Home இரகசியகேள்வி-பதில் அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தைப் பெரிதாக்குதல்

அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தைப் பெரிதாக்குதல்

80

ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் என்றால் என்ன?

இது மார்பகங்களின் அளவை அதிகரிப்பதற்காகச் செய்யப்படும் அழகுக்கான அறுவை சிகிச்சையாகும். சிலருக்கு கர்ப்பத்தினாலோ எடை குறைவினாலோ மார்பகத்தின் அளவு குறைந்திருக்கும், இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தினை முன்னர் இருந்த அளவுக்குப் பெரிதாக்க உள்ளே சில பொருள்கள் (இம்ப்ளான்ட்) பொருத்தப்படும். சிலர் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்வதற்காகவே இதைச் செய்துகொள்வதும் உண்டு. மருத்துவத் துறையில் ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் என்பதை ஆக்மென்டேஷன் மம்மோபிளாஸ்டி என்று குறிப்பிடுவார்கள்.

ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் ஏன் செய்யப்படுகிறது?

இதைச் செய்துகொள்வதற்கான சில காரணங்கள்:

கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தைப் பெறுவதற்காக
தன்னம்பிக்கையையும், தன்னைப் பற்றிய அபிப்ராயத்தையும் உயர்த்திக்கொள்வதற்காக
மார்பகங்கள் முழுமையாகவும், அழகாகத் துருத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதற்காக
விபத்தில் மார்பகம் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது மார்பக நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் மார்பகங்களை பழைய நிலைக்கு வடிவம் மாற்ற

மார்பகத்திற்குள் இதற்காக வைக்கப்படும் பொருள்கள்

இவற்றில் பல்வேறு வகையுண்டு, அவை:

சிலிகான் ஜெல்: சில வகை ஜெல் மென்மையாக இருக்கும், இன்னும் சில வகை கடினமாக இருக்கும்.சிலவற்றில் பாலியூரித்தேன் கோட்டிங் இருக்கலாம். இவற்றில் சுருக்கம் ஏற்படாது, இயற்கையான மார்பகம் போன்ற தோற்றத்தையும் இவை வழங்கும்.
செலைன் பொருள்கள்: இவற்றில் செலைன் இருக்கும். செலைன் வெடித்து வெளியேறும்போது, உடலுக்குள் உறிஞ்சிக்கொள்ளப்படும்.இவை பிற்காலத்தில் சுருங்கலாம் அல்லது மடிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் செய்யப்படும் முறை

வழக்கமான மயக்க மருந்து (அனஸ்தீஷியா) கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின் முக்கியமான படிகள்:

மார்பகத்தைச் சுற்றிலும் அல்லது கிழே சிறிது தோல் அறுக்கப்படுகிறது.
பொருளை (இம்ப்ளான்ட்) வைத்தல்: மார்பகத் திசுவுக்கும் மார்புத் தசைக்கும் இடையே அல்லது மார்புத் தசைக்குப் பின்புறம் இந்தப் பொருள் வைக்கப்படுகிறது.
அறுக்கப்பட்ட திறப்பு தையல் இட்டு மூடி, கட்டு கட்டப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சை செய்ய வழக்கமாக ஒரு மணி நேரம் அல்லது கொஞ்சம் அதிக நேரம் ஆகும்.வலியைச் சமாளிப்பதற்காக, வலி நிவாரண மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பெரும்பாலும், இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு ஒரு நாளுக்கு மேல் மருத்துவ மனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப 6 வாரங்கள் வரை ஆகலாம்.

உள்ளே பொருத்திய பொருள் எவ்வளவு காலம் இருக்கும்?

இவை வாழாள் முழுதும் இருப்பவை அல்ல. அறுவை சிகிச்சையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அல்லது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அடிபட்டால் இவற்றை மாற்ற வேண்டி இருக்கும். மற்றபடி பொதுவாக சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவற்றை மாற்ற வேண்டி இருக்கலாம்.

ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் அறுவை சிகிச்சை செய்ய எவ்வளவு செலவாகும்

இந்த பொருத்தும் பொருள்கள் ரூ.40,000 முதல் கிடைக்கும். அறுவை சிகிச்சைக்கான செலவு குறைந்தபட்சம் ஒரு இலட்சமாக இருக்கலாம், இது மருத்துவமனையைப் பொறுத்து வேறுபடும்.

இந்த அறுவை சிகிச்சை எதற்கெல்லாம் பயன்படாது?

மார்பகங்கள் மிகவும் அதிகம் தொங்கியிருப்பவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையால் பயன் கிடைக்காது. உங்களுக்கு முழுமையான மார்பகங்கள் வேண்டுமெனில், தொங்கும் மார்பகங்களை எடுப்பாகத் தோன்றும்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் அறுவை சிகிச்சையுடன் சேர்த்து நீங்கள் மார்பகத்தை எடுப்பாக்கும் ப்ரெஸ்ட் லிஃப்ட் சிகிச்சையும் செய்துகொள்ள வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் உள்ள சாத்தியமுள்ள அபாயங்கள்

மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இந்த அறுவை சிகிச்சையிலும் இரத்தப்போக்கு, நோய்த்தொற்று, மயக்கம் போன்ற சில அபாயங்கள் உள்ளன, அவற்றில் சில:

பொருத்தும் பொருளை தவறான இடத்தில் அல்லது தவறான நிலையில் வைத்துப் பொருத்திவிடுதல்
பொருத்தும் பொருள் சேதமடைதல் அல்லது அதில் கசிவு ஏற்படுதல்
செரோமா: பொருத்தும் பொருளைச் சுற்றிலும் திரவம் சேருதல்
கேப்சுலார் காண்ட்ராக்ச்சர்: பொருத்தும் பொருளைச் சுற்றிலும் இறுக்கமான வடுத் திசு உருவாதல்
நீடித்திருக்கும் வலி
மார்பகம் அல்லது முலைக் காம்பின் உணர்ச்சியில் மாற்றம் ஏற்படுதல்
பொருத்தும் பொருளுக்கு மேல் சுருக்கம் ஏற்படுதல்
தாய்ப்பாலூட்டுவதில் சிரமங்கள்
சரி செய்வதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய நேருதல்
இறுதிக் கருத்து

மார்பகங்களைப் பெரிதாக்கும் இந்த ப்ரெஸ்ட் ஆக்மென்டேஷன் அறுவை சிகிச்சையைச் செய்துகொள்வது என்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்கள், இதைச் செய்துகொள்வதில் உள்ள ஆரோக்கியம் சார்ந்த அபாயங்கள் ஆகிய இரண்டு விஷயங்களையும் நீங்கள் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் அல்லது கவலை இருப்பின் உங்கள் மருத்துவர்/பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரிடம் ஆலோசிக்கவும்.