Home பாலியல் ஆணுறை தெரியும் – பெண்ணுறைகள் பற்றித் தெரியுமா!

ஆணுறை தெரியும் – பெண்ணுறைகள் பற்றித் தெரியுமா!

70

ஆணுறைகள் போலவே பெண்களுக்கும் பெண்ணுறைகள் என்பவை உள்ளன. இவையும் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனமாகும். இவை விந்தணுக்கள் உள்ளே நுழைவதைத் தடுப்பதன் மூலம் விந்தணுக்கள் கருமுட்டையை அடைந்து கருவுறாமல் தடுக்கின்றன. அத்துடன் பால்வினை நோய்கள் பரவாமலும் காக்கின்றன.

பெண்ணுறைகள் பாலியூரத்தீன் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகின்றன. இவை ஒரு சிறிய பைபோல் காட்சியளிக்கும், இவற்றின் இரண்டு முனைகளிலும் நெகிழ்தன்மை கொண்ட வளையங்கள் இருக்கும். ஒரு முனை மூடியிருக்கும், மற்றொரு முனை திறந்திருக்கும். மூடிய முனையில் இருக்கும் வலையமானது, பெண்ணுறுப்புக்குள் பையைப் பிடித்துக்கொள்ள உதவுகிறது, மற்றொரு வளையமானது பெண்ணுறுப்புக்கு வெளியே இருக்கும். பை போன்ற இந்த அமைப்பானது, விந்தணுக்களைப் பிடித்துவைத்துக்கொண்டு, பெண்ணுறுப்புக்குள் அவை நுழையாதவண்ணம் தடுக்கிறது. ஆணுறைகள் ஆணுறுப்பை மட்டும் மூடும், ஆனால் பெண்ணுறைகள் பெண்ணுறுப்பு மட்டுமின்றி, வெளிப்புறம் இருக்கும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளையும் மூடும்.

இவற்றைப் பயன்படுத்தும் முறை (How to use a female condom?)

முதலில், பேக் சேதமடையாமல் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும். காலாவதி தேதியை சரிபார்த்துக்கொள்ளவும்.
கவனமாக பேக்கில் இருந்து வெளியே எடுக்கவும் (பற்களால் கடிக்கவோ, கூரான பொருள்களையோ பயன்படுத்த வேண்டும், அப்படிச் செய்வதால் பெண்ணுறை சேதமடையக்கூடும்).
உங்களுக்கு சௌகரியமான நிலையில் இருக்கவும், பிறகு பெண்ணுறையின் மூடிய முனையில் இருக்கும் வளையத்தை அழுத்தித் தள்ளி பெண்ணுறுப்புக்குள் செலுத்தவும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழத்திற்கு அழுத்தவும். மறுமுனையில் இருக்கும் பெரிய வளையம் வெளியே தொங்கிக்கொண்டு இருக்கும். அது பெண்ணுறுப்பின் திறப்பைச் சுற்றியுள்ள பகுதிகளை மூடியிருக்கும்.
பாலுறவின்போது ஆணுறுப்பு பெண்ணுறைக்குள் நுழைய வேண்டும், பெண்ணுறுப்புக்கும் பெண்ணுறைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் நுழையக்கூடாது.
விந்து வெளியேறியதும், பெண்ணுறையின் வெளிப்பக்க முனையைத் திருப்பி, இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளவும், அப்போது விந்து வெளியே கசியாது, அப்படியே பிடித்து பெண்ணுறையை வெளியே இழுக்கவும்.
சுகாதாரமான முறையில் அதனை அப்புறப்படுத்தவும்.
ஒவ்வொரு முறையும் உடலுறவில் ஈடுபடும்போது புதிய பெண்ணுறையைப் பயன்படுத்தவும்.
பெண்ணுறையின் செயல்திறன் (Effectiveness of female condom)

இவற்றை சாதாரணமாகப் பயன்படுத்தும்போது கர்ப்பத்தைத் தடுப்பதில் இவை 75-82% வரை பலனளிக்கின்றன. சரியான முறையிலும், தொடர்ச்சியாகவும் பயன்படுத்தினால் 95% பலனளிக்கிறது (அதாவது ஒரு வருடத்தில் இவற்றைப் பயன்படுத்தும் 100 பெண்களில் 5 பேர் கர்ப்பமாக வாய்ப்புள்ளது).

பெண்ணுறையின் நன்மைகள் (Advantages of female condom)

சரியான முறையிலும், தொடர்ச்சியாகவும் பயன்படுத்தினால் இவை சிறந்த கருத்தடைச் சாதனமாகப் பலனளிக்கும்.
உடல் திரவங்கள் படாமல் பாதுகாப்பதால், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்த்தொற்றுகள் எதுவும் வராமல் காக்கும்.
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாதவிடாய்க் காலங்களிலும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பானவை, பக்க விளைவுகள் இல்லாதவை.
பெண்ணுறையின் குறைபாடுகள் (Disadvantages of female condom)

சிலருக்கு இது உடலுறவில் இடையூறாக, உறுத்தலாக இருப்பதாகத் தோன்றலாம்.
சிலர் இது உணர்வைக் குறைப்பதால், பாலியல் இன்பம் குறைவதாகக் கூறுகின்றனர்.
சரியாகப் போருத்தாவிட்டால், உடலுறவின்போது சிறு சத்தங்கள் ஏற்படலாம்.
ஆணுறைகளைப் போல இவை எல்லா இடங்களிலும் எளிதில் கிடைப்பவை அல்ல.
பெண்ணுறைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள் வலிமையானது என்றாலும், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அது கிழியலாம்.
சிலருக்கு எரிச்சலும் ஒவ்வாமை விளைவுகளும் ஏற்படலாம்.