Home ஆரோக்கியம் இதயம் & இரத்தம் வலது பக்கத்தில் இதயம் இருந்தாலும் ஆபத்தில்லை

வலது பக்கத்தில் இதயம் இருந்தாலும் ஆபத்தில்லை

22

மனிதர்களுக்கு இடதுபக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கத்தில் மாறி அமையும் அதிசயம் கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும். இதுபோல் வலதுபக்கத்தில் இதயம் மாறி அமைந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் உள்ள உறுப்புகளில் இதயத்தின் பங்கு முக்கியமானது. உடலுக்கு தேவையான நல்ல ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் முக்கிய பணி இதனுடையது. ரத்தத்தை சுத்திகரித்து அசுத்தங்களை கழிவுப் பகுதிக்கு அனுப்பிவிடும். உறங்கும் போது மூளை உள்பட மற்ற உறுப்புகள்கூட சில மணிநேரங்கள் ஓய்வு எடுக்கும். ஆனால் இதயத்துக்கு ஓய்வு கிடையாது. 24 மணிநேரமும் ஒய்வின்றி இதன் பணி இருக்கும். அந்த அளவுக்கு இதயம் முக்கிய உறுப்பாக உள்ளது.

வலதுபக்கத்தில் இதயம்

இதயமானது மனிதனுக்கு இடது பக்கம்தான் இருக்கும். இதுதான் படைப்பு. ஆனால் சென்னையைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுக்கு வலது பக்கம் இதயம் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு வலதுபுறம் இருக்க வேண்டிய கல்லீரல் குடல் போன்ற பாகங்கள் இடதுபக்கமாகவும், இடதுபுறம் இருக்கவேண்டிய உறுப்புகள் வலது புறமாகவும் மாறி இருக்கிறது.

இவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர்.

உயிருக்கு ஆபத்தில்லை

கடந்த 6 மாதமாக இந்திராவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி, மயக்கம், சோர்வு ஏற்பட்டது. கடந்த 25-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் உள்ளிட்ட பாகங்கள் வலது பக்கத்திலும், வலது பக்கம் இருக்க வேண்டிய கல்லீரல், குடல் உள்ளிட்ட பாகங்கள் இடது பக்கத்திலும் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து குணம் அடைந்த இந்திரா தற்போது பூரண குணத்துடன் உள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

கோடியில் ஒருவருக்கு இதேபோல் வலது பக்கத்தில் உறுப்புகள் மாறி இருக்கும் இதனால் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.