Home ஆரோக்கியம் பொது மருத்துவம் பித்தப்பைக் கற்கள் (Gallstones)

பித்தப்பைக் கற்கள் (Gallstones)

39

பித்தப்பைக் கற்கள் என்றால் என்ன?

பித்தப்பை அல்லது பித்தநீர்ப்பாதையில் உருவாகும் சிறு கற்களை பித்தப்பைக் கற்கள் என்கிறோம். இந்த நோயை கோலெலித்தியாசிஸ் என்று குறிப்பிடுகின்றனர். இந்த சிறு கற்கள் கொழுப்பால் ஆனவை, இவை சிறு தானியம் போன்ற அளவிலிருந்து எலுமிச்சம்பழத்தின் அளவு வரை வளரக்கூடும்.

பித்தப்பை என்பது கல்லீரலுக்குக் கீழே இருக்கும் சிறிய உறுப்பாகும். இது பித்தநீரைச் சேகரித்து வைக்கிறது. பித்த நீர் கொழுப்பின் செரிமானத்திற்கு உதவுகிறது, இது பித்தப்பை நாளத்தின் வழியே இரைப்பையை வந்தடைகிறது. பித்தநீர்ப் பாதையில் சிறுகுடலில் இருந்து கல்லீரலுக்கு சில நாளங்கள் செல்கின்றன. பித்தப்பையில் இருக்கும் பித்தநீர் கெட்டியாகி திடப்பொருளாக மாறும்போது பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன.

பித்தப்பைக் கற்களால் அறிகுறிகள் ஏதேனும் தென்படாதவரை, அதற்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் சிக்கிக்கொள்ளும்போது, அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகலாம், அந்த வலி ஒரு சில மணிநேரம் நீடிக்கும். இந்த வழியை பித்தப்பை தசைப்பிடிப்பு வலி என்கிறோம். பித்தப்பைக் கற்களால் பித்தப்பை அழற்சி (கோலேசிஸ்டைட்டஸ்) ஏற்படலாம். இதனால் மஞ்சள் காமாலை, காய்ச்சல், நீடிக்கும் வலி போன்றவை ஏற்படலாம்.

பித்தப்பைக் கற்களால் ஏற்படும் சிக்கல்களை கோலேசிஸ்டைட்டஸ் என்கிறோம்.

காரணங்கள் மற்றும் அபாயங்கள்

காரணங்கள்

பித்தநீரின் வேதிப்பொருள்களின் சமநிலை இல்லாமல் போவதன் விளைவாக பித்தப்பைக் கற்கள் உண்டாகின்றன. பெரும்பாலும், பித்தநீரில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மற்றும் பிலிருபின் ஆகியவற்றால் பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன. பித்தப்பைக் கற்கள் உருவாவதற்கான துல்லியமான காரணம் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை. பித்தப்பை காலியாகாமல் போவதாலும் பித்தப்பைக் கற்கள் உண்டாகலாம். பித்தப்பைக் கற்கள் பொதுவாக கொலஸ்ட்ரால் (80-90%) அல்லது நிறமிகளால் (1-10%) ஆனவை.

ஆபத்துக் காரணிகள்

வயது – வயது அதிகமாகும்போது, பித்தப்பைக் கற்கள் உண்டாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கே இது உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனால், பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்நோய் இருந்திருந்தாலும் வாய்ப்பு அதிகம்
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பதிகம்
பித்தப்பையில் கொழுப்புக் கற்கள் உள்ளவர்களுக்கு, பின்னாளில் பித்தப்பைக் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்
உடல் பருமன், உணவுப் பழக்கம், வளர்சிதைமாற்ற நோய்க்குறித்தொகுப்பு போன்றவை (பித்தப்பை நோய்க்கு உடல் பருமன் முக்கிய வாய்ப்புக் காரணியாக உள்ளது – உடல் பருமன் குறியீட்டெண் (BMI) 30 kg/m2 அல்லது அதிகமாக உள்ளவர்களுக்கு வாய்ப்பதிகம்.)
பொதுவாக, வெளிரிய, பருமனான, நாற்பது வயதுள்ள, இனப்பெருக்கத் திறன் கொண்ட பெண்களுக்கு அடிவயிற்றில் வலி இருந்தால், அவர்களுக்கு கோலேலித்தியாசிஸ் ஏற்படும் அபாயம் அதிகம். இதனை ஆங்கிலத்தில் 5Fக்கு (அதாவது “ஃபேர், ஃபெர்ட்டைல், ஃபேட், ஃபீமேல் ஆஃப் ஃபார்ட்டி”) வாய்ப்பு அதிகம் என்பார்கள்.

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

வலி – இதுவே மிகவும் பொதுவான அறிகுறி.அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி இருக்கும். வலி தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது விட்டுவிட்டு வரலாம். வலி அடிவயிற்றில் இருந்து வலது தோளுக்கு அல்லது முதுகுக்குப் பரவலாம்.
குமட்டல் மற்றும் வாந்தி – குமட்டல் மற்றும் வாந்தியுடன், நெஞ்செரிச்சல் இருப்பது பித்தப்பை பிரச்சனையின் பொதுவான அறிகுறியாகும்.
பசியின்மை
காய்ச்சல் அல்லது குளிர்
வயிற்றுப்போக்கு
மஞ்சள் காமாலை – இது பித்தப்பை நாளங்களில் அடைப்புள்ளதைக் குறிக்கிறது
மலம் மற்றும் சிறுநீர் – மலம் வெளிரிய நிறத்தில் இருக்கலாம், சிறுநீர் அடர் நிறத்தில் இருக்கலாம்
பெரும்பாலும் பித்தப்பைக் கற்களின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதனை அறிகுறிகளற்ற பித்தப்பைக் கற்கள் என்கிறோம். இது போன்று ஏற்படும் பித்தப்பைக் கற்கள் கல்லீரல், கணையம் அல்லது பித்தப்பையில் எவ்விதப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.

