Home குழந்தை நலம் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

31

சிறியவர்களிடம் தனது அதிகாரம் அல்லது சக்தியைப் பயன்படுத்தி பெரியவர் அல்லது வளர்ந்தவர் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் ரீதியாக தகாதமுறையில் நடந்துகொள்வதை குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் என்கிறோம். இத்தகைய செயல்கள் பொதுவாக, வளர்ந்தவரின் பாலியல் கிளர்ச்சிக்காகச் செய்யப்படுகிறது. சில சமயம், தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது கூட குழந்தைக்குப் புரியாமல் இருக்கலாம். குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் என்பது தொட்டுச் செய்யும் செயல்கள் அல்லது தொடாமல் செய்யும் செயல்கள் என இரண்டு வடிவங்களிலும் இருக்கலாம்.

தொட்டுச் செய்யும் குற்றங்களில் சில (Touching offences includes):
குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகளைத் தொடுதல் அல்லது செல்லமாகச் சீண்டி விளையாடுதல்
வளர்ந்தவர் ஒருவர், குழந்தையைத் தனது இனப்பெருக்க உறுப்பைத் தொடச் செய்தல்
குழந்தையின் பெண்ணுறுப்பு அல்லது ஆசனவாயில் உடல் அங்கங்களை (விரல், நாக்கு அல்லது ஆணுறுப்பு) அல்லது பிற பொருள்களை நுழைத்தல்
தொடாமல் செய்யும் குற்றங்களில் சில (Non-touching offences include):
ஆபாசப் படைப்புகளைக் காண்பித்தல்
வளர்ந்தவர் தனது இனப்பெருக்க உறுப்பை குழந்தைக்குக் காண்பித்தல்
பாலியல் ரீதியான தோரணையில் குழந்தையைப் படம்பிடித்தல்
குழந்தையின் முன்பு சுயஇன்பம் செய்தல்
உடலுறவைப் பார்க்கும்படி ஒரு குழந்தையைக் கட்டாயப்படுத்துதல்
இணையத்தில் குழந்தைகளின் பாலியல்ரீதியான படங்கள், வீடியோக்களை உருவாக்குதல், இணையத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்குதல் என்கிற மற்றொரு பெரிய குற்றமும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்களை குழந்தைகளின் ஆபாசப் படைப்புச் செயல்பாடுகள் என்கிறோம்.

இப்படிச் செய்பவர்கள் யார்? (Who can be the abuser?)
ஒரு குழந்தையுடன் தகாத முறையில் நடந்துகொள்பவர்கள் பெரும்பாலும் குழந்தைக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள ஒருவராகவோ, குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலை செய்பவராகவோ, ஆசிரியராகவோ அல்லது அருகில் வசிக்கும் நபராகவோ இருக்கலாம்.
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களில் 10 இல் 3 இல் சம்பந்தப்பட்ட குற்றமிழைக்கும் நபர் மாமா, பெரியப்பா, சித்தப்பா, உறவினர் பிள்ளைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களாகவே உள்ளனர், சில சமயம் தந்தைகளே கூட குற்றத்தில் ஈடுபடுவதுண்டு.
பெரும்பாலும் துஷ்பிரயோகச் செயலில் ஈடுபடுபவர்கள் ஆண்களாகவே உள்ளனர். ஆனால், சில சமயம் பெண்களும் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதுண்டு.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இதைப் பற்றி குழந்தைகள் யாரிடமும் சொல்லக்கூடாது என்று பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பயமுறுத்தி வைப்பார்கள். பொதுவாக தங்களுக்குள்ள அதிகாரம், பலத்தைக் கொண்டு அவர்களை தனக்குக் கட்டுப்ப்படும்படி செய்வார்கள். சில சமயம் இவர்கள், இந்தச் செயல்கள் சாதாரணமானவை தான் என்று அல்லது விளையாட்டுக்காகத்தான் என்று சொல்லி நம்பவைப்பதுண்டு. சில சமயம் இவர்கள், குழந்தைகள் தங்கள் சொல்வதைக் கேட்பதற்காக இலஞ்சமாக சாக்லேட், பரிசுப் பொருள்கள் போன்றவற்றைக் கொடுத்து அடிபணிய வைப்பதுமுண்டு.

