Home பாலியல் அந்த முன்று நாட்கள் மனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடை

அந்த முன்று நாட்கள் மனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடை

153

பெண்கள் மருத்துவம்:மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதற்காக அவர்களை தீண்ட கூடாது என்று தனியறையில் வைத்தார்கள் பெரியவர்கள். கால மாற்றத்தின் காரணமாக பெண்களுக்கு அந்த விலக்கிலிருந்து விடுதலை கிடைத்தாலும், அவர்களை பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டிய நாட்கள் இவை. ஆனால், சில வீடுகளில் அப்போது அருவருப்பு பார்வை எட்டிப் பார்க்கும். இது எவ்வளவு கொடுமையான செயல்பாடு என்பது பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்.

முக்கியமாக திருமணமான ஆண்கள், மாதவிடாய் காலத்தில் தங்கள் மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இங்கு மனைவியின் மாதவிடாய் காலத்தில் கணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம்.

முகம்சுளிப்பது
முற்காலத்தில் மாதம் மூன்று நாட்கள் பெண்களை வீட்டுக்கு வெளியே இருக்க கூறினார்கள் என்றால், அன்று நாப்கின் போன்ற உபகரணங்கள் இல்லை. இன்று முழுக்க பாதுகாப்புடன் இருப்பதற்கான அனைத்து வழிவகைகளும் இருக்கும் போதும், அவர்களை மூன்று நாட்கள் நெருங்க தயங்குவது, அருவருப்புடன் காண்பது, முகம் சுளிப்பது எல்லாம் மனிதத்தன்மை அற்ற செயல். இதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அரவணைப்பு
பெண்களுக்கு ஏறத்தாழ 15 – 45 வயதுக்குட்பட்ட 30 வருடங்கள் மாதவிடாய் மாதாமாதம் ஏற்படும். இந்த காலத்தில் இரத்தப்போக்கு மற்றும் பிடிப்பு காரணமாக அவர்களுக்கு ஏற்படும் வலி சொல்லி மாளாது. எனவே, வருடம் முழுக்க குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளும் அவர் மீது, இந்த மூன்று நாட்களாவது நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டு அன்பும், அரவணைப்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்.

வேலைகள்
சில வீடுகளில் மாதவிடாய் காலத்தில் அவர்கள் பயன்படுத்திய உடைகளை, போர்வைகளை எல்லாம் அவர்களையே துவைக்க கூறுவார்கள். இதுவும் ஒரு வகையில் கொடுமை படுத்தும் செயல் தான். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டு போகும் போது கழிவறை வரை வந்து உதவும் பெண்களுக்கு கணவன்மார்கள் இந்த உதவியை கூட செய்யக் கூடாத என்ன. இதை செய்வதால் எந்த தெய்வ குற்றமும் ஆகிவிட போவதில்லை.

விடுமுறை
இந்த மூன்று நாட்களும் அவர்களே தான் சமைக்க வேண்டும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், துணிகளை துவைக்க வேண்டும் என எல்லா வேலைகளையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம். அவர்களை குறைந்த பட்சம் அதிக இரத்தப் போக்கு ஆகும் முதல் நாளாவது அவர்களுக்கு விடுமுறை அளியுங்கள்.

மனநிலை
பெண்கள் உடல் ரீதியாக வலி அனுபவிக்கும் அந்த மூன்று நாட்கள், அவர்கள் மனம் ரீதியாகவும் புண்படும் படி நடந்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் தவறே செய்திருந்தாலும், கோபப்பட்டாலும் மாதவிடாய் நாட்களில் ஆண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஏனெனில், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஹார்மோனால் மனநிலை மாற்றம் ஏற்படும். இதனால், அவர்களால் கட்டுப்படுத்த முடியாத மன மாற்றங்கள், கோபம் வெளிப்படலாம். இது, இயல்பு. இதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

குறை கூறுதல்
முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் பெண்களை அவர்கள் போக்கில் சுதந்திரமாய் விட்டுவிடுங்கள். கணவர்கள் அவர்கள் வேலையை அவர்களே முடிந்த வரை செய்துக் கொள்ளுங்கள். அது செய்யவில்லை, இது செய்யவில்லை என குறை கூற வேண்டாம்.

இல்லறம் சிறக்கும்
வருடம் 330 நாட்கள் இல்லறம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் ஆண்கள் பெண்களின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்பத்தை பகிர்ந்து கொள்வது மட்டுமல்லவே இல்லற உறவு. பெண்களின் வலியை வாங்கிக் கொள்ள முடியாது எனினும், அரவணைத்து வலி குறைவாக உணர வைக்க ஆண்களால் முடியும்