Home ஆரோக்கியம் ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகள்

ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகள்

42

ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகள் என்பது என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகள் என்பது, மார்பகங்களில் ஆங்காங்கே வலியுடன் கூடிய கட்டி போன்ற அமைப்புகளைக் குறிக்கிறது. பெண்களில் குறைந்தது பாதி பேருக்கு, தம் வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனை வந்திருக்கும். இது புற்றுநோய்த் தன்மை கொண்டதல்ல.

ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக்கட்டிகள் எனும் பிரச்சனையை பின்வரும் பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்:

ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகளைக் கொண்ட மார்பகப் பிரச்சனை (ஃபைப்ரோசிஸ்டிக் ப்ரெஸ்ட்ஸ்)
ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகளைக் கொண்ட மார்பக மாற்றங்கள் (ஃபைப்ரோசிஸ்டிக் ப்ரெஸ்ட்ஸ் சேஞ்சஸ்)
இது உண்டாகக் காரணம் என்ன?

இதை ஏற்படுத்தும் காரணம், திட்டவட்டமாகத் தெரியவில்லை. பெண்களுக்கு சினைப்பைகளில் சுரக்கும் ஹார்மோன்களால், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு கூட, மார்பகங்களில் கட்டி இருப்பது போன்றோ, வலி அல்லது வீக்கம் இருப்பது போன்றோ தோன்றலாம். 20-45 வயதுப் பெண்களிடையே இந்தப் பிரச்சனை பரவலாக உள்ளது.

இதன் அறிகுறிகள்

இதன் அறிகுறிகள் பெரும்பாலும் இரண்டு மார்பகங்களிலும் இருக்கும், மாதவிடாய் சமயத்திலும் மாதவிடாய்க்கு முன்பும் அவை வேறுபடக்கூடும்.

மார்பகங்களில் அசௌகரியம் அல்லது வலி
மாதவிடாய் காலங்களில் வந்து வந்து போகும் வலி, ஆனால் ஒரு மாதம் வரை நீடிக்கும்
மார்பகங்கள் வீங்கியது போல, கனமாக இருப்பது போன்ற அல்லது நிரம்பியுள்ளது போன்ற உணர்வு
மார்பகங்களில் கட்டி போன்று திரட்சியாக அல்லது கெட்டியாக இருப்பது
அக்குள் பகுதிகளிலும் அதற்குக் கீழும் அசௌகரியம் அல்லது வலி
முலைக்காம்பிலிருந்து திரவங்கள் வெளியேறுதல்
இந்தப் பிரச்சனை எப்படிக் கண்டறியப்படுகிறது

மருத்துவர் பின்வரும் சோதனைகளைப் பரிந்துரைப்பார்:

மார்பக மருத்துவப் பரிசோதனை
மார்பகத்திற்கான அல்ட்ராசவுண்ட் சோதனை
மம்மோகிராஃபி
மம்மோகிராஃபியில் ஏதேனும் அசாதாரணமாகத் தென்பட்டால், திசுப் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படும்.

இதற்கான சிகிச்சை

உங்கள் மருத்துவர் பின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யக்கூடும்:

மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல்
நன்கு பொருந்துகின்ற, தாங்குகின்ற ப்ரா அணிதல்
மார்பகங்கள் மீது சூடான அல்லது குளிர்ந்த ஒற்றடம் கொடுத்தல்
இவை லேசாக இருந்தால் எந்த சிகிச்சையும் தேவைப்படாது. தீவிரமாக இருந்தால், அதற்கு மருத்துவர் உங்களுக்கு கருத்தடை மாத்திரைகள் (ஹார்மோன்) அல்லது பிற மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

சில அரிதான சந்தர்ப்பங்களில், திசுப்பரிசோதனை முடிவுகளில் ஏதேனும் பிரச்சனை என்று தெரிந்தால், அறுவை சிகிச்சை செய்து கட்டி போன்ற பகுதிகள் அகற்றப்படலாம்.

இறுதிக் கருத்து

ஒன்றுக்கு மேற்பட்ட மார்பக நார்த்திசுக் கட்டிகளால் கெடுதல் எதுவும் இல்லை, ஆனால் புற்றுநோயைக் கண்டறிவதைக் கடினமாக்கக்கூடும்.மார்பகங்களில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தென்பட்டால், உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.