Home ஆரோக்கியம் ‘ஆணுறை’ பகுப்புக்கான தொகுப்பு

‘ஆணுறை’ பகுப்புக்கான தொகுப்பு

32

இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை..’ என்று சொல்லிக் கொண்டு வந்தவர் கையில் மருத்துவ ஆய்வு கூட ரிப்போர்ட் இருந்தது.

அவரது முகத்தில் ஆச்சரியமும் எரிச்சலும்.
அவள் முகத்திலோ கவலையும் இயலாமையும்.

அவர் கையில் இருந்தது சிறுநீர்ப் பரிசோதனை முடிவு.
கர்ப்பம் தங்கியிருப்பதாக ரிப்போர்ட் உறுதி செய்தது.

அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள்.
கடைசிக்கு இன்னமும் ஒரு வயது கூட ஆகவில்லை.

‘கருத்தடை முறைகள் எதையும் உபயோகிக்கவில்லையா?’ என்று கேட்ட போது ‘உறை பாவித்தேன்’ என்று சொன்னார்.

‘பாவித்தும் எப்படித் தங்கியது எனத் தெரியவில்லை’ என ஆச்சரியப்பட்டார்.

தீர விசாரித்த போது ‘இவருக்கு போடுவதில் விருப்பமில்லை. கடைசி நேரத்தில்தான் அவசர அவசரமாகப் போடுவார்’ என்பதை மனைவி மிகுந்த சங்கோசத்துடன் தெளிவுபடுத்தினார்.

ஆச்சரியப்படுவதுடனும் எரிச்சலுறுவதுடனும் அவருக்குப் பிரச்சனை முடிந்துவிடும். சுமக்கவும், பெறவும், வளர்க்கவும் சிரமப்படப் போவது அவள்தானே!

ஆணுறை என்பது மிகவும் உபயோகமான ஒரு கருத்தடை முறையாகும். மிகவும் சரியான முறையில் உபயோகித்தால் 98% சதவிகிதம் வரை நிச்சயமானது.

அதற்கு மேலாக ‘தெரு மேயப் போவபவர்களுக்கு’ எயிட்ஸ், கொனரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றாமலும் பாது காக்கிறது.

ஆணுறை என்பது விறைத்திருக்கும் உறுப்பை மூடும்படி போடப்படும் ஒரு மென்மையான உறையாகும். விந்து வெளியேறியதும் பெண் உறுப்பினுள் சென்று கருத்தரித்தலை அது தடுக்கும்.

அத்துடன் பாலியல் நோய் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றாமலும் பாதுகாக்கிறது.

ஆயினும் பூரண பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின் அதனைச் சரியான முறையில் அணிந்து கொள்வது முக்கியமாகும்.

அணியும்போது அவதானிக்க வேண்டியவை

உறையிலிருந்து ஆணுறையை கவனமாக வெளியே எடுங்கள். நகம், பிளேட், கத்தரிக்கோல் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். அதில் சிறுசேதம் கூட ஏற்பட்டால் கூட வரப்போகும் துன்பம் உங்களுக்கும் மனைவிக்கும்தான்.
சுன்னத்து செய்யப்படாதவராயின் உறையை அணிவதற்கு முன்னர் உறுப்பின் முற்புறத் தோலை பின்னுக்கு இழுத்துவிடுங்கள்.

உறையின் மூடிய பகுதி முற்புறம் இருக்குமாறு, வளையப் பகுதியை விறைத்த உறுப்பின் மீது உருட்டி விரித்து அணியுங்கள்.
அவ்வாறு அணியும்போது உறையின் நுனிப் பகுதியில் உள்ள குமிழ்ப் பகுதியில் காற்று இருந்தால் அதனை அழுத்தி வெளியேற்றி விடுங்கள். இல்லையேல் விந்து வெளியேறியதும் காற்றின் அழுத்தம் அதிகமாகி அது வெடித்து விந்து சிந்திவிடும் அபாயம் உள்ளது.

