Home பாலியல் பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்

பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்

27

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.
முன்னைய பதிவு ஆண் பருவமடைதல்

கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது.
காரணங்கள்

இதற்குக் காரணம் என்ன? பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது.

போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது.
இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுறுகிறது.
எடை அதிகரிக்கிறது.
அதீத எடை ஹோர்மோன்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பருவமடையும் வயது முன் நகர்வதற்கு இது காரணம் எனலாம்.
இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக முன்னைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

தொலைக்காட்சி மற்றும் கணனி காரணமாக இன்றைய பிள்ளைகளில் அறிவு விருத்தி வேகமாக கிடைக்கிறது.
அதேபோல பாலியல் சம்பந்தமான அறிவும் விரைவில் கிட்டுகிறது. தொலைக்காட்சி, சினிமா ஊடாக இவை பற்றிய உணர்வுகளையும் பெறுகிறார்கள்.

இவையே பாலியல் ஹோர்மோன்கள் விரைவில் தூண்டப்படுவதற்கு மற்றொரு காரணம் என நம்பப்பட்டது.

இதைத் தவிர

குழந்தைகள் பாலகர்களாயிருக்கும் காலத்தில் சோயா சார்ந்த பால் மாக்களையும் போசாக்கு மாக்களையும் பிரதான உணவாக உட்கொள்வதும் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சோயாவில் உள்ள பைற்ஈஸ்ரஜின் (Phytoestrogen) பெண்களின் ஹோர்மோனான ஈஸ்ரஜின்னை ஒத்தது. இது பொதுவாக உடலுக்கு நல்லது என்றே கருதப்படுகிறது. ஆயினும் குழந்தைகளில் சோயா சார்ந்தவை பிரதான உணவாக அமைந்தால் பாதகமாக அமையலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பரம்பரைக் காரணிகளும் அடங்கும். தாய் குறைந்த வயதில் பருவமடைந்தால் குழந்தைக்கும் அவ்வாறு நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
புதிய கருத்து

ஆனால் கலிபோனியாவில் அண்மைய ஆய்வு (Young Girls’ Nutrition, Environment and Transitions -CYGNET) ஒன்றானது இதற்குப் புதிய ஒரு காரணமும் இருக்கலாம் எனச் சொல்கிறது.

பெற்ற தகப்பன் வீட்டில் இல்லாத பெண் குழந்தைகள் இளவயதிலேயே பருவமடைவதாக அது கூறுகிறது.
ஆனால் இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. அதிக வருமானங்கள் உள்ள குடும்பங்களில் மட்டும்தான் இது அவதானிக்கப்பட்டது.
6 வயது முதல் 8 வயது வரையான 444 பெண் குழந்தைகளில் 2 வருடங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பருவமடைதல்
இந்த ஆய்வானது பருவமடைதல் (Puberty) பற்றியதே அன்றி பூப்படைதல் (Menarche) பற்றியது அல்ல. மார்பகங்கள் பெருப்பதையும், பாலுறுப்புகளை அண்டிய பகுதிகளில் முடி வளர்வதையுமே இந்த ஆய்வில் பருவமடைவதாகக் கொண்டார்கள்.
பூப்படைதல்
பூப்படைதல் என்பது முதல் முதலாக பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு ஏற்படுவதாகும். அதாவது முதல் முதலாவது மாதவிடாய் ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் பருவடைதல் என்பது பூப்படைதலுக்கு முன்னோடியான நிகழ்வு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
Puberty, Menarche ஆகிய சொற்களுக்கு இடையோயன பொருட்களைத் தெளிவுபடுத்தக் கூடிய சரியான தமிழ்ப் பதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான முறையே பருவமடைதல், பூப்படைதல், ஆகிய பதங்களை உபயோகப்படுத்தியுள்ளேன்.

தகப்பன் வீட்டில் இல்லாது இருப்பதற்கும் மகள் விரைவில் பருவமடைவதற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும்? தகப்பன் வீட்டில் இல்லாததால் உண்டாகக் கூடிய சமச்சீர் அற்ற குடுப்பச் சூழல் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால் அது ஏன் அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் மட்டும் நடக்கிறது? குறைந்த வருமானங்களில் பொதுவாக குழந்தைகளைக் கவனிப்பதற்கான ஆதரவு சமூகத்திலிருந்து கிடைக்கிறது. பெற்றோர்களின் தாய் தகப்பன்மார் வீட்டில் இருந்து கவனப்பர். அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கை கொடுப்பர்.

மற்றொரு காரணமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. மேலை நாடுகளில் வசதியான குடும்பங்கள் பலவற்றில் தாய் தனியாகவே வாழ்பவளாக இருப்பாள். குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளாக இருப்பர்.

இதனால் தாய் நீண்ட நேரம் தொழில் செய்பவராக இருக்கக் கூடும் என்பதால் தாயின் ஆதரவு குழந்தைக்குக் கிடைப்பது குறைவாக இருக்கும். தாயுடனான நெருக்கமான உறவு குறைந்த பெண் பிள்ளைகள் விரைவாக பருவடைகிறார்கள் என வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

பெற்றோரின் ஆதரவு

இரு ஆய்வுகளையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டால் தாயோ, தந்தையோ எவராக இருந்தாலும் பெற்றோருடனான ஆதரவு குறைந்த பிள்ளைகள் விரைவில் பருவமடைகிறார்கள் என்பது புரிகிறது.

இது எமது சூழலுக்கான ஆய்வு அல்ல என உதறித் தள்ளுவது புத்திசாலித்தனம் அல்ல.

எமது சூழலிலும் குழந்தைகளுக்கு தாய் தகப்பனுக்கு அப்பால் பேரன் பேத்தி உறவினர்களின் ஆதரவும் அரவணைப்பும் குறைந்து வருகிறது. அதற்கு மேலாக இங்கும் எமது பெண் குழந்தைகள் முன்னைய விட விரைவிலேயே பருவமடைவது அதிகமாகி வருகிறது. எனவே இவ்விடயங்கள் பற்றிய அறிவு அவசியம்.

பாதகங்கள்

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். காரணங்கள் இருக்கின்றன.

எதிர்காலத்தில் இப் பெண்களுக்கு பாலுறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
ஆஸ்த்மா வருவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
சமூக ரீதியாக அத்தகைய பெண் பிள்ளைகள் தவறான பாலியல் செயற்பாடுகளில் வயதிற்கு முன்னரே ஈடுபடுவதும், போதை பொருட்கள் பாவனையில் சிக்குவதும் அதிகம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
வகுப்பறை சிநேகிதர்களாலும் வெளி நபர்களாலும் இவர்கள் அதிகளவில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் உளநெருக்கீடு, மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு ஆளாக நேர்வது துர்ப்பாக்கியமே.
பருவமடைதலானது மூளை வளர்ச்சி நிறைவுறுவதுடன் தொடர்புடையது. எனவே காலத்திற்கு முந்திப் பருவமடைந்தால் மூளை வளர்ச்சி பூரணமடைவது பாதிப்படையலாம் எனவும் நம்பப்படுகிறது.