Home உறவு-காதல் ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?

ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?

45

ஒரு பெண் பள்ளிகூடத்துக்கோ, வகுப்பிற்கோ அல்லது தொழிலுக்கு சென்றால் கூட அவளுக்கு நம்பிக்கையான ஒரு நண்பன் இருந்தால் பயமின்றி போய் வரலாம். பாதையில் “தனிமையாக போகிறாளே என்ன நடக்குமோ” என வீட்டில் உள்ளவர்களும் பயப்படாமல் இருக்கலாம்.

ஆனால் வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் சில பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு ஜன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண் மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.

ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்லோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள்.

இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது, அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல் ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.

ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, “நீ ஆண், நீ பெண்” என்று பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

12, 13 வயதுகளின் பின், ஒரு பெண் பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர, வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால், உடனேயே அவனில் இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா….?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.

ஆனால் ஆண் பெண் என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, “நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்.” என்று சொல்வது அனாவசியச் செயலே.

ஆனாலும் இக்காலத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நல்லது என்றாலும் பெண்கள் ஒருவருடன் நண்பனாகும் முன்பு அவரை பற்றி நிச்சயம் முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது. புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.

எந்த ஆணாக இருந்தாலும் அவர்கள் நட்பு எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.