Home ஆரோக்கியம் முறையான தூக்கமின்மை நோயினைத் தரும்

முறையான தூக்கமின்மை நோயினைத் தரும்

36

காலையில் 10 மணிக்கு முன்பு பல பேருக்கு உடம்பு மெத்தனமா இருக்கும். சக்தி இல்லாது சோர்வா இருப்பது போல் தோன்றும். வீட்டில் இருப்பவர்களிடம் இவர்கள் அதிகம் திட்டு வாங்குவார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்? என்ன காரணம் என்பதனைப் பார்ப்போம்.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும். இரவு தூங்க வெகு நேரம் ஆகும் என்ற வேலைச் சூழலில் அடிக்கடி ஈடுபடும் பொழுது 11 மணி, 2 மணி அளவில் உடல் காபி வேண்டும் என்று சொல்லும். கூடவே முறையான தூக்கமின்மை உடலில் வீக்கத்தினை தரும், நோயினைத் தரும். கிடைக்கும் உணவினை உட்கொள்ளச் செய்யும். இவை அனைத்தும் ஆரோக்கியத்தினை கெடுப்பதாகவே அமைந்து விடுகின்றது.

இதனால் இன்றைய நாகரீக உலகம் முறையான தூக்கத்தினை மறந்தே உள்ளது. இதனால் காலை என்பது கடினமான நேரமாகி விடுகிறது. அதிலும் திங்கட்கிழமை காலை என்பது பலருக்கு கடினமான ஒன்று. தினமும் 6 மணி நேரத்திற்கு குறைவாக ஒரு வாரம் தொடர்ந்தாற்போல் தூங்கினால் பல வித பாதிப்புகளை இது உடலில் ஏற்படுத்தி விடுகின்றது.

உடல், சூரிய உதயம், மாலை இதனோடு ஒத்துப் போகவே முனைகின்றது. ஆக எழுவது சூரிய உதயத்தினை ஒத்தே இருக்க வேண்டும். ஆனால் இன்று எல்லோரும் பிசிதான். வேலைதான். ஆகவேதான் மருந்தும், மதுவும் அதிகரித்து உள்ளன. மேலும் தூக்க வட்டம் வயதிற்கேற்ப மாறுபடும் தன்மை கொண்டது. சிறு வயது, இளவயது உடையவர்கள் தாமதமாக தூங்கச் செல்வதால் எழுவதும் தாமதப்படுகின்றது. உழைப்பாளிகளுக்கு என்றுமே தூக்கம் குறைவுதான்.

ஆக இங்கு கடும் உழைப்பாளிகளும் அதிகம். தூக்கம் குறைந்த சமுதாயமும் அதிகம். பள்ளி செல்லும் 13-16 வயது சிறுவர், சிறுமியர் வாரம் 10 மணி நேர அளவு தூக்கத்தினை இழக்கின்றனர். இதனை வார விடுமுறை நாட்களில் ஈடுகட்டுகின்றனர். ஆக அன்றாட வாழ்க்கை செயல் முறையில் பல பாதிப்புகள், மாற்றங்கள் ஏற்படுகின்றது.

காலையில் சீக்கிரம் எழுவதே உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. ஒருவரை இப்பழக்கம் சுறுசுறுப்பாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இருக்கச் செய்யும். ஆக இதனை செயல்படுத்தி காலையில் தேவையான சக்தி எப்படி பெறுவது என்பதனைப் பார்ப்போம்.

* மூளைக்கு காலையில் சூரிய வெளிச்சம் போன்ற சிறந்த ஒன்று இருக்க முடியாது. சுறுசுறுப்பாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இது ஒருவரை ஆக்கி விடும். காலை வெயில் இரவில் உங்களை நன்கு தூங்கச் செய்யும். மாலையில் வெயில் மறையும் பொழுது உடல் மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கும். இது உங்கள் தூக்கத்தினை சீராக்கும். பகலில் நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் சூழ்நிலையில் இருப்பது மிகவும் நல்லது. இரவில் வெளிச்சம் இல்லாத அறையில் சிறிய இரவு விளக்கை தூரத்தில் வைத்து தூங்குவது நல்லது.

* இரவு உணவினை தூங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பு முடித்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் சிலர் தூக்கத்தில் பசியால் எழுந்து கொள்வர். இவர்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு வாழைப்பழம் (அ) சில காரட் துண்டுகள் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

* தூங்குவதற்கு எட்டு மணி நேரம் முன்பு காபி, டீ, சர்க்கரை பானங்களைத் தவிருங்கள். புகையிலை, சிகரெட் முதலியவற்றை எப்பொழுதுமே தவிருங்கள்.

* இரவில் மது அருந்துவது போதை தரும். ஆனால் தூக்கத்தினை கெடுத்து விடும். மேலும் முறையான சுவாசத்தினை மது கெடுக்கும்.

* டி.வி., லேப்-டாப் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை முழுமையாய் அணைத்து விடுங்கள். தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்னால் அணைத்து விடுங்கள். இதிலுள்ள நீல ஒளிமெலடோனின் சுரப்பதினை குறைத்து விடும்.

* குளிர்ந்த அறை தூக்கத்தினை தூண்டும்.

* மறுநாள் வேலைகளை மாலையே எழுதி வைத்து விடுங்கள். இதனால் தூக்கத்தில் மனமும், மூளையும் பதற்றமின்றி இருக்கும்.

* தியானம் பழக வேண்டும். இது உடல், மனம் இவற்றிலுள்ள டென்ஷனை நீக்கி விடும்.

* காலையில் எலுமிச்சை சாறு சேர்த்த தண்ணீர் ஒரு க்ளாஸ் அருந்துவது நல்லது.

* காலை உணவாக புரதம் நிறைந்த நல்ல உணவினை உட்கொள்ளுங்கள்.

* உடற்பயிற்சி இல்லாத உடல் சோர்ந்து போகும். தினமும் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

* படுக்கை தூசுஇன்றி சுத்தமானதாக இருக்க வேண்டும். இவைகளை கடைபிடித்தாலே போதும். தூக்கம் ஓடி வந்து விடும்.