Home பாலியல் ஆணுறை அணிவதால் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள்

ஆணுறை அணிவதால் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள்

156

பாலியல் அறிவு:ஆணுறை என்பது கர்ப்பத்தைத் தடை செய்ய அல்லது பால்வினை நோய்கள் தொற்றுவதைத் தடுக்க உடலுறவின்போது பயன்படுத்தப்படும் சாதனமாகும். ஆணுறுப்பு விறைத்த நிலையில் இருக்கும்போது இது அணிந்துகொள்ளப்படுகிறது. இது விந்தணுக்கள் பெண்ணுறுப்புப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது. கர்ப்பமடையும் வாய்ப்பை மேலும் குறைப்பதற்கு, இதற்கு உட்புறத்தில் விந்தணுக்கொல்லிப் பொருள் பூசப்பட்டிருக்கலாம். ஆணுறை ஒவ்வாமை என்பது, லேட்டக்ஸ் இரப்பருக்கான ஒவ்வாமை அல்லது விந்தணுக்கொல்லிக்கான ஒவ்வாமை என இரண்டு வகைகளில் இருக்கலாம். பெரும்பாலான ஆணுறைகள் லேட்டக்ஸ் இரப்பரால் ஆனவையே. ஆகவே ஒருவருக்கு ஆணுறைகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் அது லேட்டக்ஸ் இரப்பருக்கான ஒவ்வாமையாக இருக்கவே வாய்ப்பு அதிகமுள்ளது.

லேட்டக்ஸ் இரப்பர் ஒவ்வாமை (Latex rubber allergy)

லேட்டக்ஸ் என்பது இரப்பர் மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருளாகும். இது இரப்பர் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. டயர், கையுறைகள், அழிப்பான்கள் (எரேசர்), இரப்பர் பேன்ட், இரப்பர் பொம்மைகள், காலணிகளின் அடிப்பகுதிகள், பலூன்கள், ஆணுறைகள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு லேட்டக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

யாருக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது? (Who are predisposed?)

சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்), ஒன்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள் அல்லது மருத்துவ சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டவர்கள், இரப்பர் தொழில் துறையில் உள்ளவர்கள் போன்ற அதிகம் இரப்பருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் இதற்கு முன்பு இந்த ஒவ்வாமை இருந்தவர்கள் போன்றவர்களுக்கு லேட்டக்ஸ் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

லேட்டக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள், அதே போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் லேட்டக்ஸ் பொருள்கள் உள்ள வாழைப்பழம், வெண்ணெய்ப்பழம், கஷ்கொட்டை (செஸ்ட்நட்), பேஷன் பழங்கள் மற்றும் கிவிப் பழங்கள் போன்றவற்றுக்கும் ஒவ்வாமை கொண்டிருப்பார்கள்.

லேட்டக்ஸ் ஆணுறை ஒவ்வாமையின் வகைகள் (Types of latex condom allergy)
லேட்டக்ஸ் ஒவ்வாமையில் இரண்டு வகைகள் உள்ளன

தாமதமாகத் தொடங்கும் அதிஉணர்வு எதிர்வினை (வகை IV): இது தோலில் நேரடியாகப் படுவதால் ஏற்படும் டெர்மட்டைட்டஸ் ஒவ்வாமையாகும். இது தோல் தடிப்பு, சிரங்கு மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். பொதுவாக, பாதிக்கப்படும் நபர் லேட்டக்ஸ் பாதிப்பை அடைந்து 24-48 மணி நேரத்தில் அறிகுறிகள் தொடங்கும்.

உடனடி அதீதஉணர்திறன் எதிர்வினை (வகை 1): இந்த வகை ஒவ்வாமை எதிர்வினை இம்மினோகுளோபலின் E (IgE) பதில்வினையால் ஏற்படுகிறது, இது லேட்டக்ஸ் புரதங்களுக்கு மட்டுமேயான பதில்வினையாகும். இவை ஒவ்வாமையை உண்டாக்கும் ஹிஸ்டமைன் மற்றும் பிற ஊக்கிகளை வெளியிடுகிறது. இந்தப் பிரச்சனை உண்டானால், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அல்லது பல பகுதிகளில் பரவக்கூடிய யூர்ட்டிக்கேரியா (அரிப்பு), மூக்கு ஒழுகல், கண்நோய் (கண்கள் சிவந்து, நீர் வடிதல்), ப்ராங்க்கோஸ்பாஸ்ம் (சுவாசிப்பதில் சிரமம்) மற்றும் லாரினோகோஸ்பாஸ்ம் (மூச்சு விடும்போது இரைச்சல்), குறை இரத்த அழுத்தம் மற்றும் முழு வீச்சிலான அனாஃபிளக்சிஸ் எதிர்வினை போன்றவை ஏற்படும். அனாஃபிளக்சிஸ் எதிர்வினை இருக்கும்போது, இரத்த அழுத்தம் திடீரென்று குறையும், இதனால் மயக்கம் ஏற்பட்டு அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம்.

