Home பாலியல் சுயஇன்பம் பகுப்புக்கான தொகுப்பு

சுயஇன்பம் பகுப்புக்கான தொகுப்பு

31

தூசணம் எனப்படும் கெட்ட வார்த்தைகளை மற்றவர்கள் முன் உச்சரிக்க மாட்டோம். தயங்குவோம். கூச்சப்படுவோம். அது போலவே சுயஇன்பம் என்ற சொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்றவர்கள் முன் பேசுவதற்கு நாம் தயங்குகிறோம். அதேபோல கேட்பவர்களும் அருவருப்பு அடைவார்கள்.

அவ்வாறு பேசப்படாததன் காரணமாக எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வுடன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கியம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றி ஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.

இது பொய்யான செய்தி அல்ல. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

ஒருவர் தனது பால் உறுப்பைத் தானே தூண்டுதல் செய்து (stimulate) உணர்வெளுச்சியையும், இன்பத்தையும் அடைவதையே சுயஇன்பம் எனலாம். தனது ஆணுறுப்பையோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் பண்ணுவதன் மூலம் உச்ச கட்டத்தை அடைவதையே சுயஇன்பம் என்கிறோம்.

தற்புணர்ச்சி என்ற சொல்லையும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

யார்? ஏன்?

யார் யார் செய்வார்கள் என்று கேட்டால் பெரும்பாலும் எல்லோருமே செய்திருப்பார்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும் கூடும். இனியும் செய்யவும் கூடும். இதனை வெறுமனே இளைஞர்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்கிறேன் என எண்ண வேண்டாம்.

“எனது மனைவிக்கு இயலாது. எண்டபடியால் நான் இடைக்கிடை கைப்பழக்கம் செய்வதுண்டு. இதனால் ஏதாவது பிரச்சனை வருமா” என கதவுப் பக்கமாகப் பார்த்துவிட்டு அடங்கிய தொனியில் லச்சையோடு கேட்டார் ஒருவர்.

அவரது வயது வெறும் 70 தான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவரது மனைவி பக்கவாதம் வந்து நீண்ட நாட்களாகப் படுக்கையில் கிடக்கிறா.

“இவன் படுக்கயிக்கை குஞ்சாவிலை கை போடுகிறான்”, அல்லது “குப்பறப்படுத்துக் கொண்டு அராத்துறான்” எனப் பல தாய்மார்கள் சொல்வது பாலியல் வேட்கைகள் எழும் பதின்ம வயதுப் பையன்கள் பற்றி அல்ல. பாலுறவு, செக்ஸ் போன்ற வார்ததைகளையே இதுவரை அறியாத மூன்று நாலு வயதுக் குட்டிப் பையன்கள் பற்றியும்தான்.

“அல்லது ‘பூச்சி கடிக்கிதோ தெரியவில்லை. கைவைச்சுச் சொறியிறாள்.” என்பதையும் நாம் கேட்காமல் இல்லை.

எதற்காகச் செய்கிறார்கள்

ஏதோ ஒரு இன்பத்திறாகச் என்ற சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு குழந்தையானது ஆரம்பத்தில் அவ்வாறு செய்வது தனது உறுப்புகள் பற்றி அறியும் தேடல் உணர்வாகவே இருக்கும். பின்னர் அதில் ஒரு சுகத்தைக் கண்டு மீண்டும் நாட வைக்கும்.

black-white

பிற்காலங்களில் ஒருவரது பாலியல் தொடர்பான உளநெருக்கீட்டை தணிப்பதற்கான வடிகாலாக மாறிவிடுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களை உதாரணம் கூறலாம்.

பதின்ம வயதுகளில் எழும் பாலியல் எழுச்சியைத் தீர்ப்பதற்கு எதிர்பாலினர் கிடைப்பது சாத்தியம் இல்லாமையால் தாமே தீர்த்துக் கொள்ள நேர்கிறது.
மாறக சில தருணங்களில் சிலர் ஒருபால் புணர்ச்சியை நாடி பாலியல் நோய்களைத் தேடி பிரச்சனைகளுக்கு ஆளாவதும் உண்டு.
திருமணமானவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம் வாழ்க்கைத் துணை அருகில் இல்லாமையாகவோ அவரது துணையின் நாட்டமின்மையாகவோ இருக்கலாம்.
அதே போல கர்ப்பமாவதைத் தவிர்ப்பதற்காகவும் செய்கிறார்கள்.
பாலியல் தொற்று நோய்கள் அணுகாவண்ணம் தம்மைக் காப்பதற்கான பாதுகாப்பான உறவுமுறையாவும் கைக்கொள்ளவும் கூடும்.
சில தேவைகளுக்காகவும் ஆண்கள் இதைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

உதாரணமாக குழந்தைப் பேறற்ற தம்பதியினருக்கான பரிசோதனைகளின் அங்கமாக விந்துப் பரிசோதனை (seminal fluid analysis) செய்வதற்கு இது அவசியம்.
அதே போல குழந்தைப் பேறற்றவர்களுக்காகு உதவுவதற்காக விந்துதானம்(Sperm donation) செய்ய வேண்டிய நியையும் கூறலாம்.
தப்பில்லையா?

