Home சூடான செய்திகள் ஆண்களே இப்படித்தான் – பெண்கள் இப்படி சொல்லக்காரணம்

ஆண்களே இப்படித்தான் – பெண்கள் இப்படி சொல்லக்காரணம்

17

ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்துகொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.

இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது காமம்.

காதலின் உயிரியல் என்ற புத்தகத்தில் ஆர்தர் ஜானோவ் “காதல் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன எதிர்வினை நிகழ்ச்சி’’ என்கிறார். இந்த ரசாயனங்கள் முதல் பார்வையிலேயே காதல் விளைவை ஏற்படுத்தும். டோபமைன் மற்றும் நார் எபிநெப்ரின், கட்டிப்புடி ஹார்மோன் எனும் ஆக்ஸிடோசின் போன்றவை உடல் ரீதியான மகிழ்ச்சிக்கான உள்ளார்ந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி பாலியல் இன்பத்தை ஈர்க்கும். டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை அதற்கு தூண்டுதலாக அமையும்.

ஆண்களைவிட பெண்கள் அதிக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனைக் கொண்டிருப்பதுதான் பெண்கள் எளிதாக காதல்வயப்பட்டு புதிய உறவில் திளைக்க முக்கியக் காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் அதிக அளவு சுரக்கும்போது அவர்கள் தங்கள் காதலனோடு மேலும் இணக்கமாகி வலுவான உறவை வளர்க்கிறார்கள்.

தங்கள் காதலனின் பெயரைக் கேட்கும் போதும், காதலனின் உடல் நறுமணத்தோடு தொடர்புடையவற்றை நுகரும்போதும், காதலனை எண்ணிக் கனவு காணும்போதும், அவர்களுடன் தொடர்புடைய பாடலைக் கேட்கும் போதும் அவளது உடலில் ஆக்ஸிடோசின் அளவு உயர்கிறது. தான் நேசிக்கப்படுகிறவளாகவும், பாராட்டப்படுகிறவளாகவும் உணர்ந்தால் இந்த ஹார்மோன் அவளுடைய கன்னங்களுக்குள் ரத்தத்தை விரைந்து பாய்ந்தோடச் செய்து முகப்பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அவள் தான் விரும்பத்தகாதவராகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும் உணர்ந்தால், அவளது உணர்வுகளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

பொதுவாக ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் காரணம். ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

பாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண் மற்றும் பெண்களின் உணர்வுகள் வேறுபடுகின்றன. ஆண்களை போன்று பெண்கள் எப்போதும் உடலுறவை விரும்புவதில்லை. தன்னோடு பேசிப்பழகி, அன்றாட விஷயங்களை மகிழ்வுடன் பகிர்ந்து, இன்ப துன்பங்களில் தனக்கு ஆறுதலாகவும், தன்மேல் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் நம்பிக்கையான ஆண் மகனை தன்னுடைய காதலனாக தேர்வு செய்கிறாள்.

திருமண பந்தத்தில் இணைந்து தனது மனதை கொள்ளை கொண்ட அந்த காதலனோடு மட்டுமே உறவு கொள்ள விரும்புகிறாள். பெண்களை பொறுத்தவரை பாலியல் இன்பம் என்பது மனம் சார்ந்தது, உள்ளார்ந்த உணர்ச்சிப்பூர்வமானது. தனது ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவையோடு பின்னிப்பிணைந்தது. பாலியல் இன்பம் என்பதை அவர்களுடைய உணர்வுப்பூர்வமான அர்ப் பணிப்பின் உச்சநிலையாக கருதுகின்றனர்.

ஆண்களுக்கு பாலியல் இன்பம் என்பது அடிப்படை உடல்சார் தேவையாகவும், உடலில் பாலியல் உணர்ச்சியைத் தொடர்ந்து தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும் அமைகிறது. இந்த உடல்தேவை பூர்த்தியாகும் வரை அவர்கள் எவ்வித அன்பையும், காதலையும் புரிந்து கொள்வதில்லை. பாலியல் இன்பத்திற்கான உள்ளுணர்வூக்கம் காதலால் உண்டானது அல்ல. மாறாக அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனால் உண்டானது.

ஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர். பெண் தன்னோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் போது மட்டுமே, தான் நேசிக்கப்படுவதாக ஆண் உணர்கிறான்; பெண், தான் உண்மையாக நேசிக்கப்படுவதாக உணரும்போது மட்டுமே, உடலுறவு வைத்துக் கொள்கிறாள். காமமின்றி காதல் இல்லை என்பது ஆண்களின் எண்ணம். காதலுக்காகவே காமம் என்பது பெண்களின் நிலைப்பாடு.

ஓர் ஆண், தான் பாலியல் இன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய விதையை பரப்பி ஒரு குழந்தைக்குத் தந்தையாக இயலும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். ஆகவே, ஒரு பெண் தன் வாழ்க்கை துணைவனான ஆண்மகனை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். சரியான தேர்வு மூலமே அவளால் சிறந்த சந்ததியை உருவாக்க முடியும்.

குறைபாடுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்த பெண்கள் பலவீனமான சந்ததியை தோற்றுவிக்க நேரிடும். நல்ல வலுவுள்ள மர பணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்தவர்கள்தான் வலுவான குழந்தைகளை பெற்றெடுப்பர். அக்குழந்தைகள் தங்களது எதிர்கால சந்ததிக்கு தாயின் மரபணுக்களை கடத்துகின்றனர். அதேவேளையில் ஆண்களின் தவறான தேர்வு அந்தளவுக்கு எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

இந்த காரணங்களால் தான், தனது மனதைக் கவர்ந்திழுக்காத எந்த ஆண்மகனையும் தன்னோடு உறவாட பெண்கள் அனுமதிப்பதில்லை. காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அது ஆண்களுக்கு தெரிவதில்லை. காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது.

அந்த கிளர்ச்சி தான் பெண்களுக்கு காதலாகவும், ஆண்களுக்கு காமமாகவும் உருப்பெற அடித்தளமிடுகிறது. அவ்வாறு, உருப்பெற்ற காதலால் அவனோடு பாலியல் உறவு கொள்ள இணங்குகிறாள், அவனும் தனது காமத்தை தணித்துக் கொள்கிறான். நாளடைவில் சில ஆண்கள் தனதுமேல் கொண்ட அளவில்லா காதலாலும், நம்பிக்கையாலும்தான் தன்னோடு உறவுகொள்ள இணங்கினாள் என்பதை மறந்துவிடுகிறார்கள். வேறு நபர்களை நாட தொடங்கி விடுகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் அப்படியில்லை.

தான் நேசித்தவனுடன் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து அவனை தனது வாழ்க்கையாக எண்ணி வேறு ஓர் ஆண்மகனை மனதில் நினைக்கக்கூட மறுக்கிறாள். பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல; அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு. ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது. இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லர். ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். இதில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.