Home உறவு-காதல் காதலுக்கும் நட்புக்கும் இடையில் ஒரு உறவு தெரியுமா?

காதலுக்கும் நட்புக்கும் இடையில் ஒரு உறவு தெரியுமா?

221

காதல் உறவு:அவன் எப்போதும் என்னிடம் கூறுவதுண்டு… தனக்கு இங்கே வேலை கிடைத்தது ஒரு மேஜிக் போலவென்று. நான் ஒரு எச்.ஆர் என்பது போலவோ, அவன் ஒரு சீனியர் என்ஜினியர் என்பது போலவோ நாங்கள் பழகியது இல்லை.

எனக்கு அவனை மிகவும் பிடிக்கும் என்பதை அவன் மிகவும் அறிவான். ஒருவேளை வேறு யாராவதாக இருந்தால், நிச்சயம் தவறாக நடந்துக் கொள்ள அல்லது ஆசைவார்த்தையிலாவது பேசி இருப்பார்கள் ஆனால் அவன் அப்படியானவன் அல்ல.

ஆரம்பத்தில் அவன் ஆட்டிடியூட் காண்பிக்கிறான் என்ற கருதினேன். அவனிடம் கெத்து காண்பிக்கும் குணாதிசயம் இருக்கிறது. நான் தான் அவனது ரெஸ்யூமை தேர்வு செய்தேன். நான் தான் அவனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும் அனுப்பினேன். ஆகையால், அடிக்கடி அவனிடம்… இது என்னால் உனக்கு கிடைத்த வாய்ப்பு. உன் வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு என கூறியதுண்டு.

எங்களுக்குள் இருப்பது காதல் எல்லாம் இல்லை. இதை வெறும் நட்பென்றும் கூற முடியாது. எனக்கு அவனை பிடித்திருக்கிறது அவ்வளவு தான். இதை க்ரஷ் என்று கூறுவதா… அல்ல இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது…

தனித்துவம்!
அவனை நான் முதன் முறையாக கண்டது ரெஸ்யூமில் தான். அவன் தனித்துவமானவன் என்பதை தனது ரெஸ்யூமிலேயே காண்பித்துவிட்டான். அனைவரையும் போல ஏனோதானோ என்று காபி – பேஸ்ட் செய்யாமல் ஒரு இன்ஃபோகிராபிக் போல செய்து, ஷார்ட் அன்ட் க்ரிஸ்பாக இருந்தது அவனது ரெஸ்யூம்.

ஆளும் அப்படிதான்!
அவன் ரெஸ்யூம் மட்டுமல்ல, அவன் ஆளும் கூட அப்படி தான் என்று முதல் முறை இன்டர்வியூவிற்கு வந்த போதுதான் அறிந்துக் கொள்ள முடிந்தது. மற்றவர்களை காட்டிலும் வேகமாக இன்டர்வியூ முடித்துவிட்டு கிளம்பிவிட்டான். இவனது தேர்வு முடிவுகளை கண்ட அணி தலைவர் உடனே செலக்ட் செய்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பிவிட கூறினார்.

காலை பத்து மணிக்கு வந்தவன், மதியம் இரண்டு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். நான் ஒரு நபருக்கு இவ்வளவு சீக்கிரம் அதற்கு முன் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்ததே இல்லை.

மளமளவென!
அவன் வளர்ச்சியும் அப்படியானதாக தான் இருந்தது. வந்த ஓராண்டுக்குள் அவனுக்கென தனி நண்பர்கள் கூட்டம். கல்சுரலஸ் என்றால் ஆட்டம் போடுவான். மற்ற நேரங்களில் அவன் இருக்கும் இடமே தெரியாது.

அவன் ஒரு விசித்திர பிறவி. நிறைய முறை அவனிடம் பேச வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால், எனது பொசிஷன், அவனிடம் போய் அலுவலக நேரங்களில் பேச முடியாமல் தடுத்தது.

சனிக்கிழமை!
சனிக்கிழமை எனக்கு வேலை நாள் அல்ல. ஆனால், முடிக்க வேண்டிய வேலை இருந்த காரணத்தால் ஒரு சனிக்கிழமை அலுவலகம் சென்றேன். அன்று அவனும் அவனது அணியில் சிலரும் அலுவலகம் வந்திருந்தனர். ஒட்டுமொத்த தளத்திலும் அவர்கள் மட்டுமே, அலுவலகத்தில் நுழையும் போது அவனது சிரிப்பொலி பயங்கரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் அவ்வளவு ஜாலியாக பேசி, சிரிப்பவன் என்று அன்று தான் கண்டறிந்தேன்.

முதல் மெசேஜ்!
நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, அவனுக்கு முதல் குறுஞ்செய்தி அனுப்பினேன். கேசுவலாக ரிப்ளை செய்தான். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம். அவன் வீட்டார், என் வீட்டார் பற்றி கேட்டறிந்துக் கொண்டோம். அவன் ஒரு ஓட்டை வாய் என்பதும் அன்று தான் தெரிந்தது. கொஞ்சம் பேசி பழகினால் போதும். அவனை பற்றி முழுவதையும் கூறிவிடுவான். வெட்கம், கூச்சம் என்று எதுவுமே கிடையாது.

