Home குழந்தை நலம் அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?

அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?

36

* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?
* அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்?
* அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?

இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும் காட்டும் பாசத்தில், அந்த அன்யோன்யத்தில் தான் இருக்கிறது. தாயின் கடுமையான கண்டிப்பு தான் ஒரு பெண்ணை சரியாக வழிநடத்தும் என்பதில் ஒரு மிலிட்டரி கட்டுப்பாடு தான் எட்டிப் பார்க்கும். அனுபவரீதியாக பார்த்தால் அந்த கண்டிப்பு பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.

ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு பெண்களுக்கு அறிவுரை பிடிக்காது. கண்டிப்பும் பிடிக்காது. பின் எப்படித்தான் வழி நடத்துவது? தாயானவள் தன் மகளிடம் காட்டும் உன்னத நட்பின் மூலமாகத் தான் இதை சாதிக்க முடியும். தாய்-மகளின் உறவு சிநேகிதி அந்தஸ்தை அடையும்போது கண்டிப்பான அறிவுரை கூட மகளால் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.

‘வயசுப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல’ என்ற உதாரணத்தை இன்றைக்கும் கிராமங்களில் கேட்க முடியும். மடி சுமந்த பிள்ளை எப்போது உங்கள் கைமீறியது? எதனால் மீறியது? யோசித்துப் பார்த்தால் நீங்கள் எப்போது கண்டிப்பு என்ற அஸ்திரத்தை அளவுக்கு மீறி பிரயோகிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போது முதல் தான் அந்த கெட்ட ஆட்டம் ஆரம்பித்திருக்கும்.

எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பது. தேவையற்ற சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் போகும் இடமெல்லாம் தொடர்வது இதெல்லாம் உங்கள் பெண்ணின் மனதில் உங்களை தரம் தாழ்த்தி விடும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் இம்மாதிரியான வதந்தியை உண்மையாக்கினால் தான் என்ன என்கிற அளவுக்குக் கூட அவர்கள் போய்விடும் அபாயம் உண்டு.

கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். சோர்வாக இருந்தால் கண்ணாடி உடனே காட்டிக் கொடுத்து விடும். உடனே சிற்சில ஒப்பனைகள் மூலம் சோர்வை சரி செய்து விடலாம். ஆனால் உங்கள் மனக்கண்ணாடி தான் உங்கள் பெண். அதில் சந்தேகம் என்ற கல்லை எடுத்து தேவையில்லாமல் கீறல் விழுந்து போகும் காரியத்தை செய்து விடாதீர்கள்.

இதனால் உங்கள் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் பலவிதமான வியாதிகளுக்கு ஆட்பட்டு விடு வார்கள். பெண் குழந்தைகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை தூரம் தள்ளுங்கள். அவர்கள் எதிர்காலம் என்னாகும் என்ற பயத்தை அப்பு றப்படுத்துங்கள். நல்ல சிநேகிதியாக எப்போதும் அவர்களிடம் கலகலப்பாக மனம் விட்டுப் பேசுங்கள்.

நாளடைவில் அவர்களும் ஒரு நல்ல தோழியாக உங்களை நேசிக்க துவங்குவார்கள். இந்த நேசம் உங் களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த பிணைப்பு அவர்களை உங்களிடம் வெளிப்படையாக நடக்கத் தூண்டும். பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவே இருக்காது. பின் அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் நேராது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு விஷயம் உங்களை வெகுவாக பாதித்திருந்தால் அதனை அவர்களிடம் மனம் விட்டு பேசலாம். அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அனுபவங்களே ஒருவருடைய அறிவை விசாலமாக்கும். இளைய பருவத்தில் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கலாம்.

நேர்ந்த அந்த பாதிப்பை மட்டும் தவிர்த்து, ‘நல்லவேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக தப்ப முடிந்தது’ என்பதாக சொல்லி அவர்களை அலர்ட்டாக இருக்க செய்யலாம். இம்மாதிரியான ஆலோசனைகள் அவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கும் மனப் பக்குவத்தைக் கொடுக்கும். ஒரேநாளில் மொத்த அனுபவங்களையும் அவர்களிடம் புகுத்த முயற்சிக்காதீர்கள்.

அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு தக்க அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கை பலப்படும். பெண்கள் சில சமயம் மனதில் எதையாவது மறைத்து தனக்குத் தானே தீர்வு தேடிக் கொள்ள விரும்புவார்கள். அந்த நேரத்தில் முறையான பகிர்தல் இருந்தால் பிரச்சினைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு உங்கள் பெண் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துகிற அளவுக்கு ஒரு இளைஞன் ஒருதலை ராகத்துடன் தொடரலாம். ஆனால் அதை பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் சில பெண்கள் அதை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்க்கலாம். தாய், மகள் நட்பு என்பது எப்போதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவது.

ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கிறாள் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால் வெளியில் போய் என்ன செய்கிறாள், யார் யாருடன் பழகுகிறாள், எங்கெங்கே செல்கிறாள் என்று அவளுடைய செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதையெல்லாம் தாயிடம் பகிர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் அவர்களே இளைஞன் பின்தொடரும் விஷயம்வரை அம்மாவிடம் மனம் விட்டு பேசத் தொடங்கி விடுவார்கள்.

அப்புறம் பிரச்சினை ஏது? பின்தொடருதல் ஏது? ஒருவேளை வயதுக்கேற்ற குறும்பில் பாய்பிரண்ட் போன்ற கலாசாரங்களில் சிக்கி, தவறான பாதைக்குள் சில பெண்களின் பயணம் தொடரத் தலைப்பட்டால், அவர்களை பாதுகாத்து வழிநடத்த இந்த ‘அம்மா நட்பு’ துணையாக இருக்கும். உண்மையான அன்பும், நேசமும், துளியும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.

சந்தேகம் என்பது நல்ல நட்பை பிளவு படுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை எப்போதும் நாம் பிரயோகப்படுத்தக் கூடாது. அது மனதளவிலும் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணரும் ஆற்றலை நாம் அவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது. சில தவறுகள் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தக்க உதாரணங்களோடு நாம் அவர்களுக்கு விளக்கி அவர்களை தவறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.

வெளிப்படையான நட்பு பல பிரச்சினைகளுக்கு அப்போதே உரிய தீர்வை சொல்லி விடுகிறது. தனது கட்டுக்கோப்பான அணுகுமுறையையும் மீறி ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் சில அம்மாக்கள் சதா நச்சரித்துக் கொண்டிருப்பது, எல்லா விஷயத்திலும் மிகவும் கறாராக இருப்பது இதெல்லாம் வேண்டாத பின் விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

சில விஷயங்களில் விட்டுக் கொடுக்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும். நாம் அவர்களை கைக்குள் வைத்திருப்பதாக நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தில் பிடியை இறுக்கும் போது அது உடைந்து விடும் வாய்ப்பிருக்கிறது. பெண் குழந்தைகளிடம் மென்மையான அணுகுமுறை தேவை.

அவர்களையும் மீறி ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் மன்னிக்கும் பெருந்தன்மை நமக்கிருக்க வேண்டும். அவர்களை நம் வசப்படுத்தும் நல்ல நட்பு எப்போதும் ஒரு பாதுகாப்பை, நிம்மதியைத் தரும். அந்தக்கால நடைமுறை களை எல்லாம் இந்தக் கால பெண்களிடம் கொண்டு வந்து திணிக்கக் கூடாது.

‘நாங்கல்லாம் அந்தக்காலத்துல பெத்தவங்களுக்கு அப்படி அடங்கி ஒடுங்கி இருந்தோம்’ என்கிற சுய தம்பட்டம் பிள்ளைகளிடம் கூடவே கூடாது. நட்போடு இணைந்தே அவர்களுடைய எதிர்காலத்தை எளிதில் உருவாக்கலாம். பக்கத்திலிருந்து சமைக்க கற்றுக் கொடுக்கலாம். விருந்தினர்களை உபசரிக்க கற்றுக் கொடுக்கலாம்.

கொடுக்கும் பணத்தை சேமிக்க கற்றுக் கொடுக்கலாம். சேமிப்பின் முக்கியத்துவத்தை நாம் இப்போ திருந்தே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். வெளியில் போகும் போது எப்படி பாதுகாப்பாக போவது என்று அவர்களுக்கு கற்றுத் தரலாம். வீட்டிற்கு வர காலதாமதமானால் வீட்டிற்கு தகவல் தரவும், பாதுகாப்பாக வீடு வந்து சேரவும் சொல்லித் தரலாம்.

உங்கள் பெண்ணுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தால் தான், நாம் தேவையற்றவர்களை வடிகட்ட முடியும். நல்ல பழக்கங்களை பின்பற்ற கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய எதிர்கால கனவுகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் நீங்கள் கேட்கும் போது, அவர்களுக்கு உங்களுடன் பேசுவதில் ஒரு சுவாரசியம் ஏற்படும்.

அந்த சுவாரசியம் தான் உங்கள் அன்புக் கடிவாளம். அதை ஒருபோதும் நழுவ விட்டு விடாதீர்கள். அது கடிவாளம் என்பதை கடைசிவரை அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி பார்த்துக் கொள்வதில் தான் உங்கள் சாமர்த்தியமே இருக்கிறது.

மகளுக்கான நல்ல எதிர்காலம் அமையும் வரை அம்மாவின் நட்பு ஒரு நல்ல சிநேகிதியைப் போல் இருக்க வேண்டியது அவசியம். இருவருக்கும் இடையிலான எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் அதிக மாகும்போது மட்டுமே இது சாத்தியம்