Home சூடான செய்திகள் வாழ்கை பயணத்தை மகிழ்ச்சியாக்க ஹனிமூன் உறவு

வாழ்கை பயணத்தை மகிழ்ச்சியாக்க ஹனிமூன் உறவு

50

சூடான செய்திகள்:திருமணத்திற்கு பிறகு, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் முதல் பயணம் ஹனிமூன் ட்ரிப். பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத தடங்கல்களை சமாளித்து, கணவன் மனைவி இருவரும் தங்களின் ஹனிமூன் பயணத்தை எப்படி மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதற்கான டிப்ஸ் இதோ

அன்பை வளர்க்கும் பயணம்

பொதுவாக கணவன் மனைவி தனியாக பயணம் செய்யும் போது, பிணைப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மனம் விட்டுப் பேசுவது, அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வது. எதிர்பாராத பிரச்னைகளை கையாள்வது, நம்பிக்கையை வளர்ப்பது, உணர்வுகளை புரிந்து கொள்வது, தொடுதல் மூலம் அன்பை உணர்வது என, ஒருவரைப் பற்றி ஒருவர் ஆழ்ந்து அறிவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆனால், இதெல்லாம் உங்கள் பயணத்தை சரியாக திட்டமிடும் போது மட்டுமே சாத்தியம்.

ஏனென்றால், திட்டமிடாமல் பயணம் செய்யும் போது, கணவன் மனைவி இருவருக்கும் பயணத்தினால் ஏற்படும் சங்கடங்களை எதிர்கொள்ளவும், விவாதம் செய்யவுமே நேரம் சரியாக இருக்கும். அதன்பிறகு இப்படி ஒரு ட்ராவலே செய்யாமல் இருந்திருக்கலாம் என்ற உணர்வு இருவருக்கும் வந்துவிடும். முதல் பயணமே இப்படி தோல்வியில் முடிந்தால், இருவருக்கும் ஏமாற்றம் தான் ஏற்படும்.

பயணத்தை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வதற்கான வழிகள்:

எத்தனை நாட்கள் என்பதைவிட எவ்வளவு தரமானது என்பதே முக்கியம்
திருமணமானவுடன் முதலில் வீக்கெண்ட் டிரிப்பாக பயணம் செய்வது சிறந்தது. ஏனென்றால், அப்போது தான் பயணத்தின் போது வரும் சவால்களை அறிந்து கொள்வதோடு சமாளிக்கவும் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். அதன்பிறகு தொலைதூர பயணங்களை தெளிவாகவும், தன்னம்பிக்கையோடும் திட்டமிடலாம். அதே போல் எவ்வளவு நாட்கள் பயணம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை, பயணத்தின் போது இருவரும் எவ்வளவு தரமாக நேரம் செலவு செய்கிறார்கள் என்பதே முதன்மையானது. இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும் கணவன் – மனைவி இருவருடனும் பயணிக்க போகிறது என்பதால், அங்கேயும் சென்று மொபைலையும், அலுவலக வேலையையும் விட்டுவிட்டு பயணத்தை முழுவதுமாக கொண்டாடுங்கள்.

பார்ப்பதற்கில்லை, பயணம் பழகுவதற்கே
ஹனிமூன் பயணத்தின் போது, கணவன் மனைவி இருவரும் தனியாக நேரம் செலவு செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கே நேரம் எடுத்துக் கொண்டால், ரொமான்ஸ் செய்வதற்கான நேரம் கிடைக்காது. உதாரணத்திற்கு, காலை, 7:00 மணிக்கு தொடங்கி இரவு, 10:00 மணி வரை, இருவரும் சுற்றுலா இடங்களை மட்டுமே பார்ப்பதற்கு செலவு செய்தால், சீக்கிரம் சோர்வடைவது மட்டுமில்லாமல், பழகுவதற்கான வாய்ப்பே பயணத்தில் குறைந்துவிடும். அதனால் ஒரு சின்ன விளையாட்டு, பிரைவேட் பீச் டின்னர், தீம் அல்லது கேண்டில் லைட் டின்னர், ஸ்பா போன்ற ரிலாக்ஸான விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், இதற்காகவே இருவரும் மற்றுமொரு பயணத்தை திட்டமிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சிறிது இடைவெளி நல்லதே
ஹனிமூன் என்பதால் எப்போதும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இந்தப் பயணத்தின் நடுவே இருவரும் உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, தனியாக ஷாப்பிங் செல்வது, நடைபயணம் போவது, நீச்சல் குளத்தில் நேரம் செலவு செய்வது, இசைக் கருவி வாசிப்பது, விளையாடுவது என, சிறிது இடைவெளி கணவன் மனைவி இருவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டாதீர்கள்
கணவன் மனைவி பயணம் செய்யும் போது வரும் எதிர்பாராத பிரச்சனைகளுக்கு, இருவரும் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு பயணத்தை வீணக்கடிக்காமல், அங்கு நடக்கும் சங்கடங்கள் மற்றும் ஆபத்துகளை இருவரும் இணைந்தே தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களின் புரிதலை, பிணைப்பை பரிசோதித்து பார்க்கும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களை, இருவரும் சிறப்பாக கையாளப் பழகுவதே நீண்டகால அன்பான உறவுக்கு அடித்தளம்.

எதிர்பாராத பிரச்னைகளை தவிர்க்க
பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் ஊட்டி, கொடைக்கானல் அல்லது வெளிநாடுகளாக இருந்தாலும், அந்த இடத்தின் அப்போதைய காலநிலைப் பற்றிய விவரங்களை முன்னரே அறிந்து கொள்வது அவசியம். அதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் உள்ள வெள்ள அபாயம், புயல் அல்லது வேறு ஏதாவது பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறதா என்பதை விசாரித்து விட்டுச் செல்வது, பயணத்தை பாதுகாப்பாக அமைய செய்யும். மெடிக்கல் கிட் வைத்து கொள்வது மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. ட்ராவல் மற்றும் மெடிக்கல் இன்ஸுரன்ஸ் கிளெய்ம் பற்றிய தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்ள உதவும்.

இருவரின் விருப்பம் சார்ந்த இடத்தை தேர்ந்தெடுங்கள்
தம்பதியர் இருவரில் ஒருவருக்கு கட்டிடக்கலை சார்ந்த இடங்களுக்கு செல்ல பிடித்திருக்கலாம், இன்னொருவருக்கு பீச் அல்லது இயற்கை, மலை சார்ந்த இடங்களுக்கு செல்வது பிடித்திருக்கலாம். பயணத்தை திட்டமிடும் இடம், இருவரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் இடமாக தேர்ந்தெடுப்பது முக்கியம். இடங்களை தீர்மானிக்கும் முன், தம்பதியர் இருவரும் கலந்து பேசி ஹனிமூனுக்கான இடங்களை தேர்வு செய்யுங்கள். அப்போதுதான், கணவன் மனைவி இருவருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய பயணமாக அமையும்.