Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மனதைக் கட்டுப்படுத்தாமல் தியானம் செய்தல்

மனதைக் கட்டுப்படுத்தாமல் தியானம் செய்தல்

34

முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனதின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்ன என்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள். மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்ததா என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதேபோன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும். இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதியடையும்.

தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவசியமற்றவர்களின் தொடர்புகளை விட்டுவிடுவதோடு மனதைக் குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.

மூன்று நிமிடத்தில் தியானம் செய்தல் :

இதனைச் செய்ய ஒரு நாளோ நேரமோ அவசியமில்லை. ஆரம்பித்த பின் தேவைக்கேற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். உடல் நேராக இருக்க வேண்டும் கையிலுள்ள பெருவிரலும் அதனை அடுத்த விரலும் இணைந்திருப்பது முக்கியமானதாகும். அதனை “சின்முத்திரா” என அழைப்பர். சின் முத்திரையில் மனதைச் செலுத்துவும்.

நடக்கும் போதோ, இருக்கும் போதோ, உரையாடும் போதோ, குளிக்கும் போதோ அதனைப் பயன்படுத்தலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு பயிற்சி மனதை ஒருநிலைப்படுத்த உதவும். அது எதுவாகவும் இருக்கலாம். பழக்கத்தில் வந்துவிட்டால் எங்கும் எதிலும் நாம் பயன்படுத்திப்பழகி வெற்றி பெறலாம்.

மூக்கு நுனியில் தியானம் செய்தல் :

நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு மூக்கின் நுனியில் பார்வையை நிலை நிறுத்தவும். மூக்கு நுனியினை உற்றுப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மூக்கின் நுனிபற்றிச் சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் அமைதியாக எதையும் நினையாமல் இருக்கலாமல் அல்லது ஏதாவது விருப்பத்திற்குரிய இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து இதனைச் செய்வதால் மனம் பழக்கப்பட்டு அமைதியடைந்து லயப்படும்.

சுவாசத்தையே அவதானித்து தியானம் செய்தல் :

எப்போதும் தியானம் செய்யும் போது மனம் அமைதியுடன் இருக்கத்தக்கதாக உடலைத் தளர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். நன்றாக மூச்சை உள் இழுத்து வெளி விடவும். பத்து தடைவைகள் மிக அமைதியாக ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளிவிடுக. பின்பு சாதாரணமாக சுவாசிக்குக. சுவாசிக்கும் போது மூக்குத் துவாரத்தினூடாகச் சுவாசம் செல்வது தொடக்கம் நுரையீரலை அடையும் வரை மனதைக் கொண்டு செல்லவும், மீண்டும் சுவாசம் வெளிவரும் வரை சுவாசத்தோடு மனதைக் கொண்டு வரவும். நாளடைவில் மனம் கட்டுப்பட்டு தியானம் சித்திக்கும்.

மன்னிப்புத் தியானம் :

இத்தியானம் செய்வதால் பிறரை மன்னிக்கும் மனப்பாங்கும், சகிப்புத் தன்மையும் உருவாகும். பதகளிப்பு, பதற்றம் அற்றுப் போவதோடு கொபம் குறைகின்றது. நிமிர்ந்து இருந்து கொண்டு நீங்கள் யாரால் பாதிக்கப்பட்டீர்களோ அவரது உருவத்தை மனதில் கொண்டு வந்து புருவத்தை உற்று நோக்கி அவரை மன்னித்தேன் எனப் பலமுறை கூறுங்கள். இதனால் அவரின் நடத்தையை மன்னிப்பதென்று அர்த்தமல்ல. அவரைப் பற்றிய கோப உணர்வை எம்மிடமிருந்து அகற்றுவதே அதன் நோக்கம். இதனால் நாம் பிறரிடம் கோபம் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது. மனம் அமைதியடைகின்றது.

மேலும் சில தியான முறைகள் :

தலையின் உச்சிக்கு அப்பால் ஒரு தாமரை இருப்பதாகக் கருதி அதன் மையத்தை குணமாகவும். காம்பை ஞானமாகவும் கருதித் தியானம் செய்யலாம்.

இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும் அதில் ஒரு சுடர் எரிவதாகவும் அச்சுடரை உங்கள் ஆண்மாவிற்கு ஆண்மாவாகிய கடவுளாகவும் நினைத்து தியானிக்கலாம்.

தொண்டைக்குழிக்குக் கீழே ஆமை வடிவில் அமைந்துள்ள நாடியில் மனதைச் செலுத்த மனம் அசைவுற்று நிற்கும் இதனை “கூர்ம நாட்யாம் ஸ்னைதர்யம்” என்ற பதஞ்சலி சூத்திரம் விளக்குகின்றது.

புருவக மத்தியில் மனதை நிலை நிறுத்தியும் தியானம் செய்யலாம்.

ஏதாவது கடவுளின் திருவுருவத்தை மனக் கண்ணில் கொண்டு வந்தும் தியானம் செய்யலாம்.

எம்மால் வீணாக்கப்படும் பல மணி நேரங்களில் ஒரு சில நிமிடங்களை தியானத்திற்கு செலவிட்டால் நிச்சயம் எங்கள் வாழ்வில் கோபம். பயம். துக்கம், கவலை, ஆசை என்பன நீங்கப்பெற்று நிரந்தர மன அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் உண்டாகி தெய்வீக சக்தியும் பெருகும். வாழ்வும் வளம்பெறும்.