ஒரு காலத்தில் சுயஇன்பத்தை பாலியல் வக்கிரம் அல்லது முறை தவறிய பாலுணர்வு அல்லது இயற்கைக்கு மாறான பாலியற் செயற்பாடாகவே கருதினார்கள். ஒருவித மனநோயாகக் கருதிய காலமும் உண்டு.

ஆனால் சுயஇன்பம் என்பதை இப்பொழுது இயல்பான, இன்பம் பயக்கும், ஆரோக்கியமான ஒரு பாலியல் செயல்பாடாகவே கருதுகிறார்கள். மருத்துவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்க, மனநிறைவைத் தரும் செயற்பாடாகாவே கொள்ளப்படுகிறது. பாதுகாப்பானதும் கூட. வாழ்நாள் முழுவதும் செய்வதிலும் தப்பில்லை.

ஆனால் இச் செயற்பாடு காரணமாக அவரது வாழ்க்கைத் துணையுடனான பாலுறவு பாதிப்படையுமானால் அது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கலாம். ஆயினும் புரிந்துணர்வுள்ள துணையானவர் இதைத் தவறானதாகவோ கேவலமானதாகவோ கருதி இழிவு செய்யமால் தன்னுடனான பாலுறவைத் தடுக்க முற்படாவது வி;ட்டால் பிரச்சனை தோன்றாது. மாறாக ஒரு சில தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர சுய இன்பம் பெறு உதவுவதும் உண்டு.

பொது இடங்களில் அதைச் செய்ய முற்பட்டால் சமூகரீதியான பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு.

மிதமான அளவில் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தாலும் உடல் நலக் கேடு ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால் தனது விருப்பத்திற்கு மாறாக அவரது நாளாந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாதவாறு சுயஇன்பம் செய்யவது தவிர்க்க முடியாதது ஆனால் சிக்கல்கள் தோன்றலாம். அத் தருணத்தில் உளவளத் துணையை (counselling) நாட நேரும்.
பெரும்பாலான சமூகங்கள் சுயஇன்பத்தை வெளிப்படையாக ஏற்பதில்லை. சில கண்டிக்கவும் தண்டிக்கவும் கூடும். மதரீதியான தடைகளும் உள்ளன. இது ஒரு பாவச் செயல் என்று மதரீதியாக சொல்லப்படுவதால் குற்ற உணர்விற்கு ஆளாபவர்கள் பலர்.. இதனால் வெட்கத்துககு; ஆளாவதுடன் தன் சுயமதிப்பை இழக்கவும் நேரும்.

தவறான கருத்துகள்

சுயஇன்பம் பற்றிய பல தப்பான கருத்துகள் மக்களிடையே ஆழப் பரவி இருக்கின்றன. அவை ஆதரமற்றவை. அத்துடன் இத்தகைய கருத்துக்கள் அதில் ஈடுபடுபவர்களை மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறன.

சுயஇன்பம் செய்பவர்கள் சாதாரண பாலுறவிற்கு லாயக்கறவர்கள, தாங்களும் அதில் நிறைவு காண முடியாது. பாலியல் துணைவரைத் திருப்திப்படுத்தவும் முடியாது என்பது தவறாகும்.
சுயஇன்பம் செய்பவர்கள் கேவலமானவர்கள், சமூக ரீதியாக ஏற்கபடக் கூடாதவர்கள், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பது முற்றிலும் தவறு.
கால ஓட்டத்தில் அவர்களது பாலியல் செயற்பாடு வீரியம் குறைந்து விடும் என்பதும் தவறானதே.
இதனால் ஒருவரது முடிகொட்டும், உடல் மெலியும் பலவீனமடையும் என்பவையும் தவறான கருத்துக்களே. உள்ளங் கைகளில் இதனால் முடி வளருமாமே என அறியாமையால் பயப்படுபவர்களும் உள்ளார்கள்.
தொடர்ந்து செய்தால் விந்து வத்திப் போகும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் போன்ற யாவும் தவறானவை.
சுயஇன்பம் செய்பவர்கள் ஒரு வகை மனநோயளர்கள் என அல்லது அவர்களுக்கு மனநோய் எதிர்காலத்தில் வரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும்.
விடுபட விரும்பினால்

இது தப்பான காரியம் அல்ல என ஏலவே சொன்னோம். ஆயினும் இது ஒரு போதை போலாகி அதைவிட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டிபோல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டியவை எவை?

சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்தகைய நேரங்களில் வருகிறது என்பதை அடையாளங் காணுங்கள். ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனிமை, பொழுது போக்கின்மை, போன்றவை அணுகாமல் தவிருங்கள். சுயஇன்பத்தைத் தூண்டுகிற நண்பர்களின் உறவைத் தள்ளி வையுங்கள்.
உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.
இசை, எழுத்து, ஓவியம், இசை வாத்தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலுத்துங்கள்.
கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்றவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நலத்தைத் தரும்.
பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.
ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவது உங்கள் மனதைத் திசைதிருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.