காதல் திருமணம்!
என்னுடையது காதல் திருமணம். நான் ஒரு வாயாடி. ஆனால், கணவர் சீரியஸான பிஸ்னஸ் மேன். எங்களுக்கான உறவு மிகவும் ஆரோக்கியமானது. என்னைப் போல வேறு எந்த பெண்ணாலும் கணவனுக்கு தொல்லை கொடுக்க முடியாது என நானே அடித்து சத்தியம் செய்வேன். எனக்கு யார் மீது க்ரஷ் வந்தாலும், கணவரிடம் தான் முதலில் கூறுவேன். என் லிமிட்ஸ் என்ன என்பது முழுமையாக அறிந்தவர், என்னை முழுமையாக அறிந்தவர் அவர்.

புகார்!
தன் மீது எந்த ஒரு புகரும் எழுந்துவிடக் கூடாது என்பது மிக கவனமாக நடந்துக் கொள்வான் அவன். அவனை பற்றி பேசும் அனைவரும் நல்லவிதமாகவே பேசினார்கள். ஒரு நாள் அவன் செய்யாத தவறுக்கு அணி தலைவர் அவன் மீது கோபித்துக் கொண்டார் என்பதற்காக, தனது அனைத்து கேலி, கிண்டல் விஷயங்களையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டான். அலுவலகம் வருவான், வேலையை பார்ப்பான். வேலை முடிந்த மறு நிமிடம் கிளம்பிவிடுவான்.

மாற்றம்!
அலுவலகத்திற்கு வெளியே அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அலுவலகத்திற்கு உள்ளே அவனிடம் பல மாற்றங்கள் காணப்பட்டன. ஒரு புகாருக்கே தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டான். ஒரு நாள் அவனை அழைத்து பேசிய போது தான், அவன் செய்யாத தவறுக்கு மேலாளர் கோபித்துக் கொண்டதன் விளைவாக, இப்படி நடந்துக் கொள்வதாக கூறினான். பிறகு, அவன் மேலாளரிடம் நானாக, இதுகுறித்து கூற, பிறகு இருவரும் பேசி ஒரு சமாதான நிலைக்கு வந்தனர்.

முதிர்ச்சி!
எந்த சூழலாக இருந்தாலும், அதை அவன் கையாளும் முறை வித்தியாசமாக இருக்கும். எப்போதுமே ஒரு சிரிப்புடன் துவங்கும் அவனது உரையாடலை போல. அவனிடம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி கண்டேன். ஒருவேளை அவன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கிறானா? அல்ல என்னிடம் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லையா என்ற சந்தேகமும் பலமுறை எழுந்தது. அதையும் அவனிடமே கேட்டறிந்தேன்.

தத்துப்பிள்ளை!
ஒருமுறை, அலுவலகத்தில் அனைவரும் சென்ற பிறகு, இவன் மட்டும் வேலை செய்துக் கொண்டிருந்தான். அன்று தான் நானும், அவனும் நிறைய பேசி பகிர்ந்துக் கொண்டோம். அன்று தான் தனது மற்றொரு முகத்தை அவன் காட்டினான்… அவன் உண்மையான பெற்றோர் யார் என்று அவனுக்கே தெரியாது. அவனை இப்போது வளர்த்து வருபவர்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். வளர்ப்பு தாய் – தந்தையர் பாசமாக இருந்தாலும், குடும்பத்தில் மற்ற அனைவரும் இவனை ஒரு வேண்டாதவனாகவும், அவர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டவனாகவும் தான் பார்க்கிறார்கள் என்று கூறினான்.

சொந்தம்!
அப்பா, அம்மா, நண்பர்களை தாண்டிய வேறு சொந்தம் இல்லை என்றும். தான் இருப்பதால் உறவினர்கள் அப்பா, அம்மாவிடம் கண்டதை பேசி சிலமுறை சண்டையிடுவதை கண்டதால் சிறு வயதிலேயே ஹாஸ்டல் சேர்ந்துவிட்டதாகவும் கூறினான். பத்து வயதில் இருந்து நண்பர்கள் மட்டுமே என் வாழ்க்கை. அவர்களை தாண்டி எனக்கு பெரிய சொந்தமும், சொத்தும் இல்லை என்று கூறினான்.

அனுபவம்!
ஒருவரின் அனுபவம் என்பது அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தனர், எத்தனை வயது மூத்தவர் என்பதில் இல்லை. அவர்கள் எத்தனை கற்றுக் கொண்டனர், கற்ற பாடத்தில் இருந்து எத்தனை அறிவு வளர்த்துக் கொண்டார்கள் என்பது தான் அனுபவம் என்று ஏதேதோ கருத்தாக பேச துவங்கினான். அவன் கூறிய வார்த்தைகள் என் மண்டைக்கு ஏறவில்லை எனிலும், அவனுள் இருந்த வலியை என்னால் அறிய முடிந்தது.

நாணயம்!
வாழ்க்கை நாணயம் போன்றது, நம் முன் சிரித்து பேசிக் கொண்டிருப்பவர்களின் மனதில் எத்தனை வலி இருக்கும் என்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடியாது, அவனும் அப்படி தான், என்னுள் அவன் மீது இருந்த ஒருவித ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது. என் கணவரிடம் அவனது நிலை குறித்து கூறி நான் அழுததும் உண்டு. காதல், நட்பு இந்த இரண்டுக்கும் நடுவே வேறு ஒரு உறவும் இருக்கிறது. ஆனால், அதற்கு பெயர் தான் இல்லை. நான் அவன் மீது கொண்டிருக்கும், ஈர்ப்பும், அன்பும் அப்படியானது தான்.