Home பெண்கள் தாய்மை நலம் உபத்திரவமற்ற ஆணுறை ஆரோக்கிய குடும்ப கட்டுப்பாடும்

உபத்திரவமற்ற ஆணுறை ஆரோக்கிய குடும்ப கட்டுப்பாடும்

57

தாய் நலம்:பெரும்பாலும் எந்தத் திட்டமிடலும் இன்றி இயல்பாகவே முதல் குழந்தை உருவாகி விடுகிறது. ஆனால், இரண்டாவது குழந்தை அப்படி இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்காகத் திட்டமிடுவது அவசியமாகிறது.

வழிகள் ஆயிரம்

திட்டமிடாத கருத்தரிப்பைத் தடுக்கவும் குழந்தைகளுக்கு இடையே ஆரோக்கியமான இடைவெளியைப் பேணவும் தற்காலிகக் கருத்தடை உத்திகள் பல உண்டு. செயல்பாடுகள் சார்ந்தும் சாதனங்கள், மருத்துவ உதவி சார்ந்தும் அவற்றை வகைப்படுத்தலாம். இவற்றில் பெரும்பாலானவை நூறு சதவீதக் கருத்தடைக்கு உத்தரவாதம் அற்றவை. மேலும், கணிசமானவற்றில் பக்க விளைவுகள் அதிகம்.

எனவே, இளம் தம்பதிகள் தங்களது குடும்ப மருத்துவரிடமோ மகளிர்,மகப்பேறு மருத்துவரிடமோ இவை தொடர்பாக ஆலோசனை பெறுவது நல்லது. தனிப்பட்ட ஒவ்வாமை, இதர உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மருத்துவரிடம் தெரிவித்து அதன்படி தங்களுக்கான தற்காலிகக் கருத்தடை முறையைத் தெரிந்துகொள்ளலாம். விளம்பரங்கள், நண்பர்களின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றை மேற்கொள்வது தவறு.

இடைவெளி அவசியம்

பாலூட்டும் காலம் முழுக்கக் கருத்தரிப்பு நேராது என்ற நம்பிக்கை நிலவுகிறது. “பிரசவமான முதல் ஆறு மாதத்துக்கு மட்டுமே இந்த நம்பிக்கை பொருந்தும். அதிலும் நூறு சதவீத உத்தரவாதம் கிடையாது. முதல் பிரசவத்துக்குப் பிறகு தாயின் உடல்நலன் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும் பிறந்த குழந்தையைப் பாலூட்டிப் பராமரிக்கவும் அவகாசம் தேவை. அடுத்துப் பிறக்கும் குழந்தையைக் கவனிக்க முழுமையான நேரமும் கவனிப்பும் ஒதுக்க முடியும் என்பது உறுதியான பிறகே அதைத் திட்டமிடலாம்.

குழந்தைகளுக்கான சராசரி இடைவெளி மூன்று ஆண்டுகள். ஓராண்டுக்குள் மறுபடியும் கருத்தரிப்பது தாய், முதல் குழந்தை, அடுத்துப் பிறக்கும் சேய் என மூவருக்குமே உடல், மனம், உணர்வு சார்ந்த சிரமங்களைத் தரும். அதேபோல ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால் இந்த இடைவெளி நீளும்போது, முதல் பிரசவத்துக்கு முன்பான நிலைக்குக் கருப்பை திரும்பிவிடும்” என்று அறிவுறுத்துகிறார் மகளிர்,மகப்பேறு மருத்துவர் வீணா.

மருத்துவ முறைகளே நன்று

மாதவிடாய்ச் சுழற்சியின் அடிப்படையில் முதலாவது நாள் கருத்தரிப்பு நேராது என்பது மூத்த பெண்களின் ஆலோசனை. அதன்படி, செயல்பாடு சார்ந்தவற்றில் முதலாவது நாள் கணக்கு பார்த்துப் பலர் பின்பற்றுவார்கள். தனிநபர் வேறுபாடுகளால் இந்தக் கணக்கு பெரும்பாலும் பிசகிவிடும். மற்றொரு செயல்பாட்டு உத்தி, உறவின் இறுதிக் கட்டத்தில் ஆணின் சுதாரிப்பு சார்ந்தது. இவை இளம் தம்பதிக்குப் பொருந்தாதது. எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே கருத்தடைச் சாதனங்கள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை அணுகுவது நல்லது.