நல்லவர் போல நடித்து நபிக்கையைப் பெறுவார்கள் (What is grooming?)
குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொள்பவர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி, குழந்தையின் பெற்றோர்கள், குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பணியாளர்கள் மற்றும் ஆசியர்களிடம் நல்ல பெயரும் நம்பிக்கையும் பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் குழந்தைகளை எளிதில் அணுக முடிகிறது.

இது போன்ற செயல்களுக்கு சில உதாரணங்கள்:

அடிக்கடி குழந்தையைப் பார்த்துக்கொள்வது
குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பரிசுகளைக் கொடுத்து, செல்லம் கொஞ்சுவது
பெற்றோர் அல்லது மற்ற குழந்தைகளிடம் இருந்து குழந்தையைத் தனியே அழைத்துச் செல்ல முயற்சி செய்வது
குழந்தைக்குப் பிடிக்கவில்லை, சங்கடமாக உள்ளது என்றாலும், குழந்தைக்கு முத்தம் கொடுப்பது, அணைப்பது, கட்டிப்பிடித்து விளையாட்டுக்குச் சண்டை போடுவது அல்லது கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உடலைத் தொடும் செயல்களைச் செய்வது
குழந்தையின் பாலியல்ரீதியான வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவது
குழந்தையை அதிகமாகப் படம்பிடிப்பது
பாலியல் துஷ்பிரயோகத்தின் அறிகுறிகள் (What are the signs of sexual abuse?)
ஒரு குழந்தை பாலியல்ரீதியாக தகாத முறையில் நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிவது மிகக் கடினம். ஒரு குழந்தை பாலியல்ரீதியாக தகாத முறையில் நடத்தப்பட்டால், அதைக் குறிக்கும் சில மாற்றங்களை அவர்களின் உடலிலும் நடத்தைகளிலும் காணலாம். இது குறித்து எச்சரிக்கும் அறிகுறிகள் சில:

உடல் சார்ந்த அடையாளங்கள் (Physical signs)
இரத்தக் கறை படிந்த அல்லது கிழிந்த உள்ளாடைகள்
இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வீக்கம், சிராய்ப்பு அல்லது இரத்தம்
இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் வலி அல்லது எரிச்சல்
நடப்பதற்கு அல்லது உட்காருவதற்குச் சிரமப்படுதல்
அடிவயிற்றில் வலி
நடத்தை சார்ந்த அடையாளங்கள் (Behavioural signs)
காரணமின்றி அழுதல், பயப்படுதல்
யாரேனும் தொட்டால், பயப்படுதல்
நண்பர்கள் மற்றும் குடும்பத்திலிருந்து ஒதுங்கிச் செல்லுதல்
தூக்கத்தில் பிரச்சனை அல்லது கெட்ட கனவுகள்
குறிப்பிட்ட நபர் அல்லது இடங்களைக் கண்டு பயப்படுதல்
பள்ளிக்கோ அல்லது தகாத முறையில் நடத்தப்பட்ட இடத்திற்கோ செல்ல மறுத்தல்
ஒரு குழந்தை, தன் பிறப்புறுப்புப் பகுதி அழுக்காகிவிட்டதாக அல்லது ஏதோ தவறாக இருப்பதாகக் கூறலாம்
முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுதல்
விரல் சூப்புதல் அல்லது படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற, சிறு வயதுப் பழக்கங்கள் மீண்டும் வருதல்
தற்கொலை எண்ணங்கள்
பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தையை எப்படிப் பாதுகாப்பது? (How can you protect your child from sexual abuse?)
பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து உங்கள் குழந்தையை முற்றிலுமாகப் பாதுகாக்க திட்டவட்டமான வழிமுறை எதுவும் இல்லை. எனினும், அதற்கான வாய்ப்புகளைக் குறைக்க சில முக்கிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம். பாலியல் துஷ்ப்பிரயோகத்திலிருந்து உங்கள் குழந்தையைக் காக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இப்போது காணலாம்:

உங்கள் குழந்தையின் வாழ்வில் உள்ள எல்லோரையும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்: உங்கள் குழந்தைகள் பிற குழந்தைகள் அல்லது பெரியவர்கள் போன்று யாருடன் நேரம் செலவழிக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி, நடனப் பயிற்சி ஆசிரியர், பிற குழந்தைகளின் பெற்றோர், பள்ளி வாகன ஓட்டுனர், அட்டெண்டர் போன்று உங்கள் குழந்தை தனது தினசரி வாழ்வில் சந்திக்கும் நபர்கள் பற்றி உங்கள் குழந்தையிடம் பேசுங்கள்.
அவர்களின் தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுங்கள்: அவர்கள் சந்திக்கும் நபர்களுடன் அவர்கள் எப்படி நேரம் செலவிடுகிறார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். எப்போதாவது அவர்களுக்க் சங்கடமாக அல்லது வித்தியாசமாக ஏதேனும் நடந்ததா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் சந்திக்கும் நபர்களில் யாரேனும் குறித்து அவர்களுக்கு சங்கடமோ அசௌகரியமோ உள்ளதா என்று கேளுங்கள்.
உங்களிடம் நன்றாகப் பேச ஊக்கப்படுத்துங்கள்: எப்போதும் உங்கள் குழந்தையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள், அவர்கள் கூறுவதைக் காதுகொடுத்து பொறுமையாகக் கேளுங்கள். இந்த நல்ல தொடர்புதான் அவர்களுக்கு ஏதேனும் தவறாக நடக்கும்போது அதைப் பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்கும்.
இந்தப் பிரச்சனை குறித்து எச்சரிக்கும் அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா எனப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்: பாலியல் துஷ்பிரயோகத்தின் அடையாளங்கள், அறிகுறிகள் பற்றி நீங்கள் நன்கு தெரிந்துகொண்டு, அவர்களிடம் சிறிய அளவேனும் உடல் அல்லது நடத்தை சார்ந்த அந்த அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா எனக் கண்காணித்து அறியுங்கள்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல்: சிறு வயதிலிருந்தே உங்கள் குழந்தைகளுக்கு, பாதுகாப்பான தொடுதல் என்றால் என்ன பாதுகாப்பற்ற தொடுதல் என்றால் என்ன என்று கற்றுக்கொடுங்கள். அவர்களின் இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளை யாரும் தொடக்கூடாது என்று அவர்களிடம் கூறுங்கள். அவர்களும் யாருடைய இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளையும் தொடக்கூடாது என்றும் கூறிவையுங்கள். அப்படித் தொடுமாறு யாரேனும் கேட்டால் அல்லது வற்புறுத்தினால் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டும், அத்துடன் அதைப் பற்றி பெற்றோரிடம் அல்லது நம்பகமான ஒருவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுங்கள்.
விழிப்புடன் இருங்கள்: உங்கள் குழந்தையுடன் வேறொரு குழந்தையோ அல்லது பெரியவரோ தனியாக இருக்க விரும்புகிறார்களா என்று கவனமாகக் கண்காணியுங்கள். மேலும், உங்கள் குழந்தை மீது அதீதமாக யாரேனும் பாசமாக நடந்துகொண்டால் அவர்கள் விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
யாரிடம் தெரிவிக்க வேண்டும்: இப்படி யாரேனும் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டால், அதுபற்றி அவர்கள் யாரிடமெல்லாம் கூறலாம் என்று அவர்களுக்குக் கூறுங்கள்.