Home அந்தரங்கம் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது என்பது, இருவரின் சம்மதம், விருப்பம் சம்பந்தப்பட்டது.

திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது என்பது, இருவரின் சம்மதம், விருப்பம் சம்பந்தப்பட்டது.

38

சமூகத்தில், உடலுறவு என்னும் அனுபவத்தைப் பெற ஒருவர் திருமணம் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்பது தவறு, ஒழுக்கக் கேடு என்ற மதிப்பீடு நிலவுகிறது. இது நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. ஆனாலும், இரகசியமாக இது நடக்காமல் இல்லை. மக்கள் சந்தோஷம் அனுபவிக்காமல் இல்லை! இன்றைய இளைஞர்கள், மாடர்ன், டிரெடிஷன் என்ற இரு வார்த்தைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2015இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 51% இளைஞர்கள், திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது இருக்கிறது என்று ஒப்புக்கொண்டனர். அதில் 63% பேர் தங்களுக்கு வரப்போகும் துணை கன்னி கழியாதவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினர்.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு எந்த அளவில் இருக்கிறது, எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பவை சமூக-பொருளாதார பின்புலங்கள், காலகட்டம், புவியியல் இருப்பிடம், கல்வி நிலை, வயது போன்ற பல விஷயங்களைப் பொறுத்து மாறுபடும்.

போதைப்பொருள் உபயோகம்: போதைப்பொருள் அல்லது மது போன்ற பழக்கங்கள் இருப்பவர்களுக்கு, தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் மழுங்கியிருக்கலாம். இதனால் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது குறித்த முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.
உளவியல் சிக்கல்கள் – நிலையற்ற குடும்பச் சூழலில் இருந்து வரும் பதின்ம வயதுப் பிள்ளைகள் இயல்பில் கலகக் குணமுடையவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் மூத்தவர்களை எரிச்சல் படுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்பும் செயல்களில் ஈடுபடுவார்கள். பல குடும்பங்களில், பெற்றோர் குழந்தைகளின் மேல் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றனர். இதுபோன்ற குடும்பத்தைச் சேர்ந்த இளம் வயதுப் பிள்ளைகள் இதுபோன்ற கலகத்தனமான செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.
பாலியல் கல்வியின்மை – நமது நாட்டில் பாலியல் கல்வி இப்போதுதான் தொடக்க நிலையில் உள்ளது. குழந்தைகளுடன் பாலியல் பற்றிப் பேசுவதும் பெற்றோர்களுக்கு இன்றும் சங்கடமான, தயக்கமான விஷயமாகவே உள்ளது. பெரும்பாலான பெற்றோர் இதைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவதையே தவிர்த்துவிடுகின்றனர். இதனால் திருமணத்திற்கு முன்பே, பாலியல் பற்றி போதுமான புரிதலும் விவரமும் இல்லாமலே, பாதுகாப்பு முறைகள் பற்றியும் தெரியாமலே, இரகசியமாக பாலுறவில் ஈடுபடும் ஆவல் இளம் வயதினருக்கு அதிகமாகிறது.

பிறரால் உந்தப்படுதல்: பதின்ம வயதுப் பிள்ளைகளின் ஆண் அல்லது பெண் நண்பர்கள் உணர்ச்சிரீதியாக மிரட்டுவதால் பாதிக்கப்படுவது அதிகம் நடக்கிறது.
திருமணம் தாமதமாவது: இளைஞர்கள் முதலில் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதால், திருமணத்திற்கான தகுந்த வயது என்ற வரையறை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், அது வரை அவர்கள் உயிரியல் தேவையான பாலுறவுத் திருப்தியை அவர்கள் அடைவதைத் தடுக்க முடியாது. இப்போது பாலுறவு அனுபவத்தைப் பெறுவதற்கு திருமணமாகி இருக்க வேண்டும் என்றில்லையே!
தொழில் நுட்ப வளர்ச்சி: திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது பற்றி முடிவெடுப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சி நேரடியாக தொடர்புடையதல்ல, ஆனால் அதில் சம்மதமுள்ள நபர்கள் அதனை அடைய தொழில்நுப்ட அம்சங்கள் உதவுகின்றன.

பலவந்த பாலுறவு: பல இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே பலவந்தமாக பாலியல் உறவைச் சந்திக்க நேரும் நிலையும் உள்ளது. உறவினர்களால் தகாத பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதாகவோ அல்லது தெரியாத நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவோ இருக்கலாம்.
திருமணத்திற்கு முன்பு இருவருக்கும் சம்மதமிருந்து, இதன் விளைவுகள் பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்திருந்து, பாதுகாப்பான சூழலில் உடலுறவு கொள்வது என்று முடிவு செய்தால், அது அவரவர் சொந்த விருப்பம். ஆனால் இதை ஏதோ ஒரு சாகசம் போல் கருதி அவசரகதியிலோ, கட்டுப்படுத்த முடியாததால் விபத்துபோல் பாலுறவு நடந்தேறினால், அது அவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கக்கூடும்.