தினசரி சாப்பிடும் மாத்திரைகள், உடலில் ஒட்டும் பட்டைகள் (Patch), உறுப்பில் பூசிக்கொள்ளும் விந்துக் கொல்லிப் பூச்சுகள், குறிப்பிட்ட மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் ஊசிகள், உடலுக்கு உள்ளாகப் பொருத்திக்கொள்ளும் சாதனங்கள் எனப் பெண்களுக்கு ஏராளமான கருத்தடைச் சாதனங்கள் உள்ளன.

இந்த வரிசையில் ஆணுறை போன்றே பெண்களுக்கான உறை, கவனக்குறைவான உறவுக்குப் பின்னர் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிடும் அவசர நிலைக் கருத்தடை மாத்திரைகள் போன்றவையும் சேரும். இவற்றில் பரவலாகப் பரிந்துரைக்கப்படுவது தினசரி மாத்திரையும் உடலுக்குள் பொருத்திக்கொள்ளும் லூப் ஆகியவை மட்டுமே. விழிப்புணர்வின்மை, அதிகப்படியான பக்க விளைவுகள், தோல்வி சதவீதம் எனப் பல காரணங்களால் இதர வழிமுறைகள் அவ்வளவாகப் பின்பற்றப்படுவதில்லை.

உபத்திரவமற்ற ஆணுறை

“கருத்தடை மாத்திரைகளிலும் பாலூட்டும் தாய்மாருக்கு எனத் தனியாக உள்ளன. மருத்துவர் பரிந்துரையில் அவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் பாலுண்ணும் குழந்தைக்குப் பாதிப்பின்றி அடுத்த குழந்தையைத் தவிர்க்க முடியும். கருத்தடை மாத்திரைகளில் பக்கவிளைவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். ஆண்டுக்கணக்கில் தாங்கும் ‘காப்பர் டி’ சாதனங்களைச் சிலர் பொருத்திக்கொள்கிறார்கள். ஆனால், நீரிழிவு, இதய பாதிப்புகளுள்ளான பெண்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுவதில்லை. அவ்வாறான சூழலில், கருத்தடை உபாயங்களுக்குக் கணவரே பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் டாக்டர் வீணா.

தற்காலிகக் கருத்தடையில் ஆணுறைப் பயன்பாடுகள் எளிமையானவை. கருத்தடை மட்டுமன்றி தொற்றுகள் பரவாமல் தவிர்ப்பதற்கும் உலகம் முழுக்க பரிந்துரைக்கப்படுவதில் ஆணுறை முதலிடத்தில் இருக்கிறது. நவீன உறைகள் இளம் தலைமுறையினரின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றன. கணிசமான பக்க விளைவுகள் அடங்கிய பெண்களின் கருத்தடைச் சாதனங்களுடன் ஒப்பிடுகையில், ஆணுக்கான உறைகள் உபத்திரவங்கள் அற்றவை. ஆனால், ஆய்வுகளின் அடிப்படையில் இவையும் நூறு சதவீத கருத்தடைக்கு உத்திரவாதமல்ல என்பதால், முறையான உபயோகத்தை அறிந்துகொள்வது அவசியம்.

நிரந்தரத் தடுப்பு முறைகள்

குழந்தைகள் போதும் எனத் திட்டமிடும் தம்பதி, நிரந்தரக் கருத்தடை முறைகளை நாடுவார்கள். இவையும் பரவலாகப் பெண்கள் மீதே திணிக்கப்படுகின்றன. சுகப்பிரசவம் எனில் மூன்று முதல் 45 நாட்களிலும், சிசேரியன் எனில் பிரசவத்தை ஒட்டியும் இவற்றை மேற்கொள்ளலாம். தற்போது லேப்ராஸ்கோபி முறையில் இவற்றின் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. நிரந்தரக் கருத்தடை என்பதும் பெயரளவில் மட்டுமே.

