Home பெண்கள் தாய்மை நலம் உங்களுக்கேற்ற சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்க சில அறிவுரைகள்

உங்களுக்கேற்ற சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்க சில அறிவுரைகள்

88

சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பது மிகக் குழப்பமான காரியமாக இருக்கலாம். இது குறித்து நமக்கு பல கேள்விகள் எழும். எந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, பல்வேறு விஷயங்களைப் பொறுத்து அமையும். உங்கள் நலம், உங்கள் வாழ்க்கை முறை, ஆளுமை, உறவின் நிலை, உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் அது சௌகரியமாக உள்ளதா, பால்வினை நோய்களைப் பெறக்கூடிய அபாயம் உள்ளதா, கருத்தடை முறைக்கு ஆகும் செலவு மற்றும் அதன் பலன் போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் காரணிகளாக உள்ளன.

பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன, அவற்றில் சில:

விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுத்துவிடும் முறை
கருமுட்டை வெளியாகும் நாட்களை அறிந்து, பிற நாட்களில் மட்டும் உடலுறவு கொள்ளும் முறை
ஆணுறை
பெண்ணுறை
விந்தணுக்கொல்லிகள்
ஸ்பாஞ்சு
கருத்தடை மாத்திரைகள்
கருத்தடை ஊசி
கருத்தடைப் பட்டை (பேட்ச்)
கருத்தடை வளையம்
கருப்பையில் பொருத்தும் சாதனங்கள் (காப்பர் T போன்றவை)
கருத்தடை உபகரணங்கள்
பெண் கருத்தடை அறுவை சிகிச்சை
ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை
அவசர கருத்தடை முறைகள்
இடைத்தகடு
கருப்பைவாய் மூடி முறை

இவற்றில் சில (ஆணுறைகள் போன்றவை) இந்தியாவில் பரவலாகக் கிடைக்கின்றன, ஆனால் மற்ற சில (ஸ்பாஞ்சு, பெண்ணுறைகள் போன்றவை) ஆன்லைன் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி சில முறைகளை (இடைத்தகடு, கருப்பைவாய் மூடி முறை போன்றவை) இந்தியாவில் மக்கள் பெரிதும் விரும்புவதில்லை.

இப்படி பல்வேறு வழிகள் இருக்கின்றன என்பதால், இவற்றில் சரியானதைத் தேர்வு செய்வது சிரமமான காரியமாக இருக்கலாம். இந்த விஷயத்திலும், எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே தீர்வு இல்லை. உங்கள் வாழ்க்கையின் நிலை மாறும்போது, உங்களுக்கான சரியான கருத்தடை முறையும் மாறக்கூடும்.

பின்வருபவை போன்றவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்:

1. என்னென்ன கருத்தடை முறைகள் உள்ளன? (What are the type of contraceptive methods available?)

என்னென்ன கருத்தடை முறைகள் மற்றும் கருவிகள் கிடைக்கின்றன, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் செயல்படும்.

