். சரி செய்ய முடியாவிட்டாலும், இதற்கு பல சிகிச்சைகள் அடுத்தடுத்து இருக்கின்றன. மருத்துவம் பல்வேறு வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்சனையாகவோ நினைக்க வேண்டியதில்லை.

இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், சிகிச்சை பெற்றுக்கொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதுதானா, சிகிச்சையளிக்கப் போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை கவனமாகப் பரிசீலனை செய்துகொள்ளுங்கள்.