Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்

பெண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்

32

உங்கள் தினசரி வேலைப்பளுவைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும். அப்படி இருக்கையில், எப்படியோ சமாளித்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்காக 45 நிமிடங்களை ஒதுக்குவது என்பது பெரும் சவால்தான் இல்லையா!

நிச்சயம் உங்களைப் பாராட்ட வேண்டும்! இதை உங்களால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடிந்தால் பெரிய விஷயம் தான்! பெண்களின் சமாளிப்புத் திறன் அபாரமானது தான்!

ஜிம்முக்கு செல்லும் முன்பும் சென்று வந்த பிறகும் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்ன என்பது பற்றி நிறையப் படித்திருப்பீர்கள். ஆனால், உடற்பயிற்சி சார்ந்த அடிப்படையான சுகாதார விதிகளைப் பின்பற்றுவது மட்டுமில்லாமல், பெண்களாக இருப்பதால் சில விஷயங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிடுவீர்கள். ஒரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கு தருகிறோம்.

கூந்தல் பராமரிப்பு: உடற்பயிற்சி செய்யும்போது அதிகம் வியர்க்கும், இந்த வியர்வையெல்லாம் சேர்ந்து கூந்தலை பிசுபிசுப்பாகவும் பளுவாகவும் மாற்றிவிடும் இல்லையா! இதற்கு என்ன தீர்வு?உடற்பயிற்சி செய்து முடித்த உடனே, தலை குளித்து கண்டிஷனிங் செய்வீர்கள், இல்லையா? இதனால் உங்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? ஆரோக்கியமான உடலும் ஜீவனில்லாத மங்கிய கூந்தலும் தான்! ஆகவே, இதற்கு என்ன உண்மையான தீர்வு?

ஜிம்முக்குச் செல்லும் முன்பு, உங்கள் கூந்தலுக்கு ட்ரை ஷாம்பூ போட்டுக்கொள்ள வேண்டும், இதனால் கூந்தல் ஊறியிருக்கும், அதிக வியர்வை கூந்தலில் சேராமல் பாதுகாக்கப்படும்.
உடற்பயிற்சியை முடித்த பிறகு, க்ளென்சிங் (சுத்தப்படுத்தும்) கண்டிஷனர் கொண்டு வெதுவெதுப்பான நீரில் கூந்தலைக் கழுவவும்.உடற்பயிற்சிக்கு முன்பு ட்ரை ஷாம்பு போட்டு ஊற வைத்துவிட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவது வியர்வை, எண்ணெய் எல்லாவற்றையும் ஊற வைக்கவும் உதவும். க்ளென்சிங் கண்டிஷனர் இல்லாத சமயங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும்.
குதிரைவால் கொண்டை போடுவதைத் தவிர்க்கவும்: ஆம்! ஜிம்முக்குச் செல்லும்போது அதுதான் வசதியாக இருக்கும் என்று நாம் எல்லோருமே நினைப்பது சகஜம் தான், ஆனால் கூந்தலுக்கும் வேருக்கும் அது அதிக இறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். துணியால் ஆனா ஹேர்பேன்ட் போட்டு, சாதாரண கொண்டை, மீன் ஸ்டைல் குடுமி அல்லது அது போன்ற பிற ஸ்டைல் கொண்டைகள் போட்டுக்கொள்வது நல்லது.
மாதவிடாய் நாட்களின்போது உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா: மாதவிடாய் நாட்களின்போது உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்பது பற்றி பல்வேறு தவறான கருத்துகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலும் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு. மாதவிடாய் நாட்களின்போது உடல் களைப்பாகவும் எரிச்சலாகவும் அதிக பசியாகவும் மன அழுத்தமாகவும் இருப்பது சகஜம் தான். அதுமட்டுமா.. இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். மாதவிடாய் நாட்களின்போது உடற்பயிற்சி செய்வது அசௌகரியமாக இருக்கும், ஆனால் உடற்பயிற்சி செய்வதால் என்டோர்பின் என்னும் இயற்கை வலி நிவாரணி (பெயின் கில்லர்) சுரக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரியாது! ஆகவே, அடுத்த முறை மாதவிடாய் நாட்களில் இரத்தப்போக்கு இருக்கும், உடற்பயிற்சி செய்யாதே என்று உங்களிடம் யாராவது கூறினால், விளையாட்டு வீராங்கனைகள் யாரும் மாதவிடாய் நாட்களில் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதில்லை என்று கூறுங்கள்.