உறவின் ஆரம்ப நிலையிலேயே அணிந்து கொள்வது புத்திசாலித்தனமானது. ஆணுறையை உறுப்பு விறைப்பு அடைந்தவுடன் அணிந்து கொள்ள வேண்டுமெயன்றி, இறுதியாக விந்து வெளியேறும் தருணத்தில் அல்ல. கடைசி நேரத்தில் அணிந்து கொள்ளலாம் என நினைத்திருந்து, தற்செயலாக ஒரு சிறு துளி விந்து உள்ளே போவதினாலேயே பெரும்பாலான கர்ப்பங்கள் தங்கிவிடுகின்றன.
விந்து வெளியேறியதும் உடனடியாக குறியை வெளியே எடுத்துவிடுங்கள். ஆணுறை வழுகிவிடாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதன் வளையப் பகுதியை கைவிரல்களால் பற்றியபடி வெளியே எடுப்பது நல்லது. ஏனெனில் விந்து வெளியேறியதும் குறி சோர்வடைந்தவுடன் ஆணுறை கழன்றுவிடும்.
ஆணுறை வாங்கும்போதே அதன் பயன்பாடு காலாவதியாகும் திகதியைப் பார்த்து வாங்குங்கள்.
அதனை உபயோகிக்கும் முன்னர் அது மொரமெரப்பாக வெடிக்கும் தன்மையில் இருந்தால், அல்லது அதில் சிறு துவாரங்களோ வெடிப்புகளோ இருந்தால் அதனை ஒரு போதும் உபயோகிக்க வேண்டாம்.
ஒருபோதும் அவற்றை மீள உபயோக்கிக்க வேண்டாம். இவை ஒரு முறை பாவித்து கழித்துவிட வேண்டியதற்கு ஏற்பவே தயாரிக்கப்பட்டுள்ளன.
பாலியல் நோய்கள் தொற்றாதிருக்க வேண்டுமாயின் வழமையான பாலுறவு முறையின் போது மட்டுமின்றி, வாய்ப் புணர்ச்சி, குதப்புணர்ச்சி ஆகியவற்றின் போதும் அணிவது அவசியமாகும்.
ஓவ்வொரு பாலுறவின் போதும் ஆணுறைiயை சரியான முறையில் உபயோகித்தால் 98% கர்ப்பம் தங்குவதைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அதேபோல HIV நோய் தொற்றுவதை 80%-95% தடுக்கும் எனவும் தெரிகிறது. உறவின்போது சராசரியாக 2% ஆணுறைகள் வழுகிவிட அல்லது வெடித்துவிடக் கூடும்.

ஆயினும் இது அதனை சரியான முறையால் அணியாததால்தான் நிகழ்வதாகத் தெரிகிறது. எனவே அதனை சரியான முறையில் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தவறான கருத்துக்கள்

ஆணுறையானது உறுப்பை இறுகப் பற்றி விந்து முந்தி வெளியேறுவதற்குக் காரணமாகிறது எனச் சிலர் தவறாகக் கருதுவதுண்டு. உண்மையில் ஆணுறையை ஆரம்ப கட்டத்திலேயே (Foreplay) அணிந்து கொண்டால் உறுப்பு வழமையை விட அதிக நேரம் விறைப்புற்று இருப்பதுடன் விந்து முந்துவதையும் தடுக்கும்.
சிலர் தமது ஆணுறுப்பு பெரிதாக அல்லது சிறியதாக இருப்பதால் தமக்கு அவை பொருந்தாது என எண்ணுவதுண்டு.
இதுவும் தவறான கருத்து. பெரும்பாலும் அவை ஒரே சைசில் கிடைத்தாலும் Latex என்ற பொருளால் செய்யப்பட்டிருப்பதால் உறுப்பின் அளவிற்கு ஏற்ப விரிந்து அல்லது சுருங்கிக் கொடுக்கும்.

ஆரம்பித்தில் குறிப்பிட்ட தம்பதிகளுக்கு ஏன் கர்ப்பம் தங்கியது என்பது கட்டுரையை அவதானமாக வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு உறவின் போதும் ஆரம்பத்திலேயே சரியான முறையில் அணிந்தால் கர்ப்பம் தங்குவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

அத்துடன் புற மேச்சலுக்குப் போனாலும் எயிட்ஸ் வராமல் தப்புவதற்கான சாத்தியமும் உண்டு. அதனால்தான் டபுள் அக்சன் எனச் சொல்லப்படுகிறது.

முன்பு தமிழ் நாட்டில் புள்ளிராஜா விளம்பரங்கள் வெளிவந்தன. கிளிக் பண்ணவும் இப்பொழுது தில்லிதுர கலக்குகின்றனவாம். இது சென்னை ஒன்லைன் செய்தி.

ஆனால் கொண்டோமுக்கு வேறு பல பயன்களும் உண்டு.அதிலொன்று இது. உங்களுக்கும் அவ்வாறு பயன்படலாமே!

இருந்தபோதும் இப்படிப் பாவிப்பதைவிட உண்மையான தேவைக்கு பயனபடுத்துவது முக்கியமாகும்.