Home உறவு-காதல் காதல் ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

காதல் ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

39

உலகம் முழுவதும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ‘காதல்’ என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல், இதயத்தை இன்பத்தில் துடிக்க வைக்கக்கூடியது. அந்த காதல் முழு இன்பத்தை தரவேண்டும் என்றால், காதல் ஜோடிகள் காதலிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

‘நீதான் என் உயிர் மூச்சு. நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது?’ என்ற அளவுக்கு அதிகமாக ஜோடிகள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசிவிடக்கூடாது. பொறுப்பற்று, இனக்கவர்ச்சியால் காதலுக்கு உட்படுகிறவர்கள்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை பிரயோகிப்பார்கள். இருவரும் நன்கு புரிந்துகொண்டு, பழகிய பின்பு வருவதே உண்மையான காதல். உண்மையாக காதலிப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டமாட்டார்கள்.

ஒருவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கினால், அவரை காதலிப்பதற்கு என்ன காரணம் என்பதை உங்களுக்குள்ளே ஆராயவேண்டும். அவரிடம் உங்களை ஈர்த்த விஷயம் என்ன என்பது தெள்ளத் தெளிவாக உணரப்படவேண்டும். அழகை பார்த்தோ, நடை- உடை -பாவனையை பார்த்தோ, இனிமையான பேச்சை ரசித்தோ, அவரிடம் தோன்றும் பகட்டை விரும்பியோ காதலித்துவிடக்கூடாது. அவை காதலிக்கும்போது இனிமையை தரலாம். திருமண பந்தத்தில் இணையும்போது வாழ்க்கையை சுவாரசியமற்றதாக ஆக்கிவிடும். ஒருமித்த எண்ணமும், புரிதலும், விட்டுக்கொடுத்து போகும் தன்மையும் காதலிக்கும்போது மட்டுமின்றி என்றென்றும் பின்தொடர்ந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.

உங்களை ஒருவர் பின்தொடர்ந்து வந்தார் என்பதற்காக காதலில் விழுந்துவிடக்கூடாது. ஆரம்பத்திலேயே காதலிப்பவரை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை பற்றியோ, வசிக்கும் இடத்தை பற்றியோ, வேலை பார்க்கும் இடத்தை பற்றியோ சொல்ல தயங்குபவர்களிடமும், கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்பவர்களிடமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவருடைய நடத்தையிலோ, பேச்சிலோ குழப்பங்கள் தெரிந்தால் நேரடி யாகவே கேட்டுவிட வேண்டும். அவர் சொல்லும் பதில் எந்த அளவுக்கு திருப்தி தருகிறது என்பதை அளவிடவேண்டும். தன்னை பற்றிய தகவல்களை மறைப்பவர்கள், தவறான தகவல்களை கூறுபவர்கள் ஏமாற்று பேர் வழியாக இருப்பார்கள்.

எல்லை மீறல்களில் உடல்ரீதியானவை மட்டுமல்ல, உணர்வுரீதியானவையும் உண்டு. எப்போதும் கோபப்படுவது- எதற்கெடுத்தாலும் குறைசொல்வது- திட்டுவது- செல்ல சண்டை என்ற சாக்கில் கைநீட்டி அடிப்பது போன்ற வைகளில் எல்லாம் அவர் ஈடுபட்டால் உஷாராகி விடுங்கள். இவைகளெல்லாம் உங்கள் மீதான அக்கறையில் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியமாக நினைத்துவிடாதீர்கள்.

இவை எல்லாம் ஒருவகை உணர்வு ரீதியான எல்லைமீறல்கள். இப்படி எல்லைமீறுகிறவர் களை திருத்தமுடியாது. காதலிக்கும்போது உங்கள் ஜோடியின் பேச்சை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். இனிக்க, இனிக்க பேசி வாய் பேச்சில் வல்லவராக இருப்பவரை முழுமையாக நம்பிவிடவேண்டாம். வசீகர வார்த்தைகளுக்கு மயங்கிவிடக்கூடாது. அதுபோல் அந்தரங்கமாக பேச தொடங்கினால் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களின் காதல் நோக்கம் சரியாக இருக்காது.

‘நாம்தாம் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டோமே? தொட்டு பேசக்கூடாதா?’ என்று எல்லை மீற அனுமதித்துவிடக்கூடாது. எல்லை மீறும் காதல் உண்மையான காதலாக இருக்க முடியாது.

நன்கு பழகிய பின்பு காதலர் மோசமான நபர் என்று தெரிந்தால், தயக்கமின்றி அவரை விட்டு விலகி விட வேண்டும். அதற்காக சட்டென்று அவர் மனம் நோகும்படி பேசியோ, அறவே வெறுத்தோ ஒதுக்கிவிடக்கூடாது. அது எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவர் மனம் நோகாதபடி தொடர்பை படிப்படியாக துண்டிப்பதுதான் புத்திசாலித்தனம். அவருடன் அதிக நேரம் பேசுவது, பொழுதுபோக்குவது போன்றவற்றை குறைத்துக்கொண்டே வர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபத்தையோ, உணர்ச்சியையோ வெளிப்படுத்தி விரிசலை விபரீதத்திற்குரியதாக மாற்றிவிடக்கூடாது. எல்லா காதலர்களும் காதலியை பழி வாங்க துடிப்பதில்லை. பக்குவமாக பேசினால் புரிந்து கொண்டு பிரிந்து போகும் காதலர்களும் இருக்கிறார்கள்.

காதலித்தவரை கரம் பிடிப்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களோ? அதேபோல் பெற்றோரின் சம்மதத்தை பெறுவதிலும் உறுதியாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு பெற்றோரை பகைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வதற்கு முயற்சிக்கக்கூடாது. காதல் என்பது இரு மனம் சார்ந்த விஷயம். ஆனால் திருமண பந்தம் அப்படிப்பட்டதல்ல.

குடும்பத்தை பகைத்து கொண்டு காதல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதிலும் இந்த காலகட்ட காதல் திரு மணங்கள் குறுகிய ஆயுள் கொண்டவையாகவே இருக்கின்றன. காதலனை கரம் பிடித்த ஒருசில மாதங் களிலேயே, ‘அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ?’ என்று கலங்கும் பெண்கள் அதிகம். அவர்களுக்கு துயரங்களும் ஏராளம். அப்படி ஒரு நிலைமை உருவாக இடம் கொடுக்காமல் பெற்றோர் சம்மதத்துடன் காதல்- திருமண வாழ்க்கையாக மலர்ந்து, இல்லறம் இனிக்கட்டும்.