கருத்தடை அறுவை சிகிச்சை: இவை நிரந்தக் கருத்தடை முறைகளாகும். இதில் ஆண்களின் விந்தணுக் குழாய்க்குள் விந்தணுக்கள் செல்லாதபடி தடுக்கப்படும் (ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை) அல்லது பெண்ணின் கருத்தரிப்புக் குழாயில் (ஃபெல்லோப்பியன் குழாய்) விந்தணுக்கள் செல்லாமல் தடுக்கப்படும் (பெண் கருத்தடை அறுவை சிகிச்சை). உதாரணமாக டியூபல் லிகேஷன் அல்லது டியூபல் இம்ப்ளான்ட் போன்றவை பெண்களுக்கானவை, வாசெக்டமி அறுவை சிகிச்சை ஆண்களுக்கானது.
கருப்பைக்குள் பொருத்தும் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள்: இம்முறையில் மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருப்பைக்குள் சுருள், லூப், முக்கோணம் அல்லது T வடிவத்திலான பிளாஸ்டிக் அல்லது உலோகச் சாதனங்களைச் செருகிப் பொருத்துவார்கள், இவை கரு உண்டாகாமல் தடுக்கும். இவற்றில் சில வெறும் சாதனங்கள், மற்றவை ஹார்மோன்களை வெளியிடக்கூடியவை. காப்பர் IUD (காப்பர் T), ஹார்மோனல் IUS போன்றவை இதற்கான உதாரணங்கள்.
ஹார்மோன் முறைகள்: இந்த முறைகளில், பல்வேறு வழிகளில் உடலில் ஹார்மோன்களைச் செலுத்துவதன் மூலம் கரு உண்டாகாமல் தடுக்கப்படும். கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, கருத்தடை சாதனம் பொருத்துதல், கருத்தடைப் பட்டை (பேட்ச்), கருத்தடை வளையம் போன்றவை இதற்கான உதாரணங்கள்.
தடுப்பு முறைகள்: இவை விந்தணுக்கள் பிறப்புறுப்புக்குள் அல்லது கருப்பைக்குள் நுழையாதவண்ணம் தடுத்து, கரு உண்டாவதைத் தடுக்கும் கருத்தடை முறைகள். ஆணுறைகள், பெண்ணுறைகள், ஸ்பாஞ்சு, இடைத்தகடு, கருப்பைவாய் மூடி போன்றவை இதற்கான உதாரணங்கள்.
இயற்கை கருத்தடை முறை: இம்முறையில் உடலின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை வைத்து, கருமுட்டை வெளியாகும் நாட்களைக் கண்டறிந்துகொண்டு, இந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் அல்லது இந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடும்போது அதிக கருத்தடைப் பாதுகாப்பைப் பயன்படுத்த வேண்டும். நாள்காட்டி முறை (ரிதம் முறை), உடலின் ஓய்வுநிலை வெப்பநிலை (பேசல் டெம்பரேச்சர்), கருப்பைவாய்ப் பகுதி சலிப்படலம் போன்றவற்றை வைத்து இந்த நாட்களைக் கண்டறியலாம்.
2. இந்த முறைகள் எந்த அளவிற்குப் பலனளிக்கும்? (How effective are these methods?)

இந்த முறைகள் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கருத்தடை முறை எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதை சதவீதத்தில் குறிப்பிடுகிறோம். உதாரணமாக, ஒரு கருத்தடை முறை 98% பலனளிக்கக்கூடியது என்று கூறினால், இந்த முறையை 100 பேர் ஓராண்டுக்குப் பயன்படுத்தினால் அதில் இரண்டு பெண்கள் (அதையும் மீறி) கர்ப்படைவார்கள் என்று பொருள்.

ஒரு கருத்தடை முறை நல்லபடியாகப் பலனளிக்க வேண்டுமெனில், அதனை சரியான முறையிலும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, எந்த முறையைப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஈடுபாடு மிகக் குறைவாக உள்ளதோ (உதாரணமாக IUD முறைகள், கருத்தடை சாதனம் பொருத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை போன்றவை), இந்த முறைகளில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அதாவது இவற்றை மருத்துவர் பொருத்திவிடுவதால், இவர்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை, ஆனால் மற்ற முறைகளில் அவர்களே கருத்தடை முறையைப் பயன்படுத்த வேண்டும், அதில் ஏதேனும் தவறுகள் நடக்கலாம். அதே சமயம், கருத்தரிப்புக்கு வாய்ப்புள்ள (கருமுட்டை வெளியிடப்படும்) நாட்களைத் தீவிரமாகக் கண்காணித்து அந்நாட்களில் மட்டும் உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும் முறையும் மிகுந்த பலனளிக்கிறது.

3. மீண்டும், குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தால், அது சாத்தியமா? (Is the method reversible?)

