Home பெண்கள் தாய்மை நலம் பெண்களுக்கு சுகப் பிரசவம் எப்படி உண்டாகிறது தெரியுமா?

பெண்களுக்கு சுகப் பிரசவம் எப்படி உண்டாகிறது தெரியுமா?

110

தாய் நலன்:சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்ட இந்நாட்களில், சுகப் பிரசவத்தின் மூலம் அடையும் ஆரோக்கியத்தைத் தாய்மார்கள் இன்று பெரிதும் இழந்துவிட்டனர். சுகப் பிரசவம் ஆவதற்கான வழி முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?

கருவுற்ற தாய் சாப்பிடும் உணவிலிருந்து பிரியும் சத்தான பகுதி மூன்றுவிதமாகப் பிரிக்கப்பட்டு ஒரு பாகம் தாயைப் போஷிப்பதற்கும் மற்றொரு பாகம் கர்ப்பம் வளர்ச்சியடைவதற்கும், இன்னொரு பாகம், தாய்ப் பாலை வளர்க்கவும் உபயோகப்படுகிறது. மேலும் கர்ப்பத்தின் இதயம் தாயாரின் தாதுக்களின் அம்சத்தாலுண்டாக்கப்பட்டு தாயாரின் இதயத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால் கர்ப்பத்தின் விருப்பங்கள் தாயாரின் மூலமாகப் பிரதிபலிக்கின்றன. கர்ப்பிணிக்குத் தனது இதயமொன்றும், கர்ப்பத்தின் இதயமொன்றுமாக இரு இதயங்களிருப்பதால் அவளுக்கு “தெஹ்ருதிநீ’ என்று பெயர். கர்ப்பிணிக்கு ஏதேனும் ஒரு பொருளின் மீது ஆசையேற்பட்டால் அது கர்ப்பத்தின் இச்சையென்று அறிந்து அவளுக்கு அதைக் கொடுத்தல் வேண்டும். கர்ப்பிணிக்கு ஏற்படும் இச்சையைத் தடுப்பதால், பிறக்கும் குழந்தை, கூனாகவோ, முடமாகவோ, குள்ளனாகவோ, குருடனாகவோ, முட்டாளாகவோ பிறக்கும். கர்ப்பத்தின் நாபியிலிணைக்கப்பட்டிருக்கும் தொப்புள் கொடி மூலமாகவே உணவின் சத்தும் வீர்யமும், வயல்களுக்குப் பாய்ச்சப்படும் வாய்க்கால் நீர் போலக் கர்ப்பத்தையடைகின்றன.
கருவுற்ற முதல் மாதம் முதலே உண்ண வேண்டிய உணவுமுறைகளையும், செய்யக் கூடாத காரியங்களையும் ஆயுர்வேதம் கூறுகிறது. அவற்றைச் சரியானபடி செய்து வந்தாலே சுகப் பிரசவம் உண்டாகும்.
அவை –

முதல் மாதம்:
இனிப்பு, குளிர்ச்சி, திரவம் இவை அதிகமாக உள்ள உணவும், வேண்டிய அளவு குளிர்ந்த பாலும் சாப்பிட வேண்டும்.

2 ஆவது மாதம்:
பழக்கமுள்ள உணவை, அதிமதுரம், திராட்சை முதலிய இனிப்பான சரக்குகள் சேர்த்துக் காய்ச்சிய பாலுடன் உபயோகிக்கவும்.
3 ஆவது மாதம்:
சம்பா அரிசியினாலான அன்னத்தைப் பாலுடனோ அல்லது தேன், நெய் முதலியவை கலந்த பாலுடனோ உட்கொள்ளச் செய்யவும்.
4 ஆவது மாதம்:
பாலுடனும், வெண்ணெயுடனும் சேர்த்த உணவையோ அல்லது ஆட்டு மாமிசத்துடன் இதமான உணவைச் சாப்பிடலாம். தினந்தோறும் பசுவெண்ணெய் கொட்டைப் பாக்களவு கொடுக்கவும்.
5 ஆவது மாதம்:
பாலும், நெய்யும் கலந்த ஆகாரம் அதிகமாக உபயோகிக்கவும்.
6 ஆவது மாதம் :
நெருஞ்சில் சேர்த்துக் காய்ச்சிய நெய்யை அளவாகச் சாப்பிட்டு வரவும். சாதத்தைக் கூழாக்கிச் சாப்பிடுதல் நல்லது.
7 ஆவது மாதம்:
மார்பிலேற்படும் அரிப்புக்கு இலந்தைக் கஷாயத்துடன் அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய நெய்யை உள்ளங்கையளவு உள்ளுக்குச் சாப்பிட்டு, வெளிப் பிரயோகத்துக்குச் சந்தனம், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைப் பூசவும். அரளி இலை போட்டுக் காய்ச்சிய எண்ணெய் தடவலாம். அரிப்பு ஏற்பட்டால், சொரியக் கூடாது. தாங்க முடியாவிடில் மெதுவாகத் தடவிக் கொடுக்கலாம். ஓரிலை என்னும் மருந்துச் சரங்கைப் போட்டுக் காய்ச்சிய இனிப்புடன் கூடிய உணவு வகைகளைச் சிறிது உப்பு, நெய் சேர்த்து, மிதமாகச் சாப்பிட்டு, சிறிது தண்ணீரைப் பருகவும்.
8 ஆவது மாதம்:
நெய்விட்ட பால் கஞ்சியைப் பருகவும்.
9 ஆவது மாதம்:
அதிமதுரம் முதலிய இனிப்புத் திரவியங்கள் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெய்யால் எனிமா கொடுக்கவும். அதையே பஞ்சில் தோய்த்து பிறப்புறுப்பில் வைக்கவும். இதனால் வயிறு, இடுப்பு, பக்கம், முதுகு, முதலான இடங்கள் மிருதுவாகி, வாதம் கீழ்நோக்குவதோடு, மலம்,சிறுநீர் அவற்றின் நிலைமைகளிலிருந்து வருவதால், கர்ப்பமும் சரியானபடி புஷ்டியடைந்து சுகப் பிரசவமுண்டாகிறது. பிறந்த குழந்தைக்குப் பால் எவ்வாறு அவசியமோ, அதைக்காட்டிலும் கர்ப்பிணிக்குப் பால், நெய் இவை கலந்த ஆகாரம் அத்தியாவசியம் என்பது கவனிக்கத்தக்கது.

கர்ப்பிணி செய்யக் கூடாத காரியங்களும் அதனால் ஏற்படும் தீமைகளும்:
1. மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

2. மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

3. மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

4. அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அக்காலத்தில் நழுவலாம். அல்லது சூம்பிப் போகலாம்.

5. உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

6. சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

7. எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.

Previous articleகணவன் மனைவி சண்டை வருவது ஏன்? தீர்வு என்ன?
Next articleமலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு காரணம்