Home பெண்கள் அழகு குறிப்பு வெயில் காலத்தில் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

வெயில் காலத்தில் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

35

செம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தவும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்புவாகத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். கருமையான கூந்தல் பெற உதவும். பொடுகுத்தொல்லை நீங்கும்.

வியர்க்குரு உள்ளவர்கள், வேப்பிலை போட்டு ஊறவைத்த தண்ணீரை குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். வெயிலில் செல்லும்போது, கற்றாழையில் உள்ள சோற்றை வெயில் படும் இடங்களில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், வெயிலின் தாக்கம் நேரடியாகச் சருமத்துக்குள் செல்வது தடுக்கப்படுகிறது.

வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்றபின் தேய்த்த இடங்களைக் கழுவிக்கொள்ளலாம். இதனால், சருமம் மங்குவது தடுக்கப்பட்டு, பளபளப்பாக உதவுகிறது.

பெண்கள் காலை 8 மணிக்குள் தலைக்குக் குளிக்க வேண்டும். குளித்ததும் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கலாம். மாதவிலக்குக் காலங்களில் உடல்சூட்டைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மருதாணியை அரைத்து உள்ளங்கை மற்றும் பாதங்களில் வைக்கலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.

லெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.

வைட்டமின்-சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும். தினமும் தேன் சாப்பிடலாம்.

காலையில் நெல்லி, எலுமிச்சை, முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழச்சாறு அருந்துவது நல்லது. சீசன் பழங்களான கொய்யா, மாம்பழம் மற்றும் உணவுப் பொருள்களான நுங்கு, பதநீர் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி, மாதுளை, மாம்பழம் போன்றவற்றையும் உண்ணலாம்.