லேட்டக்ஸ் ஆணுறை ஒவ்வாமையின் அறிகுறிகள் என்னென்ன? (What are the symptoms of latex condom allergy?)
எரிச்சல் உணர்வு: ஆணுறுப்பு, பெண்ணுறுப்பின் உட்புறம் அல்லது உடலில் ஆணுறை பட்ட பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்படும்.
அரிப்பு: இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அரிப்பு இருப்பதால் மிகுந்த சங்கடமாகவும் தொந்தரவாகவும் இருக்கலாம். ஆண்களுக்கு, ஆணுறுப்பின் தண்டு மற்றும் ஆணுறுப்பின் அடிப்பகுதியில் உள்ள பகுதி போன்ற இடங்களில் அரிப்பு ஏற்படலாம். பெண்களுக்கு, பெண்ணுறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள், பெண்ணுறுப்பு இதழ் மற்றும் வெளி இதழ் போன்ற பகுதிகளில் அரிப்பு ஏற்படலாம். சில பெண்களுக்கு, பெண்ணுறுபிற்கு உள்ளேயும் அரிப்பு ஏற்படலாம். லேட்டக்ஸ் ஒவ்வாமை உள்ளவர் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டால், உதடுகள், நாக்கு மற்றும் தொண்டையிலும் அரிப்பு ஏற்படலாம்.
தோல் தடிப்புகள்: சில மணி நேரம் அல்லது பல மணி நேரம் லேட்டக்ஸ் ஆணுறை பட்டால், தோல் தடிப்பு உண்டாகலாம். தோல் தடிப்புகள் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கலாம், அரிப்பு அல்லது எரிச்சல் இருக்கலாம். சொறியும்போது தோல் உரிந்து வரலாம்.
கொப்புளங்கள்: நீண்ட காலம் லேட்டக்ஸ் படும்படி இருப்பவர்களுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் லேட்டக்ஸ் ஆணுறை படும்போது அந்தப் பகுதிகளில் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படலாம்.
அனாஃபிலக்சிஸ்: இது ஒவ்வாமை எதிர்வினையின் கடுமையான நிலையாகும். சுவாசிப்பதில் சிரமம், உதடுகள், நாக்கு மற்றும் தொண்டையில் வீக்கம், குறை இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு வேகமாதல், நாடித்துடிப்பு பலவீனமாதல் அல்லது நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிகிச்சையளிக்காமல் விட்டால், சுவாசப்பாதையில் தடை ஏற்படுத்துவதால் மரணம் கூட ஏற்படலாம், பிற பெரிய சிக்கல்களும் ஏற்படலாம். இது அவசர உதவி தேவைப்படுகின்ற பிரச்சனையாகும்.
லேட்டக்ஸ் ஆணுறை ஒவ்வாமையை எப்படி சமாளிப்பது? (How to manage latex condom allergy?)
சோதனைகள் (Tests)

லேட்டக்ஸ் ஆணுறைகள் அல்லது பிற லேட்டக்ஸ் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமையின் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் மருத்துவரிடம் செல்லலாம். தோல் நிபுணரிடம் செல்வது நல்லது.

சில குறிப்பிட்ட இரத்தப் பரிசோதனைகள் செய்யும்படி பரிந்துரைக்கப்படலாம், ஆணுறைகளால் வேறு ஏதேனும் ஒவ்வாமைப் பிரச்சனைகள் உங்களுக்கு உள்ளதா என்று கண்டறிய சருமத்தில் ஊசியில் துளையிட்டு செய்யும் சோதனை, ஸ்கின் பேட்ச் சோதனை மற்றும் ரேடியோ அலெர்ஜோ டெஸ்ட் (RAST) ஆகிய சோதனைகள் செய்யுமாறு பரிந்துரைக்கப்படலாம்.

சிகிச்சை (Treatment)

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்களைத் தவிர்த்தல்: ஒவ்வாமை எதிர்வினைகளைத் தவிர்க்க, லேட்டக்ஸ் பொருள்களைத் தவிர்ப்பதே மிகச்சிறந்த வழியாகும். லேட்டக்ஸ் ஆணுறைகள் மற்றும் லேட்டக்ஸ் உள்ள பிற பொருள்களும் இதிலடங்கும்.

லேட்டக்ஸ் ஆணுறைகளுக்கு மாற்றாக பிற வகை ஆணுறைகளைப் பயன்படுத்துதல்: லேட்டக்ஸ் ஒவ்வாமை கொண்டவர்கள் லேட்டக்ஸ் அல்லாத ஆட்டுக் குடலால் தயாரிக்கப்பட்ட நேச்சுரல் மெம்பரேன் ஆணுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் (இவை விலை அதிகமானவையாகும், இவை பால்வினை நோய்கள் பரவுவதைத் தடுக்காது) ஆனால் பாலியூரத்தீன் அல்லது பாலிஐசோப்ரீன் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சிந்தட்டிக் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்.

மருந்துகள்: லேட்டக்ஸ் ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்க, ஆன்டிஹிஸ்டமைன்கள் மற்றும் கார்டிகோஸ்டிராய்டுகள் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படலாம். உடனடி அதிஉணர்திறன் எதிர்வினைகளை (அனாஃபிலக்சிஸ்) சமாளிக்க எப்பின்ஃப்ரின் ஊசிகள் கொடுக்கப்படலாம்.

ஆணுறைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், பெரும்பாலும் லேட்டக்ஸ் ஒவ்வாமை கொண்டவர்களாகவே இருப்பார்கள், ஆனால் சிலருக்கு ஆணுறைகளில் இருக்கும் பிற பொருள்களால் ஒவ்வாமை இருக்கலாம். ஆணுறை ஒவ்வாமை ஏற்பட உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய மருத்துவரிடம் செல்வது நல்லது.