கருத்தடை முறையைத் தேர்வு செய்யும் முன்பு, குழந்தை பெறுவது குறித்த உங்கள் இலட்சியம் என்ன என்பதில் நீங்கள் மிகத் திட்டவட்டமாக இருக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், எளிதில் கைவிடக்கூடிய முறைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தியதும், கூடிய விரைவில் நீங்கள் மீண்டும் கருவுறத் தயாராக வேண்டும். இதற்கு தடுப்பு முறைகள் அல்லது கருத்தடை மாத்திரைகள் மிக ஏற்றவை.
ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரை, கருத்தடை வளையம் அல்லது கருத்தடைப் பட்டை போன்ற கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவதை ஒரு பெண் நிறுத்தியதும், ஒரு மாதத்திற்குள்ளேயே அந்தப் பெண் மீண்டும் கருவுறத் தயாராகிவிடுவார்.
இதுவே அவர் கருத்தடை ஊசியைப் பயன்படுத்தியிருந்தால், மீண்டும் அவர் கருவுறத் தயாராக எட்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம்.
மீண்டும் கர்ப்படமைய வேண்டும், ஆனால் சீக்கிரமே கருவுற வேண்டும் என்கிற அவசியமில்லை என்றபட்சத்தில், நீங்கள் IUD போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம், இவற்றைப் பயன்படுத்தினால், விரைவில் மீண்டும் கருவுறத் தயாராக முடியும்.
உங்கள் குடும்பத் திட்டம் நிறைவுற்றது, இனி உங்களுக்குக் குழந்தைகள் நிச்சயமாக வேண்டாம் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், நீங்கள் கருத்தடை அறுவை சிகிச்சைகள் போன்ற நிரந்த முறைகளைத் தேர்வு செய்யலாம்.

4. கருத்தடை முறையைப் பயன்படுத்துவது உங்கள் தினசரி செயல்பாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டுமா? (Whether you want to include contraception into your daily routine?)

நீங்கள் உங்கள் தினசரி செயல்பாடுகள் அனைத்தையும் முறையாகவும் மறக்காமலும் செய்வீர்கள் என்றால், உங்களுக்கு பல கருத்தடை முறைகள் பொருந்தலாம். உங்கள் சௌகரியத்தைப் பொறுத்து, உடலுறவின்போது மட்டும் பயன்படுத்தும் முறையைத் (உதாரணம்: ஆணுறை) தேர்வு செய்யலாம்; அல்லது தினமும் நீங்கள் பயன்படுத்த வேண்டிய (உதாரணம்: மாத்திரைகள்) முறையைப் பயன்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் தினமும் அல்லது உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியிருக்கக்கூடாது என்று நினைத்தால், கருத்தடைப் பட்டை, ஊசி அல்லது இம்ப்ளான்ட் போன்ற பிற முறைகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.

ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியவை: IUD மற்றும் IUS
அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியவை: பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள்
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியவை: கருத்தடை ஊசி
மாதாமாதம் மாற்ற வேண்டியவை: கருத்தடை வளையம்
வார வாரம் மாற்ற வேண்டியவை: கருத்தடைப் பட்டைகள்
தினமும் பயன்படுத்தக்கூடியவை: கருத்தடை மாத்திரைகள் (ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரை அல்லது புரோஜெஸ்ட்ரான் மட்டுமுள்ள மாத்திரை)
உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தக்கூடியவை: ஆணுறைகள், பெண்ணுறைகள், இடைத்தகடு, கருப்பைவாய் மூடி
5. பெண்ணுறுப்பில் கருத்தடைச் சாதனம் செருகிக்கொள்வது உங்களுக்கு சௌகரியமாக இருக்குமா? (Are you comfortable introducing a contraceptive into the vagina?)

உங்கள் பிறப்புறுப்பில் கருத்தடைச் சாதனம் செருகப்படுவது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்றால், பெண்ணுறைகள், இடைத்தகடு, கருப்பைவாய் மூடி, கருத்தடை வளையம் போன்றவை உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
நீண்ட காலம் கருத்தடை வேண்டுமெனில், உங்களுக்காக மருத்துவர் உங்கள் பிறப்புறுப்பின் வழியாக கருப்பையில் கருத்தடைச் சாதனத்தைச் செருக்கும் முறை உங்களுக்கு சௌகரியம் எனில், நீங்கள் IUD, IUS போன்ற முறைகளைத் தேர்வு செய்யலாம்.

