Home குழந்தை நலம் குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்

குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில்

30

குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அடங்கிய பிஸ்கட், நூடுல்ஸ், வெள்ளை பிரெட், வெள்ளை அரிசி மற்றும் எல்லா பேக்கரி தயாரிப்புகளையும் சிறிதளவு தான் கொடுக்கவேண்டும்.

அதிக அளவில் புரதம் குழந்தைகளுக்குத் தேவை. பருப்புகள், பயறு வகைகள், பசும் பால் மற்றும் பால் தயாரிப்புப் பொருள்களைக் கொடுக்கலாம்.

குழந்தையின் வயது மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப, தினமும் 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.

அந்தந்த சீஸனில் விளையும் பழங்கள் இரண்டு அல்லது மூன்று, கலர்ஃபுல்லான காய்கறிகள் இரண்டு கப் குழந்தையின் தினசரி உணவில் இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவைதான் குழந்தைக்கு வைட்டமின், தாது உப்புகள் மற்றும் நார்ச் சத்தை அளிக்கின்றன.

பிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில் :

தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவையாவது, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும்.

குழந்தைகளின் எதிரே, உணவு மீதான விருப்பு வெறுப்புகளைக் காட்டாதீர்கள்.

காபி / டீ அல்லது ஆரோக்கியத்துக்காக விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் எதையும் மருத்துவர் / ஊட்டச் சத்து நிபுணர் பரிந்துரை இன்றி குழந்தைக்குப் பழக்கப்படுத்தாதீர்கள்.

சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம். இதனால், வயிற்றுக்குத் தேவைப்படும் சரியான அளவு சாப்பிட முடிவதோடு, நன்கு செரிமானமும் ஆகும்.

பிரார்த்தனை செய்துவிட்டுச் சாப்பிடுவது, உணவை நமக்காகப் பயிர் செய்யும் விவசாயி முதல், அனைவரையும் ஒரு நொடி நினைத்துவிட்டுச் சாப்பிடுவது… இவை எல்லாமே குழந்தையிலேயே பழக்கவேண்டியவை.

குழந்தைகள் ஓரளவு வளர்ந்ததும், சமையலில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுத்துவது நல்லது. ஏனெனில் அம்மாக்களும் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில், தானே சமைத்துச் சாப்பிடப் பழகிக்கொள்வது, அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பிறரைச் சார்ந்திருக்கவும் வேண்டியதில்லை.