Home உறவு-காதல் கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்

கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்

33

தங்கள் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா? என்பதுதான் பெரும்பாலானோரின் முதல் தேடலாக இருக்கும். வெளிதோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடாமல் துணையின் குண நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன்னர் துணையின் குணங்களை ஓரளவுக்குத்தான் யூகிக்க முடியும். இல்லற பந்தத்தில் இணைந்த பிறகு துணையின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களின் குணங்களே உறவை வலுப்படுத்தி, இல்லற வாழ்க்கையை இனிமையாக வழிநடத்தி செல்ல அடித்தளமிடும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* துணையின் கடந்தகால, நிகழ்கால வாழ்க்கை சம்பவங்களை இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். அந்த கலந்துரையாடல் ஆரோக்கியமான உறவை பேணுவதற்கு அடித்தளமிடுவதாக அமைய வேண்டும். கடந்த கால வாழ்க்கை சம்பவங்களின் கசப்பான நினைவுகள் துணைக்கு மன வருத்தம் தரும் வகையில் அமைந்துவிடக்கூடாது. துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

* இருதரப்பு குடும்ப உறவுகளிடமுமே சுமுகமான உறவை பேண வேண்டும். தங்கள் குடும்ப உறவுகளை பற்றி மட்டுமே பெருமிதமாக பேசி, துணையின் உறவுகளை மட்டம் தட்டக்கூடாது.

* துணைக்கு மன வருத்தம் தரும் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்களின் மனதை பாதிக்கும் தகவல்களை சற்று தாமதமாக சொல்வது நல்லது. அவசியம் ஏற்படின், பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.

* தவறு செய்தால் ஒப்புக்கொண்டு உடனடியாக மன்னிப்பு கோருவது நல்ல வாழ்க்கை துணைக்கு அழகு. அது துணையின் மீது நேசத்தையும், நம்பிக்கையையும் அதிகப் படுத்தும்.

* சின்ன சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பதும், தவறு நேர்ந்தால் துணை மீது பழிபோடாமல் இருப்பதும் உறவுக்கு நலம் சேர்க்கும்.

* உங்களுடைய செயல்களில் காட்டும் ஆர்வத்தை துணை மேற்கொண்டிருக்கும் செயல் களிலும் வெளிக்காட்ட வேண்டும். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எடுத்துக்கூறி சிறப்பாக செய்து முடிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

* எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் துணைக்கு நேரம் ஒதுக்க தவறக்கூடாது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தை துணையின் மீது காண்பிக்கக்கூடாது.

* துணையின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும். வாழ்வின் ஏற்ற, இறக்கங்களில் பங்கெடுத்து, மனம் தளரவிடாமல் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

* துணையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படக்கூடாது. அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். விட்டுக்கொடுத்து அவர்களின் போக்கிலேயே சென்று அவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.

* வேலைக்கு செல்லும் கணவன்-மனைவி இடையே அலுவலக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் இணக்கமான புரிதல் இருக்க வேண்டும். ஈகோ பிரச்சினை தலைதூக்க தொடங்கினால் அது உறவில் விரிசலை அதிகப்படுத்திவிடும். வேலைக்கு நடுவே குடும்பத்துக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி உறவை பேண வேண்டும்.

* உங்களுடைய செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை துணை சுட்டிக்காட்டினால் கோபப்படாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கஷ்ட காலங்களில் துணைக்கு தோள் கொடுப்பவராக இருக்க வேண்டும்.