Home பெண்கள் அழகு குறிப்பு எண்ணெய் சருமத்தை பராமரிப்பது எப்படி?

எண்ணெய் சருமத்தை பராமரிப்பது எப்படி?

18

எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும்.

பொதுவாக, முகத்தில் உள்ள சருமத்தைப் பாதுகாக்க கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்ஸ்க்ரீன் ஆகிய நான்கையும் சரிவரச் செய்தால், சருமம் அன்று பூத்த மலராக மென்மையுடன் இருக்கும்.

முகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். சருமத்தின் துவாரங்கள் திறந்து தூசுக்கள், அழுக்குகள் நீங்கும். பிறகு, டர்க்கி டவலால் டோனிங் செய்யுங்கள்.

உள்ளங்கையில் ஐந்து சொட்டு டோனரைவிட்டு, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவேண்டும்.

சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனால், வாடிவிடும். மாய்ஸ்ச்சரைசரைப் போட்டு நன்றாகத் தடவிப் படரவிட வேண்டும்.

எண்ணெய் சருமத்தினருக்கு…

கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து, உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.
வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

முகத்தைத் தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வெள்ளரிக்காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து தொடர்ந்து ஒரு மாதம் தடவினால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாகக் காணப்படும்.

தக்காளிப் பழத்தை பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி, காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவலைக் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

பப்பாளிக்கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாகப் பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்த் தன்மை குறையும்.

ஆயில்ஃப்ரீ அல்லது சோப்ஃப்ரீ ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.

நீர் மோரை ஒரு பஞ்சில் தோய்த்து, நன்றாகத் துடையுங்கள். அழுக்கு அனைத்தும் வெளியேறிவிடும்.

பேரீச்சையில் தேன் விட்டு ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி ஃபேஷியல் செய்தால், மாசு மரு இல்லாமல் முகம் பளிச்சென்று இருக்கும்.