Home பெண்கள் உடல் கட்டுப்பாடு சிரமங்களை தாண்டி உடற்பயிற்சியை தொடர்வது எப்படி?

சிரமங்களை தாண்டி உடற்பயிற்சியை தொடர்வது எப்படி?

33

எந்த ஒரு நல்ல காரியம் செய்யும்போதும் அதற்கு பல தடைகள் வருவது இயற்கையே. மனம் தளராது, போராடி எல்லாவித எதிர்ப்புகளையும் முறியடித்து, செய்ய வேண்டியதை செய்து முடிப்பதே உண்மையான வெற்றி!

எவ்வித இடையூறும் இன்றி நீங்கள் உடற்பயிற்சியை திட்டவட்டமாக செய்து வரும் நிலையில் இருக்கிறீர்கள்… அப்போது, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சில இடையூறுகளுக்கு நீங்கள் உட்பட வேண்டி வருகிறது. அதற்காக உடற்பயிற்சியை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்… மனம் இருந்தால் கண்டிப்பாக மார்க்கம் உண்டு!

சரி… உடற்பயிற்சித் திட்டத்துக்கு இடையூறாக வரக்கூடியவை எவை? அதற்கு என்னவெல்லாம் தீர்வு? நம் தினசரி உடற்பயிற்சியை எப்படித் தடையில்லாமல் செய்யலாம் என்பது பற்றி அலசலாமே!

சமுதாயத்தில் வாழும்போது, நாம் நினைத்த படிதான் வாழ வேண்டும் என்று அடம் பிடித்தால், சந்தோஷத்தை இழந்து விடுவோம். அதனால், உங்கள் திட்டப்படி உடற்பயிற்சி செய்யலாம்… அதே நேரத்தில், பிறரையும் புண்படுத்தாமல், குடும்பம், அலுவலகம், கல்வி என எதுவும் பாதிக்கப்படாமல் இருக்க, சில பல மாற்றங்களை (Compromise) செய்ய வேண்டியது மிகவும் அவசியம். சிரமங்கள், இடையூறுகள் என்றால் விரல் விட்டு எண்ண முடியாதபடி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மிக முக்கியமான 5 இடையூறுகளை இங்கே காண்போம்…

1. பயணம் செய்யும்போது (Travelling)

ஆண்டு முழுவதும் பயணம் செய்யக்கூடியவராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக்கூடத்துக்கே சென்று பயிற்சி செய்ய இயலாது. அதனால், அனைத்து நகரங்களிலும் செயல்படக்கூடிய உடற்பயிற்சி கிளப்பில் ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்து, செல்லும் இடங்களில் எல்லாம், உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று பயன் பெறலாம். அது இயலாத பட்சத்தில்? காலை வேளையில் 30 நிமிடங்கள் மெது ஓட்டம் (Jogging), இரவு உணவு உட்கொண்ட சிறிது நேரத்துக்குப் பின், 15 நிமிட நடைப்பயிற்சி (Relaxed walk) செய்வதும் சாலச் சிறந்தது.

2. சிறிய அறைகளில் நீண்ட நேரம் இருக்க வேண்டிய கட்டாயம் (Confined to a limited space)

உங்கள் குழந்தைகளின் பரீட்சை நேரத்தில், அவர்கள் கூடவே 24 மணி நேரமும் இருந்து, அந்த சிறிய அறையில் அல்லது ஹாலில் குழந்தைகளை அவசியம் கவனிக்க வேண்டிய தருணங்கள், அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள், உடற்பயிற்சி உபகரணங்களை அந்த அறையிலேயே வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக… மெது நடை / மெது ஓட்டம் / ஓட்டத்துக்கான உடற்பயிற்சி கருவி (Treadmill) மற்றும் நிற்கும் சைக்கிள் ஓட்டம் (Stationary Bike) , துடுப்பு வலித்தல் (ஸிஷீஷ்மீக்ஷீ), சிறிய பளு தூக்கும் உபகரணங்கள் (Mini weight lifting sets) மற்றும் கயிறு குதித்தல் (Skipping) அல்லது அறைக்குள்ளேயே மெது நடை, மெது ஓட்டம் செய்யலாம்.

3. உடலின் சில குறிப்பிட்ட இடங்களில் அடிபடுதல் / காயம் உண்டாகுதல் / வலி ஏற்படுதல் (Injured)

அடி, காயம் அல்லது வலி உண்டாகும் இடங்களுக்கு ஓய்வு அவசியம். அதே வேளையில், அந்தப் பகுதிகளை விட்டு விட்டு, அவை பாதிக்கப்படாமல் மற்ற உடற்பகுதிகளில் உடற்பயிற்சி செய்து உறுதிபடுத்துவதில் எந்தத் தவறும் கிடையாது. சிறிய காயமோ, அடியோ, வலியோ கையில் ஏற்பட்டால், அதனால் உங்கள் நடைப்பயிற்சியையோ, மெது ஓட்டத்தையோ நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. உங்களுடைய காயம் / அடி / வலி பற்றி உடற்பயிற்சி வல்லுனரிடம் ஆலோசித்து அவர் சொல்படி செய்யலாம்.

4. ‘மூச்சுவிடக் கூட நேரமில்லை’ என்ற இக்கட்டான நேரம் (Too Busy)

‘உடற்பயிற்சியா? எனக்கு மூச்சுவிடக் கூட நேரம் இல்லை’ எனக்கூறும், கதறும், கோபத்தின் உச்சிக்கே செல்பவர்கள் பலர் உண்டு. டி.வி. பார்ப்பதிலும் விடிய விடிய பார்ட்டிகளில் செலவழிப்பதிலும் மொபைல் போன், சாட்டிங், சோசியல் நெட்வொர்க் என பலவிதமாக போக்குவதிலும் உள்ள நேரத்தில் 30 நிமிடங்களை அளிக்க முடியாதா? உங்கள் உடல்நலத்துக்காக ஒதுக்க வேண்டிய தங்கமான நேரம் இது. உங்கள் உடலும் மனமும் ஆத்மாவும் ஆரோக்கியமாக இருக்க சிறிது நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள்!

5. உற்றார், உறவினர் நம் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நாட்கள் (Visitors at Home)

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் ஆரோக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பின் நீங்கள் அதிர்ஷ்டக்காரர். அவர்களோடு நடைப்பயிற்சியிலோ, விளையாட்டிலோ ஈடுபடலாம். விருந்தினரோ, ஆரோக்கிய அக்கறை அற்றவராக இருப்பின், உங்கள் தினசரி உடற்பயிற்சி பாதிக்காமல் இருக்க, சில நல்ல யுக்திகளை கையாள வேண்டியது அவசியம். அவர்கள் தூங்கி எழுவதற்கு முன்போ, அவர்கள் தூங்கும் அல்லது ஓய்வு எடுக்கும் நேரங்களிலோ, உங்கள் உடற்பயிற்சியை முடித்துக் கொள்ளலாமே. அல்லது உடற்பயிற்சி நேரத்தில், அவர்களை முக்கியமான இடங்களுக்கோ, கோயில்களுக்கோ அனுப்பி வைக்கலாம். இங்கே புத்திசாலித்தனம்தான் உங்களின் உடல் ஆரோக்கியம்!