மாதவிடாய் நாட்களின்போது உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்: பல பெண்களுக்கு, மாதவிடாய் நாட்களின்போது சேனிட்டரி நாப்கீன்களின் உராய்வினால் கால்களில் ராஷஸ் ஏற்படும். இவர்கள் டேம்பூன்களைப் பயன்படுத்துவது நல்லது, அது இரத்தப் போக்கையும் தொந்தரவின்றி நன்கு சமாளிக்கும். அதே சமயம் உடற்பயிற்சி செய்வதிலும் தடையேதும் இருக்காது. நிம்மதியாக உடற்பயிற்சி செய்யலாம். டேம்பூன்களைப் பயன்படுத்த சங்கடமாக இருந்தால், தொடை இடுக்குப் பகுதிகளில் உராய்வையும் ஸ்கின் ராஷையும் தவிர்க்க பெட்ரோலியம் ஜெல்லி பூசிக்கொள்ளத் தவற வேண்டாம்.

நகைகளும் உடற்பயிற்சியும்: இந்த மோதிரத்தை என்ன செய்வது?!மாங்கல்யம்?உடற்பயிற்சியைத் தவற மனமில்லாத, புதிதாகத் திருமணமான அல்லது திருமணமான பெண்கள் எல்லோருக்கும் இது ஒரு பெரும் பிரச்சனை. ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது எந்த நகைகளும் ஆபரணங்களும் அணிந்து கொள்ளக்கூடாது என்பது தான் சரி. சிலர் கழற்ற முடியாத ஆபரணங்கள் சிலவற்றை அணிந்திருப்பீர்கள், ஒரு சிலவற்றைக் கழற்றக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கலாம். ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது அதுவே உங்களுக்கு பெரும் ஆபத்தாகலாம், அதில் வியர்வை சேர்ந்து கிருமிகள் வளர்ந்து பிறகு பல தோல் நோய்த்தொற்றுகள் உருவாகலாம்.

நகங்களைப் பராமரித்தல்: நீளமான அழகிய நகங்கள் வைத்துக்கொள்ள நமக்கு ஆசை இருக்கலாம், ஆனால் அதைப் பராமரிப்பது தான் மிகவும் கடினம். நீளமான நகங்கள் உடற்பயிற்சி செய்யும்போது சேதமடைந்துவிடலாம். அதுமட்டுமல்ல, வியர்வையால் நகம் உலர்ந்துவிடுவதால் அது உடைந்து நகக்கண்ணில் காயம் ஏற்படலாம். நகங்களை ஒட்ட நறுக்க வேண்டியது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் நக இடுக்குகள் கிருமிகளின் கூடாரமாகிவிடும்.

சரியான உள்ளாடைகள்: ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு, மார்பகங்களை சரியான முறையில் தாங்கிப் பிடிக்க, கச்சிதமாகப் பொருந்துகின்ற ஸ்போர்ட்ஸ் ப்ரா மிகவும் அவசியம்.

உங்களுடைய மேட்டையே (பாய்) பயன்படுத்துங்கள்: தரையில் முதுகு படும்படி ஏதேனும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்றால், உங்களுக்கென்று தனியாக நீங்கள் கொண்டு சென்ற மேட்டையே பயன்படுத்துவது நல்லது, ஜிம்மில் கிடைக்கும் மேட்டைப் பயன்படுத்த வேண்டாம்.

ஆகவே, பெண்களே அடுத்த முறை ஜிம்முக்குச் செல்லும் முன்பு இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! வாழ்த்துகள்!