6. நீங்கள் ஹார்மோன் முறைகளைப் பயன்படுத்த முடியாது என்றபட்சத்தில் என்ன செய்ய வேண்டும்? (What if you cannot use hormonal methods?)

சில கருத்தடை முறைகளில் ஹார்மோன்கள் இருக்கும் (ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன்) இவை பெண்ணின் உடலில் இயற்கையாக உருவாகும் ஹார்மொன்களைப் போன்றவையே. மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு இவ்வகை ஹார்மோன்கள் ஏற்றதல்ல. இத்தகைய பெண்கள் ஆணுறைகள்/பெண்ணுறைகள் அல்லது IUD போன்ற ஹார்மோன்களற்ற முறைகளை முயற்சி செய்யலாம்.

35க்கு அதிகமான வயதுள்ள, புகைபிடிப்பவர்களுக்கும், அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும், சில குறிப்பிட்ட மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் அல்லது அவுரா என்ற பார்வைப் பிரச்சனையுடன் ஒற்றைத் தலைவலியும் இருப்பவர்கள், இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றோர் ஈஸ்ட்ரோஜென் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

7. கருத்தடை மருந்துகளுடன் குறுக்கிடக்கூடிய ஏதேனும் பிற மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா? (Are you taking other medications which can interfere with your contraceptives?)

சில கருத்தடை முறைகள் (கருத்தடை மாத்திரைகள் போன்றவை) நீங்கள் எடுக்கும் மற்ற மருந்துகளால் பாதிக்கப்படலாம். ஆணுறைகளைப் பயன்படுத்தும் தடுப்பு முறைகள், IUD, IUS, கருத்தடை ஊசி போன்ற சில முறைகள் மற்ற எந்த மருந்துகளாலும் பாதிக்கப்படாது.

8. நீங்கள் புகைபிடிப்பவரா? (Are you a smoker?)

புகைபிடிப்பவர்களுக்கும் இவற்றில் பெரும்பாலான முறைகள் பலனளிக்கும். 35 வயதுக்கும் அதிகமான, புகைபிடிக்கும் பெண்களுக்கு சில கருத்தடை முறைகள் நல்லதல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது. உதாரணமாக ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகள், கருத்தடைப் பட்டைகள், கருத்தடை வளையம் போன்றவை. இவர்கள் IUD, IUS, கருத்தடை சாதனங்கள் பொருத்துதல், கருத்தடை ஊசி, புரோஜெஸ்ட்ரோன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகள் போன்ற பிற முறைகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

9. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவரா? (Are you overweight?)

பெரும்பாலான கருத்தடை முறைகள், உடல் எடையால் பாதிக்கப்படுபவையல்ல. அவை உடல் எடையை அதிகரிப்பதுமில்லை. இருப்பினும், கருத்தடை ஊசிகள் சிறிதளவு உடல் எடையை அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

10. உங்கள் மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் பரவாயில்லையா? (Are you okay with your periods changing?)

சில கருத்தடை முறைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கலாம். அவற்றில் சில, உங்கள் மாதவிடாய் அதிக இடைவெளியில் வர வழிவகுக்கலாம், குறைவான இரத்தப்போக்குக்கும் வழிவகுக்கலாம். இன்னும் சில முறைகள், உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீரற்றதாக்கலாம் அல்லது இரத்தப்போக்கை அதிகமாக்கலாம். கருத்தடை மாத்திரைகள், கருத்தடைப் பட்டைகள், கருத்தடை ஊசிகள், IUS, கருத்தடை வளையம் போன்ற கருத்தடை முறைகள் மாதவிடாய் இரத்தப்போக்கைக் குறைக்கும், இயல்பாக அதிக இரத்தப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு இவை கொஞ்சம் நன்மையளிப்பவையாக இருக்கலாம்.

11. மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் (Religious beliefs and cultural practices)

சில மதங்களிலும் கலாச்சாரங்களிலும் சில கருத்தடை முறைகள் தவறானவை என்று கருதப்படுகின்றன. நீங்கள் எந்தக் கருத்தடை முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உங்கள் மத மற்றும் கலாச்சார நம்பிக்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கலாம்.

12. கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவதன் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of the contraceptives?)

இயற்கை முறைக் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முறைகள் போன்ற கருத்தடை முறைகளால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை, அல்லது அவற்றின் பக்க விளைவுகள் மிகவும் குறைவானவை. ஹார்மோன் முறைகள் போன்ற சில முறைகளில் அதிக பக்க விளைவுகள் இருக்கலாம், அவற்றில் சில தீவிரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் பற்றியும், நீங்கள் தேர்வு செய்யும் கருத்தடை முறைகளால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடுமா என்பது பற்றியும் உங்கள் மருத்துவரிடம் பேசவும்.

13. பால்வினை நோய்கள் வராமல் பாதுகாத்தல் (Protection against sexually transmitted diseases?)

பால்வினை நோய்கள் வராமல் பாதுகாப்பதில், கருத்தடை உறைகள் (ஆணுறைகள், பெண்ணுறைகள் இரண்டும்) நம்பகமானவையாக இருப்பதாகத் தெரிகின்றன. நீங்கள் இருவருமே, வேறு எவரிடமும் உடலுறவில் ஈடுபடாதவர்கள், இருவருக்குமே பால்வினை நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று சோதனை செய்து கண்டறிந்துவிட்டீர்கள் எனில், மற்ற எந்தக் கருத்தடை முறையும் உங்களுக்கு ஏற்றதாகவே இருக்கும். ஆனால், நீங்கள் ஒருவருடன் மட்டுமே உடலுறவில் ஈடுபடுபவரல்ல, உங்களுக்கோ உங்கள் துணைவருக்கோ பால்வினை நோய்கள் எதுவும் இல்லை என்று நிச்சயமாகத் தெரியவில்லை என்றபட்சத்தில் நீங்கள் எந்தக் கருத்தடை முறையைப் பயன்படுத்தினாலும், அதனுடன் சேர்த்து கருத்தடை உறைகளையும் பயன்படுத்துவது நல்லது.

14. நீங்கள் தேர்வு செய்யும் கருத்தடை முறை இருவருக்கும் சம்மதமா? (Acceptability by your sexual partner?)

நீங்கள் எந்தக் கருத்தடை முறைகளை விரும்புகிறீர்கள் என்பது குறித்து இருவரும் பேசி, ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும். சில சமயம், நீங்கள் தேர்வு செய்யும் முறையில் உங்கள் துணைவருக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம், அவர் வேறெரு முறையை விரும்பலாம். உதாரணமாக இருவரில் ஒருவருக்கு, ஆணுறையால் உடலுறவில் இன்பம் குறைகிறது என்று தோன்றலாம், உடலுறவின் இன்பத்தில் குறுக்கிடாத வேறு முறைகள் வேண்டுமென்று அவர் விரும்பலாம்.

15. செலவு (Cost)

சில கருத்தடை முறைகள் மிகவும் மலிவானவையாக இருக்கும், இன்னும் சில முறைகளைப் பயன்படுத்த அதிக செலவு செய்ய வேண்டியிருக்கலாம். உதாரணமாக தற்போதைய விலை நிலவரப்படி, 10 ஆணுறைகளைக் கொண்ட பேக் ஒன்று இந்திய ரூபாயில் 10 ரூபாய்க்குக் கிடைக்கிறது, 3 பெண்ணுறைகளைக் கொண்ட பேக்கின் விலை சுமார் 150 ரூபாயாக உள்ளது. ஏதேனும் ஒரு கருத்தடை முறையைத் தேர்வு செய்யும் முன்பு, அதற்கு ஆகும் செலவைக் குறித்தும் யோசித்துக்கொள்ள வேண்டும்.