Home குழந்தை நலம் குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?

குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?

33

பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான குணத்துடன் இருப்பதில்லை. சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலர் கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் அமைதி என்ற குணம் பெற்றிருப்பார்கள். சிலர் குறும்புத்தனம் நிறைந்தவராக காணப்படுவார்கள். இந்த குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். மற்ற மாணவர்களை அடித்தும், கேலி செய்தும் மிரட்டுவது உண்டு.

இதுபோன்ற வம்பு செய்யும் மாணவர்களை பார்க்கும் போது பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படுவதுண்டு. சில மாணவர்களுக்கு இது பெரிய மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். அதுபோன்ற நிலையில் குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.

குறும்பு செய்யும் மாணவர்களைக்கண்டு பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்களை முற்றிலும் புறக்கணியுங்கள். உங்கள் அருகில் அந்த மாணவன் வந்தாலும் அவனை உதாசீனப்படுத்துவது போல நடந்து கொண்டு உங்கள் வேலையில் நீங்கள் கவனமாக இருங்கள். பொதுவாக குறும்புக்கார மாணவர்களின் எண்ணமே உங்களை பயமுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர்களைக்கண்டால் நீங்கள் பயந்து நடுங்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அதற்கு இடம்கொடுக்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் பயத்தை வெளிப்படுத்தக்கூடாது.

உங்கள் எதிர்ப்பை அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக தெரிவிக்க தயங்க கூடாது. அதாவது குறும்பில் ஈடுபடும் மாணவரின் முகத்துக்கு நேராக ‘நீ செய்வது சரியல்ல’ என்று உரத்த குரலில் சொல்லுங்கள். உங்களின் உறுதி அவர்களுக்கு உங்கள் மீதான பயத்தை அதிகரிக்கும். உங்களை கேலி செய்து ஏதாவது குறும்பு செய்தால் நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு சிரியுங்கள். ‘இதுபோன்ற அசட்டுத்தனத்தை செய்யாதே’ என்று எச்சரியுங்கள்.

குறும்புக்கார மாணவரிடம் தனியாக மாட்டிக்கொள்ளாதீர்கள். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றுவிடுங்கள். மேலும் எப்போதும் நீங்கள் பிற நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது பாதுகாப்பானது. உங்களை கேலி செய்தால் அதைக்கேட்டு மனம் வருந்தக் கூடாது. உங்களை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். எனவே அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

பழிக்குப்பழி என்று எதிலும் இறங்க வேண்டாம். அதுபோல தொந்தரவு அதிகரித்தால் அதை பிறரிடம் தெரிவிக்க தயங்கவும் கூடாது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை தெரிவித்து அதை கவனமாக கையாள வேண்டும். இதற்கு தயங்கவோ, பயப்படவோ கூடாது.