Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற் பயிற்சி தேவையா? எது எவ்வளவு நேரம்?

உடற் பயிற்சி தேவையா? எது எவ்வளவு நேரம்?

20

நீரில் இறங்காமல் நீச்சலா?

பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று.

“நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை… இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது.”

இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை.

ஆனால், நீரில் இறங்காமல் நீந்தப் பழக முடியுமா?

உடற்பயிற்சி எவ்வளவு தேவை?

உடற்பயிற்சி எல்லோருக்கும் அவசியம்தான். ஆனால், எவ்வளவு தேவை?

இதுபற்றிய மருத்துவர்களின் கருத்துகள் கூட காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது.

“வாரத்தில் மூன்று நாட்களுக்கேனும் 20 நிமிடங்களாவது ஓடுவது போன்ற கடும் பயிற்சி தேவை” என 70- 80 களில் கூறினார்கள்.
ஆனால், 90 களில் கடும் பயிற்சி தேவையில்லை. வேகமாக நடப்பது போன்ற நடுத்தர வேகமுள்ள பயிற்சிகளை வாரத்தில் 5 நாட்களுக்கேனும் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும் என்றார்கள்.
இப்பொழுது தினமும் 60 நிமிடங்கள் வரையான நடுத்தர பயிற்சி மீண்டும் என்கிறார்கள்.
எனவே, உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

ஒரு ஆய்வு

மாதவிடாய் நின்றுவிட்ட, அதீத எடையுள்ள, உடலுழைப்பு அற்ற 464 பெண்களை உள்ளடக்கிய ஆய்வு அது. ஆறு மாதங்கள் செய்யப்பட்டது. உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வெவ்வேறு அளவிலான பயிற்சிகளைச் செய்தவர்கள் என நான்கு பிரிவினராக வகுத்துச் செய்யப்பட்ட ஆய்வு அது.

தினசரி 10 நிமிடங்கள் அதாவது வாரத்தில் 75 நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்தவர்களுக்குக்கூட அவர்களது இருதயத்தினதும் சுவாசப்பையினதும் ஆரோக்கியமானது எந்தவித பயிற்சிகளையும் செய்யாதவர்களை விட அதிகரிக்கிறது என அவ் ஆய்வு புலப்படுத்தியது.

ஆனால், இந்தளவு பயிற்சியானது ஒருவரின் எடையைக் குறைக்கவோ, பிரஸரைக் குறைக்கவோ போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆயினும், வயிற்றின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கிறது. இது பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குறைந்த அளவிலான பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் மேம்பட்டால் பிற்பாடு கூடியளவு பயிற்சி செய்வதற்கான உடல் நிலையையும் மேலும் தொடர்ந்து பயிற்சிகளைத் தொடர்வதற்கான மன ஊக்கத்தையும் பெறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது மேலும் கூடிய உடல் ஆரோக்கிய எல்லைகளை எட்டுகிறார்கள் என்பதே முக்கியமானது.

பயிற்சிகள் எத்தகையவை

இரண்டுவிதமான உடற்பயிற்சிகள் அவசியமாகும்

லயவயப்பட்ட அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises)
இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்திற்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், காற்பந்தாட்டம், ஹொக்கி, தனி டெனிஸ், தற்காப்பு கலைகள்(martial arts ), வேகமான நடனம் போன்றவை)
ஆனால் நடுத்தர வேகத்தில் (வேகமான நடை, நீச்சல்,கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இரட்டையர் டெனிஸ், சைக்கிள் ஓட்டம் போன்றவை) செய்வதானால் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
ஓரிரு நாட்களில் அத்தனை பயிற்சியையும் செய்து முடிப்பதை விட வாரத்தில் 5 முதல் 7 நாட்களுக்கும் பிரித்துச் செய்வது நல்லது.
கடுமையானது மற்றும் நடுத்தரமானது ஆகிய இரண்டையும் கலந்து செய்பவர்களும் உண்டு.
2. தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training)

இவற்றை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது செய்ய வேண்டும்.
உதாரணமாக எடை தூக்குதல், மலை ஏறுதல், கொத்துதல் போன்ற கடுமையான தோட்ட வேலை, உடற்பயிற்சி இயந்திரங்களில் பயிற்சி போன்றவை.
யோகசனமும் இவ் வகையைச் சேர்ந்ததே.
எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.

எடையையும் குறைக்க விரும்பினால் பயிற்சிகளை வாரத்தில் 300 நிமிடங்களாவது செய்ய வேண்டும். அதாவது சராசரியாக தினசரி 45 நிமிடங்கள் தேவைப்படும்.