Home ஆரோக்கியம் பெண்களை பாதிக்கும் பித்தப்பை கற்கள்

பெண்களை பாதிக்கும் பித்தப்பை கற்கள்

101

நீங்கள் நடுத்தர வயதுடைய பெண்மணியா? உங்கள் வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான வலி இருக்கின்றதா? அப்படி இருக்குமாயின் உங்கள் பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கலாம்.

அந்த வகையில், நடுத்தர வயது பெண்களில் ஏற்படும் பித்தப்பை அலர்ச்சி, அல்லது பித்தப்பை கற்கள் தொடர்பிலான சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

பித்தப்பையானது ஈரலுக்கு அடியில் பித்தத்தை சேமிப்பதற்காக அமைந்திருக்கும் பை போன்ற ஒரு அமைப்பாகும். பித்தப்பையில் சுரக்கும் பித்தத்தின் செரிமானம் அதிகரிக்கும் போது, அவை கட்டித் தன்மையாகி பின்னாட்களில் கல்லாக உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் பித்தக்கற்களால் எமது உடலுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிறிய அளவில் இருக்குமாயின் அவை பித்தக் குழாய்களின் வழியாக உணவு சமிபாட்டுத்தொகுதியை சென்றடைந்து, உணவு கால்வாயினூடாக தானாக வெளியேறிவிடும். ஆனால் அவை அளவில் பெரிதாக இருக்கும் பட்சத்தில் பித்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி பித்தப்பையை வீங்கச் செய்கின்றது. இவ்வாறு பித்தப்பை வீங்குவதால் வயிற்றின் வலது பக்கத்தின் மேற்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படுகின்றது.

அத்துடன் பித்தப்பையில் அலர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இதனால் வயிற்று வலி மிகவும் அதிகரிப்பதுடன் சாப்பிட முடியாமலும் போய் விடும். அத்துடன் வாந்தி எடுத்தல், காய்ச்சல் ஏற்படுதல், சிறுநீர் கழித்தலில் தடை ஏற்படுதல் போன்ற பல்வேறு உடலியல் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியேற்படுகின்றது.

இவ்வாறன சந்தர்ப்பங்களில் நோயாளர்களை உடனடியாக வைத்தியரிடம் காட்டி பரிசோதிப்பதுடன், அவரின் ஆலோசனையின் படி செயற்படுவதும் கட்டாயமானதாகும். அதன்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், தேவையேற்படுமாயின் சிகிச்சையை மேற்கொண்டு பித்தப்பையின் கற்களை உடனடியாக அகற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.

இந்நோய் பெரும்பாலும் 40 தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், அதிகமான எடையை கொண்ட பெண்களுக்கும் தான் அதிகம் ஏற்படுகின்றது (சில ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது). எனவே உங்களுக்கும் வயிற்றின் வலது பக்க மேல் பகுதியில் தொடர்ச்சியாக தாங்க முடியாத வயிற்று வலி இருக்குமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடி உங்கள் பித்தப்பையில் கற்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவ்வாறு கற்கள் இருக்குமாயின் உடனடியாக அதற்கான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.