பால்வினை நோய்கள் பரவும் ஆபத்து: திருமணத்திற்கு முன்பு பாலுறவில் ஈடுபடுவதில் உள்ள ஒரு முக்கிய ஆபத்து பால்வினை நோய்களாகும். குறிப்பாக ஒருவர் பலருடன் உடலுறவில் ஈடுபடுபவராக இருந்தால், எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் தோற்றும் வாய்ப்பு அதிகம். சில இளைஞர்கள் பாலியல் தொழிலாளர்கள் மூலம் பாலியல் சந்தோஷத்தைப் பெற முடிவு செய்கின்றனர், பெரும்பாலும் சுகாதாரமற்ற சூழலிலே இது நடக்கிறது.

எதிர்பாராத கர்ப்பம்: பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டு இளம்பருவத்தினர் பலர் எதிர்பாராமல் கர்ப்பமடைகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். எதிர்காலத் திட்டங்களை அழித்துவிடலாம். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது ஒழுக்கக்கேடு, அவமானம் என்பது போன்ற சமூகப் பார்வைகளால், இப்படி ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானால் சமூகத்தில் அதை எதிர்கொள்ளும் துணிச்சலோ தெளிவோ பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. குறைந்த வயதில் கர்ப்பமாவது அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகலாம். அதுமட்டுமின்றி, மனதளவிலும் மாறாத காயங்களை ஏற்படுத்தலாம். வீட்டில் கூறினால் என்ன ஆகுமோ, என்ன செய்வார்களோ என்று பயந்து சில இளம் பெண்கள், தாங்களாகவே முடிவெடுத்து ஏதேனும் செய்யப்போய், அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாவதும் உண்டு.

மன அதிர்ச்சி: திருமணத்திற்கு முன்பு, ஒருவருடனோ, பலருடனோ,பாதுகாப்பான உடலுறவாக இருந்தாலும் பாதுகாப்பற்றதாக இருந்தாலும், அது பல்வேறு பிரச்சனைகள் உண்டாக்கும் ஆபத்துள்ளது. உடலில் ஏற்படும் காயங்கள் சீக்கிரம் ஆறிவிடக்கூடும். ஆனால், மன இறுக்கம், மனக் கலக்கம், மன அழுத்தம் போன்ற மனப் பிரச்சனைகள் ஒருவரை படாதபாடு படுத்தி, தற்கொலை வரை கூட இட்டுச்செல்லக்கூடும். இந்தியாவில், 14 முதல் 30 வயதுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் ஆபத்து அதிகமுள்ளது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தவறு செய்துவிட்டோம், குடும்பத்தின் மரியாதைக்கு களங்கம் விளைவித்து விட்டோம் என்பது போன்ற கடும் குற்றவுணர்ச்சிகளால் பல இளம் வயதுப் பெண்கள் தற்கொலை கூட செய்துகொள்கின்றனர். அப்படியே அவர்களைக் காப்பாற்றிவிட்டாலும், அந்தப் பழி அவர்களை வாழ்க்கை முழுதும் விடாமல் கூட வரும். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவர்கள் எளிதில் மீண்டுவிட முடியாது.
கற்பு எனும் எதிர்பார்ப்பு: இந்த சமூகத்தில் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு அனுபவத்தை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வரும் மனைவி மட்டும் கற்புள்ளவராக, அதாவது உடலுறவு அனுபவம் இதுவரை இல்லாதவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காதலனின் வற்புறுத்தல், எதிர்பார்ப்புக்கு இணங்கும் பெண்களை கட்டுப்பாடற்றவர்கள் என்று கூறும் இந்த சமூகம், அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. குற்றவுணர்ச்சியை சமாளிக்க வழிதெரியாத, மனபலமற்ற பெண்கள் கடைசியில் அந்த முடிவுக்கும் செல்கின்றனர். ஆண்களுக்கும், இது பிரச்சனைதான். காதலியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பிறகு, பெற்றோரின் வற்புறுத்தலால் வேறொருவரை மணந்துகொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போது காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் காதலன்களும் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது என்பது, அந்த இருவரின் சம்மதம், விருப்பம் சம்பந்தப்பட்டது. அவர்களுக்குள் புரிதலும், மரியாதையும், பின்விளைவுகள் பற்றிய தெளிவும், துணிச்சலும் இருக்கும்பட்சத்தில் அது அவர்களின் விருப்பம். இப்போது, பாதுகாப்பான உடலுறவு என்பதைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் பொறுப்பாகும். அது இப்போது மிக அவசியமும் ஆகும். பிள்ளைகள், பதின்ம வயதை அடைந்ததும், எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் தயக்கமின்றி நம்மிடம் கூற வேண்டும், அந்த அளவுக்கு அவர்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும்.

Previous articleஆண் பெண்கள் தொடர்பான பாலியல் முடிவுகள் எடுப்பது எப்படி?
Next articleபெண்கள் இயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியத்தை மேற்கொள்ளலாம்.