பித்தப்பைக் கற்கள் பித்தபை நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும்போது, பித்தப்பைப் பிரச்சனைகள் உண்டாகி, அது சில மணிநேரம் நீடிக்கும்.

இதனால், குறுகிய நேரத்திற்கு, தாங்க முடியாத அளவு அடிவயிற்று வலி அல்லது முதுகு வலி ஏற்படும். கற்கள் நகர்ந்து, பித்தப்பை நாளங்கள் அடைப்பு நீங்கிவிட்டால் வலி நின்றுவிடும். சில மணிநேரம் பித்தப்பை நாளம் அடைபட்டு இருந்தால், மேலும் சிக்கல்கள் உண்டாகலாம்.

நோய் கண்டறிதல்

பித்தப்பைக் கற்களை பின்வரும் முறைகளில் கண்டறியலாம்:

அல்ட்ராசவுண்ட், CT ஸ்கேன், MRI ஸ்கேன் – பித்தப்பைக் கற்கள் உள்ளதா என்றும், அவை என்ன வகைக் கற்கள் என்பதையும் கண்டறிய இவை உதவும்
பித்தநீர்ப் பாதையில் ஏதேனும் அடைப்பு உள்ளதா எனக் கண்டறிய, கதிர்வீச்சுப் பொருள் பயன்படுத்தி, கோலேசைன்டிகிராபி அல்லது HIDA ஸ்கேன் செய்யப்படலாம்
எண்டோஸ்கோப்பிக் ரெட்ரோகிரேடு கொலாங்கியோபான்க்கிரியாட்டோகிராபி (ERCP): இந்த பரிசோதனையில் கணைய நாளம் பித்தநீரில் பித்தப்பைக் கற்கள் உள்ளதா என்றும், எந்த பித்தப்பை நாளம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்படும்.
பித்தப்பை நாளத்தில் அழற்சி அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் அறிகுறிகள் உள்ளதா என்று இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை மற்றும் தடுத்தல்

சிகிச்சை

பொதுவாக, அறிகுறிகள் எதுவும் இல்லையெனில், பித்தப்பைக் கற்களுக்கு சிகிச்சை தேவையில்லை. எனினும், அறிகுறிகள் இருந்தால் பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்படலாம்:

அறுவை சிகிச்சை: திறந்த அறுவை சிகிச்சை மூலம் அல்லது லேப்ரோஸ்கோப்பி முறையில் கோலேசிஸ்டெக்டமி (பித்தப்பை அகற்றம்) அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.
பித்தப்பைக் கற்களைக் கரைப்பதற்கு மருந்துகள் கொடுக்கப்படலாம். ஆனால், அவை கரைய பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். மருந்துகளால் கற்கள் கரையாமல் போக வாய்ப்புள்ளது, அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாதவர்களுக்கு மட்டுமே இந்த முறை பரிந்துரைக்கப்படும்.
தடுத்தல்

உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்வதும், உடல் எடையைக் குறைப்பதும் பித்தப்பைக் கற்கள் உண்டாகாமல் தடுக்க உதவும்.
கொலஸ்ட்ரால் அதிகமுள்ள, குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க

சிக்கல்கள்

பித்தப்பை நாளத்தில் அடைப்பு இருந்து, அதற்கு சிகிச்சையளிக்காமல் விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகக்கூடும்.

பித்தப்பைக் கற்களால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் சில:

கடுமையான கோலேசிஸ்டைட்டஸ்: சிலருக்கு பித்தப்பையில் நோய்த்தொற்று ஏற்பட்டு, அழற்சி உண்டாகி கடுமையான கோலேசிஸ்டைட்டஸ் எனப்படும் பித்தப்பை அழற்சி ஏற்படலாம்.
பித்தப்பைக் கற்கள் பித்தப்பை நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தி, பித்த்நீரில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி அதனால் மஞ்சள் காமாலை உண்டாகலாம்.
கணைய நாள அடைப்பு – பித்தப்பை நாளம் பித்தப்பைக் கற்களால் அடைபட்டால், கணையத்தில் அழற்சி ஏற்படலாம்.
பித்தப்பைப் புற்றுநோய்
அடுத்து செய்ய வேண்டியவை

பின்வரும் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்:

அடிவயிற்றின் மேல் வலது புறம் வலி, அந்த வலி தோள்பட்டைகளுக்குப் பரவுதல்
குமட்டல், வாந்தி
பசியின்மை
எச்சரிக்கை

பித்தப்பையில் பிரச்சனை இருக்கும்போது அல்லது பிரச்சனை ஏற்பட்ட பிறகு பின்வரும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்:

குமட்டல், வாந்தி
மயக்கம்
அடிவயிற்றில் வலி, அந்த வலி தோள்பட்டைகளுக்கும் பரவுதல் – இந்த வலி 5 மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நீடித்தல்
குளிர்
காய்ச்சல்
மஞ்சள் காமாலை (தோலும் கண்ணின் வெண்ணிறப் பகுதியும் மஞ்சளாக மாறுதல்)
சிறுநீர் அடர் நிறத்திலும் மலம் வெளிரிய நிறத்திலும் இருப்பது