முன்பு போல் கருக்குழாயை அகற்றும் நடைமுறையெல்லாம் இப்போது இல்லை. அதனால், அவசியம் நேரும்போது சிறு அறுவை சிகிச்சை வாயிலாகக் கருத்தரிப்புக்கான வாய்ப்புகளை மீளப் பெறலாம். இம்மாதிரி நிரந்தரக் கருத்தடையிலும் பல காரணங்களால் பெண்ணைவிட ஆண் பொறுப்பேற்பதே வரவேற்புக்குரியது.

சந்தேகம் வேண்டாம்

நிரந்தரக் கருத்தடை நடைமுறைகளில் பெண்ணுக்கானதைவிட, ஆணுக்கான வாசக்டமி சிகிச்சையே அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இருந்தாலும் தவறான கற்பிதங்களால் ஆண்கள் மத்தியில் வாசக்டமி குறித்த தேவையற்ற தயக்கமே தொடர்கிறது. “ஆணின் விந்து என்பது உயிரணு, அதைச் சுமந்து செல்லும் திரவம், புரோஸ்டேட் சுரக்கும் திரவம் ஆகிய மூன்றையும் கொண்டது. இவற்றில் வாசக்டமி மூலம் உயிரணு மட்டுமே தடுக்கப்படுகிறது. எனவே வாசக்டமியால் ஆண்மை குறையும் என்றோ உறவில் ஈடுபாடு குறையும் என்றோ அச்சப்படத் தேவையில்லை. இது எளிமையான சிகிச்சை. ஓரிரு மணி நேரம்தான் ஆகும். அதன் பின் இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாகத் திரும்பவும் முடியும்” என்கிறார் மருத்துவர் வீணா.

அவநம்பிக்கை தேவையில்லை

பிரசவங்களுக்குப் பின்னர் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய அவதி ‘உறுப்புத் தளர்வு’. பிரசவ நடைமுறைகளால் பாதிக்கப்படாத ஆண், அவற்றால் அலைக்கழிந்த பெண்ணிடம் இந்தத் தளர்ச்சி குறித்தும், அதனால் எழும் திருப்தியின்மை குறித்தும் பெரிதும் குறைபட்டுக்கொள்வது நடக்கும். இந்தத் தளர்வை தன்னம்பிக்கை குறைவாகக் கருதும் பெண்களும் உண்டு. பெண்ணை நெருக்கடிக்கு உள்ளாகும் இத்தகைய தளர்வைத் தவிர்ப்பதற்குப் பாரம் பரியமான உடற்பயிற்சி உத்திகள் ஓரளவு உதவும்.

மேலும் மருத்துவர் பரிந்துரைக்கும் ‘கெகல்ஸ் (Kegels) பயிற்சி’யைப்பின்பற்றலாம். இதற்கெனப் பெருநகரங்களில் ‘காஸ்மெட்டிக் கைனகாலஜிஸ்ட்’ மருத்துவர்கள் வாயிலாகச் சிறு அறுவை சிகிச்சையை மேற்கொண்டும் முழு நிவாரணம் பெறலாம். எளிமையான இந்தச் சிகிச்சை வாயிலாக இழந்த நெருக்கத்தையும் உணர்ச்சிகளையும் பெண்ணால் திரும்பப் பெற முடியும்.

மனத்தடைகளை அகற்றுவோம்

கருத்தடை என்பது பெண்ணை மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆணையும் சார்ந்தது. கருத்தடை முறைகள் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் ஆணுக்கும் இருக்கின்றன. பொதுவாகப் பெண்ணுக்கான கருத்தடை முறைகள் அனைத்துமே சிறிதேனும் பக்கவிளைவு கொண்டவை. ஆனால், ஆணுக்கான கருத்தடை முறைகள் எந்தப் பக்க விளைவுமற்றவை. மேலும் அவற்றைப் பின்பற்றுவதும் எளிது. எனவே, மனைவியை நேசிக்கும் ஆண்கள் தங்கள் மனத்தடைகளைக் களைந்துவிட்டு வாசக்டமி போன்ற எளிதான கருத்தடை முறைக்குத் தாமாகவே முன்வர வேண்டும்

Previous articleதந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை – ஆண்களுக்கான அற்புதப் புதையல்
Next articleதிருமணத்துக்கு முன்புவரை அந்தரங்கம் அறியாதவர்களுக்கு