Home குழந்தை நலம் குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்

குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்

32

குழந்தை நலம்: குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறோமோ இல்லையோ பாலியல் கல்வி மிகவும் முக்கியம். குழந்தைகளிடத்தில் அவர்கள் உடல் ரீதியாக என்னென்ன புரிதல்கள் ஏற்படும் அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு குழந்தைகளுக்கான பாலியல் கல்வி மிகவும் முக்கியன். குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்.

0-2 வயது
உடல் உறுப்புகளின் பெயர்களை சொல்லிக்கொடுங்கள். கண், காது, மூக்கு, வாய் என்று நிற்காமல் பிறப்புறுப்பு, மார்பு போன்றவற்றையும் சொல்லிக்கொடுங்கள். நேரடி மொழியாக இல்லாவிடினும் குழந்தைகளுக்கு எளிதில் வாயில் நுழையும் படியான பெயர்களை சொல்லி அந்த உறுப்பின் பெயரை நினைவுபடுத்துங்கள். குளிக்க வைக்கும் போது, டயாப்பர் மாற்றும் போதும் கேட்டு பதில் பெறுங்கள். பிறப்புறுப்பு மற்றும் மார்பை யாரையும் தொட அனுமதிக்க கூடாது. அப்படி மீறியும் தொட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு இந்த வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க துவங்கிவிடலாம்.

2-3 வயது
ஓடியாடி விளையாடும் வயதில் தன்னைப் பற்றியும் பிற குழந்தைகள் பற்றிய பார்வையும் வேறுபடத்துவங்கும். எல்லாவற்றையும் இந்த வயதில் தான் கவனிக்க துவங்குவார்கள். ஆண் பெண் வித்யாசங்களை இந்த வயதிலிருந்தே குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

4-5 வயது
இது கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும் வயது. இந்த வயதில் குழந்தைகள் கேட்டு பெற்றோரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளில் ஒன்று நான் எப்டி பொறந்தேன்? இவ்ளோ நாள் எங்கிருந்தேன்? என்பதாகத்தான் இருக்கும். குழந்தையை திட்டி அதட்டாமல் அம்மாவின் கர்ப்பபைக்குள் தான் நீ வந்த, அம்மாவின் கருமுட்டைக்குள் ஸ்ப்ர்ம் நுழைந்தால் பாப்பா ரெடி! என்பதை கதையைப் போல புரியவைத்திடுங்கள். ஆரம்பத்திலேயே முழுவதை புரியவைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

6-8 வயது
ஆர்வக்கோளாறு வயது இது. கற்றுக் கொள்ள துடிக்கும் இப்பருவ குழந்தைகளுக்கு, நீங்கள் தாரளமாகவே விரிவாக பாலியல் கல்வி குறித்து சொல்லிக் கொடுக்கலாம். நீங்கள் தரும் ஒவ்வொரு விளக்கத்திலும் திருப்தியடையாத குழந்தை அடுத்தடுத்த கிளை கேள்விகளில் துளைத்தெடுக்கும்.

பாப்பா எப்படி தானா வரும் ?
பாப்பா வேணும்னா ஆணோட ஸ்ப்ர்ம் ஒரு பெண்ணோட கருமுட்டைக்குள்ள நுழையணும். இப்படி நுழையணும்னா ஒரு ஆணும் பெண்ணும் இன்டர் கோர்ஸ் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். இதனை கதை வடிவில் குழந்தைக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சொல்வது போல் சொன்னால் எளிதாக புரிந்து விடும்.

காத்திருப்பு
குழந்தைகள் கேட்டால் சொல்வோம், அதைப்பற்றி பேசுவோம் என்று காத்திருக்காமல் நீங்களாகவே பேச்சை ஆரம்பியுங்கள், இன்றைய தினம், பள்ளியில் நடந்தவைகளை கேட்டு அவர்களை சகஜப்படுத்திய பின்னர். நீ எப்டி வந்தன்னு உனக்கு தெரியவேணாமா? பாப்பா பொறக்குறதுக்கு முன்னாடி எங்கயிருந்த தெரியுமா? என்று விவாதத்தை நீங்களே ஆரம்பியுங்கள்.

கவனம்
எட்டு வயதில் குழந்தைக்கு பூப்பெய்தல் பற்றியும் எதனால் பூப்பெய்கிறார்கள் என்பதையும் சொல்லுங்கள். அதனால் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே சொல்லி அவர்கள் மனதில் எழும் பயத்தை போக்கிடுங்கள். அதே நேரத்தில் குழந்தைகள் இணையம் பயன்படுத்த ஆரம்பித்திருந்தால் தொடர்ந்து அவர்களை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். பாலியல் தொடர்பானவற்றை இணையத்தில் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் கோபம் கொள்ளாமல் நிதானமாக பேசி என்னிடமே கேட்டிருக்கலாமே என்று சகஜமாக பேசுங்கள்.

தயார்
குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வி கற்றுக்கொடுப்பதற்கு முன்னதாக உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தயக்கங்களை விட்டொழித்து, குழந்தைகளிடம் பேசுங்கள்.

எளிய மொழி
குழந்தைகளுக்கு புரியம்படியாக எளிய மொழியில் விளக்கம் கொடுங்கள். விரிவான முழுமையான விளக்கமாக இல்லாவிடினும் சரியான புரிதல் அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.

ஒப்புக்கொள்ளுங்கள்
குழந்தைகளின் கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை என்றாலோ அல்லது தெரியவில்லை என்றாலோ ஒப்புக்கொள்ளுங்கள். அதெல்லாம் கேட்கக்கூடாது என்றோ, அல்லது பொய்யான பிம்பத்தை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டாம். தைரியமாக,தெரியாது பிறகு சொல்கிறேன் என்று சொல்லுங்கள்.

விவாதம்
பாடம் எடுப்பதை போன்றோ அல்லது அறிவுரை வழங்குவது போன்றோ இல்லாமல் குழந்தைகளுடன் விவாதித்து புரியவைத்திடுங்கள். ஒவ்வொரு விளக்கத்தையும் கொடுத்தப்பின்னர். அதைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் எப்படி புரிந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகு அடுத்த நகர்வுக்குச் செல்லலாம்.