Home பெண்கள் அழகு குறிப்பு பெண்கள் முகத்தில் ரோமங்களை அகற்றும் சிறந்த முறைகள்

பெண்கள் முகத்தில் ரோமங்களை அகற்றும் சிறந்த முறைகள்

25

தலையில் அதிகம் முடி இருந்தால் அது அழகு, பெருமை என்று கருதுவீர்கள் அதுவே முகத்தில் ரோமங்கள் இருந்தால் வருத்தப்படுவீர்கள்! புருவக்களுக்கு நடுவில் ரோமங்கள் முளைக்கலாம், உதடுகளுக்கு மேலே முளைக்கலாம், தாடையில் முளைக்கலாம், இந்த ரோமங்களை அகற்றுவது மிக கடினமாக இருக்கலாம். ஏனென்றால், முகத்தில் இருக்கும் ரோமங்கள் வெளிப்படையாகத் தெரிபவை, அகற்றும்போது ஏதேனும் தவறாகிப்போனால் மறைக்க முடியாது!

ரோமங்களை அகற்றும் வழக்கமான முறைகள் என்று நாம் நினைக்கும் சில முறைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

ட்வீஸிங் (Tweezing)

ரோமங்களை அகற்ற சௌகரியமான, வசதியான வழி ரோமங்களைப் பிடுங்குவதே ஆகும். பல பெண்கள், ட்வீஸர்களை கையோடு வைத்திருப்பார்கள், முகத்தில் உள்ள ரோமங்கள் தெரியும்படி இருப்பதைக் கவனித்தால் அல்லது புருவத்தின் வடிவத்தை சீரமைக்கும்போது ஏதேனும் தவறாகிப் போனால் உடனடியாக அவர்கள் ட்வீஸரைக் கொண்டு தேவையற்ற ரோமங்களைப் பிடுங்கி திருத்திக்கொள்ளலாம்.

நன்மைகள்

புருவங்களுக்கு நடுவில் மற்றும் புருவங்களைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள ரோமங்களை அகற்ற இது சிறந்த முறையாகும்.
தனியாக இருக்கும், பிடுங்கக் கடினமான ரோமங்களை அகற்ற எளிதானது
செலவும் குறைவு
வலி குறைவாக இருக்கும்
நீங்களே ரோமங்களை அகற்றிக்கொள்ள முடியும்
குறைகள்

இதற்கு நேரம் அதிகமாகும், சரியான ரோமத்தைப் பற்றி, அழுத்திப் பிடுங்க வேண்டும்
ட்வீசிங் செய்வதால் தும்மல் ஏற்படலாம், கண்களில் கண்ணீர் வரலாம்.
வேக்ஸிங் (Waxing)

சில பெண்கள், முகத்தில் மென்மையான வேக்ஸ் & ஸ்ட்ரிப்கள் அல்லது கடினமான வேக்சைப் போட்டு, உலர்ந்த பிறகு இழுத்து எடுத்துவிடுவார்கள்.

நன்மைகள்

இது விரைவில் முடிந்துவிடும். அதிக நேரம் எடுக்காது.
ஒரே ஸ்ட்ரிப் கொண்டு முகத்த்தில் பெரும்பகுதியில் உள்ள ரோமங்களை எளிதில் எடுத்துவிடலாம். த்ரெடிங், ட்வீசிங் போன்ற பிற முறைகளில் இப்படியல்ல.
முடி மீண்டும் வளர அதிக நாளாகும்
வீட்டிலேயே செய்துகொள்ளலாம், சலூனிலும் செய்துகொள்ளலாம்.
கன்னம், தாடை போன்ற பெரிய பகுதி வளர்ந்திருக்கும் ரோமங்களை அகற்ற இது சிறந்த முறை.
குறைகள்

முகத்தில் வேக்ஸ் (மெழுகு) போடுவது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
நீளம் மிகவும் குறைவான முடிகளுக்கு இந்த முறை அவ்வளவு சிறப்பானதல்ல.
சரும வறட்சி, நிறம் மாறுதல், தோல் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.
சூடான மெழுகால் சருமம் சூடுபடலாம்.
வேக்ஸிங் செய்யும்போது, சில சமயம் ரோமங்கள் உள்நோக்கி வளரக்கூடும். குறிப்பாக தடிமனான ரோமங்களாக இருந்தால் இதற்கு வாய்ப்பு அதிகம்.
நூல் கொண்டு பிடுங்குதல் (Threading)

இந்தியாவில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முறை இதுவாகும். கிட்டத்தட்ட எல்லா அழகு நிலையங்களிலுமே இந்தச் சேவை கிடைக்கும். பெரும்பாலும், இதை ஒருவருக்கு மற்றொருவர் செய்வார்கள். இதற்கு நூலைப் பயன்படுத்தி, தேவையற்ற ரோமங்களை சுருக்குப் போட்டு பிடுங்குவார்கள்.

