Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மாதவிடாய் நாட்களில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்?

மாதவிடாய் நாட்களில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்?

28

மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.

குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள் இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.

மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.