Home சூடான செய்திகள் மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

20

இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் முதலில் செய்ய வேண்டியது முதல் திருமணத்தின் மிச்சம் மீதிகளை செட்டில் செய்வது தான். உங்கள் கணவரைப் பிரிந்து வாழ முடியுமா என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். புதிய வாழ்க்கையில் பழைய நினைவுகள் உறுத்தாமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். மன ரீதியாக முடிவெடுத்துவிட்டீர்களெனில் பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். இப்போது சட்ட ரீதியான, குடும்ப ரீதியான, சமூக ரீதியான பிரிவுகளையும் நிகழ்த்தி விடுங்கள். உங்கள் புதிய வாழ்க்கை “ரொம்பப் புதிதாய்” இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.
“எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்” எனும் சிந்தனையைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். கடந்த திருமண பந்தம் எப்படிச் சென்றது என்பதை மிக மிக அமைதியாக ஆழமாக சிந்தியுங்கள். உங்கள் தரப்பில் என்னென்ன பிழைகள் இருந்தன என்பதை கொஞ்சமும் தயவு தாட்சண்யமில்லாமல், பாரபட்சமில்லாமல் அலசுங்கள். அந்த பிழைகளை அடுத்த முறை செய்யப் போவதில்லை எனும் முடிவை எடுங்கள். இது மிகவும் முக்கியம்.
“என்னம்மா இப்படி ஆயிடுச்சே” என குசலம் விசாரிக்க வரும் பழைய உறவின் சொந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விலக்கி விடுங்கள். நீங்கள் புதைத்துப் போட்டவற்றை தோண்டி எடுத்து வேடிக்கை காட்ட பலரும் விரும்புவார்கள். உங்கள் புதிய வாழ்க்கையின் தோல்வி பழைய உறவுகளுக்கு ரொம்பவே உங்கள் பழைய சிந்தனைகளையும், வலிகளையும் கிளறும் எந்த உறவையும் அனுமதிக்காதீர்கள்.
முதல் திருமணத்தில் நீங்கள் இழந்ததாய் நினைத்ததைப் பெறப் போகும் வாழ்க்கை தான் இரண்டாவது திருமணம். “இருந்ததும் போச்சே” எனும் நிலை வரவே கூடாது என்பதில் கவனம் தேவை. அதற்காக உங்கள் வருங்காலக் கணவரைப் பற்றி முழுமையாய் கொள்ளுங்கள். அவசரம் கூடவே கூடாது. அவருடைய கடந்த காலம், குடும்பம், சூழல், சிந்தனைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது என்று சற்றே சந்தேகம் எழுந்தாலும் விட்டு விடுங்கள். முழுமையான நம்பிக்கை, சந்தேகமற்ற மனம் இரண்டும் மிக மிக முக்கியம்.
உங்களைப் பற்றி உங்கள் வருங்காலக் கணவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருடைய விருப்பங்கள், செயல்கள், எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், உரையாடல் வகைகள், மதம், குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என பலவற்றைக் குறித்த தெளிவும் ரொம்ப அவசியம்.திருமணம் ஏன் தோல்வியடைந்தது. எவையெல்லாம் உங்களைக் காயப்படுத்தும், எவையெல்லாம் உங்களை மகிழ்விக்கும், எவையெல்லாம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்பதையெல்லாம் பேசுங்கள். திருமணத்துக்குப் பின் விரும்பத் தகாத ரகசியங்கள் வெளியாவது குடும்ப உறவைப் பாதிக்கும்.
என்னதான் உலகம் பற்றித் தெரிந்த அறிவுள்ளவராய் இருந்தாலும் ஒரு கவுன்சிலிங் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் சிந்தனைகள் சரிதானா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேனும் இது உதவும். எனவே நல்ல மேரேஜ் கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டு தெளிவு பெறுங்கள். நீங்களும் உங்கள் வருங்காலக் கணவருமாக திருமணத்துக்கு முந்தைய “பிரீ மேரிடல்” கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டால் சூப்பர்.
புதிய திருமணம் செய்து கொண்டால் ஒரு புதிய இடத்துக்குப் போங்கள். புது வீடு, புதிய அக்கம் பக்கம், புதிய சூழல் என அமைவது ரொம்ப நல்லது. பழைய சிந்தனைகளும், கசப்புகளும் உங்களை கலவரப்படுத்தாமல் இருக்க இது உதவும்.
அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள். புதிய பொழுது போக்குகள், புதிய பழக்கங்கள் என உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும் உற்சாகமற்றவராகவோ, குற்ற உணர்வுடையவராகவோ உங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.
சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தால் சிந்தியுங்கள். அவை உங்களால் முடியும் என்றால் ஆனந்தமாய் ஒத்துக் கொள்ளுங்கள். முடியாதவற்றை முடியும் என்று சொல்லி பிரச்சினையில் உழல வேண்டாம்.
10. முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் சிக்கல் இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தைகளின் நலனின் அக்கறை கொள்பவர் கணவராக வருவது முக்கியம். கணவரின் குடும்பத்தினரின் மனநிலையும் இதில் ரொம்ப அவசியம். பழைய குடும்ப வாழ்க்கையில் குழந்தையின் பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம். உங்களுடைய திருமண தேடுதல்கள் குழந்தைகளின் மனநிலையையோ, எதிர்காலத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

11. மறுமணங்களில் உள்ள ஒரு சிக்கல் யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் எழும். குழந்தைகளுக்கா கணவனுக்கா ? மனைவி தனக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமென்பது கணவனின் விருப்பமாய் இருக்கும். பிள்ளைகளோ தங்களுக்கே அம்மா முக்கியத்துவம் தரவேண்டும் என ஆசைப்படுவார்கள். இதில் அழகான பேலன்ஸ் செய்ய முடிந்தால் வாழ்க்கை நலமாகும்.

12. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு இந்த செய்தி எல்லாம் கொஞ்சகாலம் தான். அப்புறம் போரடித்துப் போய் அந்த வாய்களெல்லாம் புதுசாக வேறு அவலை மெல்லக் கிளம்பிவிடும்.

இரண்டாவது திருமணங்களில் மணமுறிவுகள் முதல் திருமணத்தை விட அதிகம் என்கின்றன சர்வதேசப் புள்ளி விவரங்கள். எனவே இரட்டைக் கவனம் ரொம்பவே அவசியம்.