Home உறவு-காதல் புதிய தம்பதிகள் தனிக்குடித்தனத்தை விரும்ப என்ன காரணம்..?

புதிய தம்பதிகள் தனிக்குடித்தனத்தை விரும்ப என்ன காரணம்..?

20

பெண் ஒருத்தி புதிதாக கல்யாணம் முடித்து ஒரு வீட்டிற்கு செல்வதென்பது ஒரு புது உலகத்திற்கு செல்வதற்குச் சமம். இதுவரை நாட்கள் வாழ்ந்த வீட்டை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு, சொந்த ஊரை விட்டு இன்னுமொரு புதியவீட்டிற்கு செல்வதென்பது வாய்ப் பேச்சிற்கு சாதாரணமாகத் தோன்றலாம்.

ஆனால் அதை அனுபவிக்கும் பெண்ணுக்கோ அது சொல்லொணா கவலையாகவே இருக்கும். அந்தக் கவலை நீடிப்பதும் அல்லது இன்பமாக மாறுவதும் அவள் புகுந்த வீட்டிலேயே நிர்ணயமாகின்றது.
முன்பெல்லாம் திருமணம் முடித்த பெண் தனது கணவனின் வீட்டில் ஏனையோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வது பழக்கம்.

ஆனால் இப்போது மாறிப்போயுள்ள உலகில் திருமணமான இளம் தம்பதியர் தங்களுக்கென புதிய வீட்டிற்கு குடி புகுவதென்றாயிற்று.

சொல்லப் போனால் அதுவும் நல்லதுக்கே. ஏனெனில் இளம் தம்பதியர் தங்களுடைய விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு போதிய காலம் இருப்பதோடு ஒரு குடும்பத்தலைவனாய், ஒரு குடும்பத் தலைவியாய் தங்களது வாழ்க்கையை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தாமாகவே கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

பிழைகள் அல்லது தவறுகள் ஏற்படின் அவர்களாகவே திருத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. மனைவியோ தனது கணவனுக்கு உணவு சமைத்து போடுவதிலிருந்து தனது வேலைகள், வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் என்பவற்றை உரிய நேரத்திற்குள் எவ்வாறு சமாளிப்பது என்பதை கற்றுக் கொள்கிறாள்.

அதே போல் கணவனும் தனது மனைவியை கவனிப்பது, வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் என்பவற்றை பக்குவமாக செய்து கொள்ள பழகிக் கொள்கிறார். இது அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு வித்திடுகின்றது.

ஆனால் கூட்டுக் குடும்பம் என வந்து விட்டால், திருமணமான பெண் அதிகாலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள அனைவரது மனதிலும் இடம்பிடிக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை செய்வது மட்டுமல்லாது தனது வேலைகளையும் சரியாக செய்து கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் பெரியோர்களின் குறை கூறல்களுக்கும் உள்ளாக வேண்டியிருக்கும். உண்மைதான், இந்த சந்தர்ப்பங்களில் புதுமணப் பெண் சில தவறுகளை விடலாம். ஆனால் பெரியோர்களே அதனை அனுசரித்து போக வேண்டும். எனினும் உண்மையில் நடப்பதென்னவோ தலைகீழாகத்தான்.
நாம்பெரியவர்கள், எமதுசொல்லைத்தட்டக்கூடாது,

தவறுகள் ஏற்படக் கூடாது போன்ற பல்வேறு எண்ணங்களை தன்னகத்தே கொண்டிருப்பதோடு தங்கள் மனதுக்கு ஒரு சிறுதுளியேனும் குறையாது புதுமணப்பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என பெரியோர்கள் எதிர்பார்ப்பதுண்டு.

இந்த எதிர்பார்ப்பே பின்னர் மனக்கசப்பாக மாறி விடுகின்றது. அந்த வகையில் தனிக்குடித்தனம் இந்த காலத்தை பொறுத்த வரையில் மிக சிறப்பானதொன்று. மேற்கத்தேய நாடுகளிலும் புதுமணத் தம்பதிகள் தங்களது விருப்பத்திற்கிணங்க அவர்களுக்கென ஒரு புதிய வீட்டில் தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதுண்டு.
அதனாலேயோ என்னவோ மாமியார் மருமகள் பிரச்சினைகள் கூட ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகின்றது எனலாம்.

என்ன தான் தனிக்குடித்தனம் செய்தாலும் தங்களது பெற்றோரையும் அடிக்கடி கவனிக்க தவறி விடக்கூடாத என்பதே உண்மை. ஏனெனில் எல்லா பெரிவர்களும் குற்றம் குறை கண்டு பிடிப்பவர்கள் அல்ல. எனவே காலத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொண்டு நலம் பெறுவோம்