Home பெண்கள் தாய்மை நலம் பெண்களுக்கு குழந்தை பிறப்பின் மனதளவில் ஏற்படும் பாதிப்பு

பெண்களுக்கு குழந்தை பிறப்பின் மனதளவில் ஏற்படும் பாதிப்பு

52

தாய் நலம்:எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. பல தாய்மார்களுக்கு இந்தப் பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பிரசவவலியை அனுபவித்த பிறகுதான், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

இதன் காரணமாக அவள் மிகவும் சோர்வாகயிருப்பாள். சிசேரியன் என்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாய்க்கு அது சார்ந்த வலி, சோர்வு இரண்டுமே இருக்கும். அலுத்துக் களைத்திருக்கும் தாயின் மனம் ஓய்வை நாடும். இதற்கிடையே, அந்த நேரத்தில் பிறந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டே இருக்கும். நேரம் பார்த்து, தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருபக்கம் உடல் அவஸ்தைகள், மறுபக்கம் குழந்தைப் பராமரிப்பு என்று அழுத்த, அந்தத் தாய்க்கு தூக்கம் சரியாகயிருக்காது.

பல தாய்மார்களுக்கு பிரசவித்த உடனேயே தங்கள் குழந்தை மேல் பிணைப்பு வந்துவிடுவதில்லை. அதற்கு அவர்களுக்குக் குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மூன்று மாதங்கள்கூட பிடிக்கலாம். ஏனென்றால், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள்வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என்றிருக்கத்தான் தாய்க்கு நேரம் சரியாக இருக்கும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தை, தாயின் செய்கைகளுக்குப் பதில் கொடுக்க ஆரம்பிக்கும். தாய் சிரித்தால் குழந்தையும் சிரிக்கும். கொஞ்சி அழைத்தால், திரும்பிப் பார்க்கும். தாயுடன் விளையாட ஆரம்பிக்கும். இப்படித்தான் ஒரு தாய்க்குத் தன் குழந்தை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிணைப்பு வர ஆரம்பிக்கும். அதனால் போஸ்ட்பார்ட்டம் காலகட்டத்தில், ‘என்னடா நமக்கு நம் குழந்தையின் மேல் பிணைப்பே வரவில்லை’ என்று தாய் வருந்தவேண்டிய அவசியம் இல்லை.

கருவுற்ற காலத்தில் மனஅழுத்தத்தைச் சந்தித்த பெண்கள், குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மறுபடியும் அதே பிரச்னையைச் சந்திக்க அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. சரியாகச் சாப்பிடாமல், போராடி குழந்தை பெற்று, குழந்தை பிறந்த பிறகு சரியாகத் தூங்காமல் நாள்களை நகர்த்தவேண்டிய சூழ்நிலை ஒரு தாய்க்கு ஏற்படுகிறது. குறிப்பாக முதல் குழந்தையின் தாய் என்றால், அந்தத் தாய்க்கு குழந்தை வளர்ப்பு குறித்த பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் நிறைய இருக்கும். ‘நான் ஒரு சிறந்த அம்மாவாக இருக்க முடியுமா… என் குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா?’ என்று அவர்கள் அதிகம் கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.

‘இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, நாங்க உன்கூட இருக்கோம்… கவலைப்படாதே’ என்று ஆற்றவும் தேற்றவும் வீட்டில் பெரியவர்கள் இருக்கும்பட்சத்தில் இந்த நிலையிலிருந்து ஒரு பெண்ணால் சுலபமாக வெளியே வந்துவிட முடியும். அப்படி உதவிக்கு யாரும் இல்லாமல் வீடு, குழந்தை வளர்ப்பு என்று சகலத்தையும் தான் ஒருவர் மட்டுமே பார்த்தாக வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் அதிகளவில் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். கோபம், அழுகை, இயலாமை, சோர்வு இவையெல்லாம் அவர்களை ஆட்கொண்டுவிடுகின்றன.

இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. அதனால் அந்தப் பெண்ணின் தாய் அல்லது மாமியார் அவருடன் இருப்பது நலம். இவை எல்லாவற்றையும்விட, போஸ்ட்பார்ட்டம் நிலையை ஒரு பெண் இயல்பாகக் கடக்க அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாலூட்டுதல் தவிர்த்து, ஒரு தந்தை, தாய்க்கு இணையாகக் குழந்தையை எல்லாவிதத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். பிரசவத்துக்காக மாமியார் வீட்டிலிருக்கும் மனைவியையும் குழந்தையையும் வார இறுதி நாள்களில் வெறுமனே பார்த்துவிட்டுப் போவதை மட்டும் செய்யாமல், குழந்தையைத் தூங்கவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்து மனைவிக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம். அன்பாக, ஆதரவாக மனைவியிடம் பேசலாம். கணவரின் இது போன்ற சின்னச் சின்ன உதவிகள், மெனக்கெடல்கள் பிரசவித்த பெண் தன்னை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மீட்டெடுக்கக் கைகொடுக்கும்.’’

Previous articleவயதான தம்பதியினரின் கட்டில் வாழ்க்கை சிறக்க டிப்ஸ்
Next article18 முதல் 30 வயது ஆண்களும் பெண்களும் உண்டாக்கும் புதிய உறவு முறை