Home உறவு-காதல் கணவன் மனைவி உறவு விவாகரத்தில் முடிய காரணங்கள்

கணவன் மனைவி உறவு விவாகரத்தில் முடிய காரணங்கள்

110

கணவன் மனைவி உறவு:திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.

கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.

கணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.

ஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.

முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது.

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்.