நன்மைகள்

இது குறைந்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடியது
சிறிய முடிகளுக்கும் ஏற்ற முறை
குறைகள்

செய்பவர் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும்!
கண் புருவங்களில் செய்யும்போது, ஏதேனும் தவறாகிப் போனால் புருவத்தின் மொத்த வடிவமே சீர்குலைந்துவிடலாம்.
வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
எலக்ட்ரோலிசிஸ் (Electrolysis)

இந்த முறையில், மெலிதான, ஊசி வடிவிலான எலக்ட்ரோடு சருமத்திற்குள் செலுத்தப்பட்டு, மயிர்க்கால்களில் சிறிய அளவு மின்சாரம் செலுத்தி, அதன் மூலம் ரோமங்களின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.

நன்மைகள்

மீண்டும் ரோமங்கள் வளராது, தேவையற்ற ரோமங்கள் வளரும் பிரச்னைக்கு இது நிரந்தரத் தீர்வு!
இதில் தனித்தனியாக ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் மின்சாரம் செலுத்தி ரோம வளர்ச்சி தடுக்கப்படுவதால், சிறிய பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற முறையாகும்.
லேசர் முறை போலல்லாமல், வெளிர் நிற ரோமங்களுக்கும் இது நல்ல பலன் தரும்.
குறைகள்

சில சமயம் நிறமாற்றம், வடு போன்றவை ஏற்படலாம்
செய்துகொள்ளும்போது வலி இருக்கலாம்
நிரந்தரமாக ரோம வளர்ச்சியை நிறுத்த, பல முறை செய்துகொள்ள வேண்டியிருக்கலாம்
லேசர் முறையில் ரோமங்களை அகற்றுதல் (Laser Hair Removal)

லேசர் சிகிச்சையானது, மயிர்க்கால்களை சேதப்படுத்துவதால் நீண்ட காலம் மீண்டும் ரோமங்கள் வளராமல் இருக்கும். ஆனால் ஒரே முறை செய்துகொள்வது போதுமானதல்ல. மீண்டும் மீண்டும் செய்துகொண்டால், நிரந்தரமாக ரோம வளர்ச்சி நின்றுவிடும்.

நன்மைகள்

எத்தனை முறை தேவையோ, அத்தனை முறை சரியாகச் செய்துகொண்டால் இது ரோம வளர்ச்சிக்கு நிரந்தரத் தீர்வாகும்.
கருமையான முக ரோமங்கள் உள்ளவர்களுக்கு ஏற்ற முறை.
குறைகள்

செலவு அதிகம்
செய்துகொள்ளும்போது சிறிது வலி இருக்கலாம்
பல முறை செய்துகொள்ள வேண்டியிருக்கலாம், சில முறை சிறு செயல்முறைகள் செய்ய வேண்டியிருக்கலாம்.
தோல் தடிப்புகள், அரிப்பு, நிறம் மாறுதல், வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்
கிரீம்கள் (Creams)

ரோமங்களை அகற்றுவதற்கான கிரீம்களில் மயிர்க்கால்களை பலவீனமாக்கும் வேதிப்பொருள்கள் இருக்கும், இந்த கிரீம்களைப் போட்டுத் துடைக்கும்போது ரோமங்களும் வந்துவிடும். சிலருக்கு இந்த கிரீம்கள் ஒத்துவராது, ஆகவே முதலில் சிறிய பகுதியில் பயன்படுத்திப் பார்த்து எதுவும் பிரச்சனை இல்லை என்றால் தொடர்ந்து முழுவதும் பயன்படுத்துவது நல்லது.

நன்மைகள்

செய்முறை எளிது, வீட்டிலேயே செய்துகொள்ளலாம்
மற்ற முறைகளை விட வலி குறைவு
குறைகள்

கிரீம்களில் இருக்கும் வேதிப்பொருள்களால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்
இவற்றில் பெரும்பாலானவற்றில் கடுமையான துர்நாற்றம் இருக்கும்
முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்றுவதற்கு, எல்லோருக்கும் ஒரே முறை பொருந்தும் என்று கூற முடியாது. ஒருவருக்கு ஒத்துவரும் முறை மற்றொருவருக்கு ஆகாது. ஆகவே, உங்களுக்கு ஏற்ற முறையைத் தேர்வு செய்யும் முன்பு சரும மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.