Home பெண்கள் பெண்குறி கட்டுப்பாடு இல்லாமையும்? அறியாமையும்?

கட்டுப்பாடு இல்லாமையும்? அறியாமையும்?

42

பிரிட்டனில், 12 வயதான சிறுமிகள் கருச்சிதைவு செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு, அரசின் “செக்ஸ்’ தாராளமய கொள்கை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிட்டனில், சிறிய வயதில் “செக்ஸ்’ வைத்துக்கொள்வதை அரசின் சட்டம் அனுமதிக்கிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் “செக்ஸ்’ உறவு வைப்பதை தடை செய்யவில்லை. அதனால், சிறிய வயதில் கருத்தடை நடவடிக்கையில் இறங்குவதும் சகஜமாகி விட்டது.

கருத்தடை மாத்திரை, கருத்தடை சாதனம் பயன்படுத்த தவறிய 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள், கருச்சிதைவு செய்து கொள்கின்றனர். தெற்கு லண்டன் உட்பட சில பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது என்று, சமீபத்தில் எடுத்த சர்வேயில் தெரியவந்தது. பிரிட்டன் பள்ளிகளில் “செக்ஸ்’ கல்வி நடைமுறையில் உள்ளது. இருந்தும், “செக்ஸ்’ உறவு கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மாணவிகள், கருச்சிதைவு செய்யவும் துணிகின்றனர்.கடந்த ஆண்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆயிரம் பேரில் 44 பேர் வீதம் கருச்சிதைவு செய்து கொண்டுள்ளனர். பிரிட்டனில் இதுவரை இல்லாத மோசமான நிலை இது என்று, சமூக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

“பள்ளிக் கல்வியில் கலாசாரம், குடும்ப உறவு போன்றவற்றை கற்பிக்காமல் விட்டதால், மாணவ-மாணவிகளுக்கு போதுமான கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. “செக்ஸ்’ கல்வி இருந்தும் அவர்கள் தவறான வழியில் செல்ல பெற்றோரும் முக்கிய காரணம். அரசு, இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இன்னும் ஆண்டில் நிலைமை மோசமாகிவிடும்’ என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்தடை என்பது, கருத்தரிப்பதைத் தடை செய்யும் முறையாகும்.

கருத்தரிப்பதைத் தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சில வழிமுறைகள் மற்ற வழிமுறைகளை விடச் சிறந்தது.

அதில் ஹார்மோன் மருந்துகள், கருத்தடைச் சாதனங்கள், கருத்தரிப்பு நிகழக்கூடிய நாட்களில் செக்ஸைத் தவிர்ப்பது (இதைத் தான் `பாதுகாப்பான நாட்கள்’ என்று அழைப்பார்கள்) மற்றும் அறுவை சிகிச்சை.

கருத்தடை முறையில் பாதுகாப்பான பல முறைகள் வந்து இன்றைய பெண்களின் உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது.

கருத்தடை முறைகளைத் தெரிந்துகொண்டு, அதில் உங்களுக்கும், உங்கள் லைஃப் ஸ்டைலுக்கும் எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

கருத்தடையில் என்னென்ன வகைகள் இருக்கிறது?

*ஹார்மோன் முறை:-

கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ (வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படுவது) மற்றும் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் அடங்கியது. இந்த ஹார்மோன்கள் பெண்களுடைய சினைப்பையிலிருந்து மாதாமாதம் வெளிவரும் கருமுட்டையைத் தடை செய்து விடும். தவிரவும், இந்த முறையினால் கருப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் வெள்ளைச் சளி போன்ற டிஸ்சார்ஜ் (mucus discharge)தடிமனாகி, விந்து கர்ப்பப்பைக்குள் நுழையாமல் தடை செய்துவிடும்.

சில நாட்கள் வரை குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள் மிகச் சிறந்த வழி.

கருத்தடை மாத்திரை சாப்பிடும் பெண்கள் அதை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருத்தடை ஊசி ஒன்று இருக்கிறது. அது 3 மாதங்களுக்கு கர்ப்பத்தைத் தடுக்கும். இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொள்ளலாம்.

சில கட்டுக்கதைகள்!

கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்கள் குண்டாகி விடுவார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் இது உண்மையல்ல. உடலில் நீர் சேர்வதால் ஒன்று அல்லது இரண்டு கிலோ மட்டும் வெயிட் போடலாம். இந்த மாத்திரையினால் கேன்சர் வருமோ என்று சில பெண்கள் தயங்குவார்கள். இது உண்மையல்ல. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயம் என்னவென்றால், இந்த கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரும் ஓவேரியன் கேன்சரை வர விடாமல் தடுக்கும்.
*ஆணுறைகள்:-

எச்.ஐ.வி, ஹெப்படைடிஸ் போன்ற செக்ஸ் வழியாகப் பரவும் வியாதிகளைத் தடுப்பதில் இந்த ஆணுறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கருத்தடை விஷயத்தில் ஆணுறைகள் ஃபெயிலியர் ரேட் அதிகம். அதாவது 15%. அதனால் கர்ப்பம் ஏற்பட்டால் கவலை இல்லையென்றால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

*கருத்தடைச் சாதனம்:- (Intrauterine device IUD)
இந்த சாதனம் ஒரு சிறிய பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. அதன் மேல் காப்பர் (அ) ஹார்மோன் இருக்கும். இதை கருப்பைக்குள் வைப்பார்கள். இந்த காப்பர் (அ) ஹார்மோன் கர்ப்பப்பைக்குள் இருப்பதனால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் கர்ப்பப்பைக்குள் நிற்க விடாது. இந்த கருத்தடைச் சாதனத்தை அதன் டைப்பைப் பொறுத்து 3 முதல் 5 வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் ஃபெயிலியர் ரேட் வெறும் 3% லிருந்து 5% வரைதான். தவிர, இந்த முறை ஏற்கெனவே குழந்தை பிறந்தவர்களுக்கு மிகவும் ஏற்றது.

*பாதுகாப்பான நாட்கள் (சேஃப்டி பீரியட்):-

கருத்தடை முறையில் இந்த முறைதான் இயற்கையான ஃபேமிலி பிளானிங். இந்த முறையில் எந்த கருத்தடைச் சாதனத்தையும், கருத்தடை மாத்திரைகளையும், ஊசிகளையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. கருத்தரிப்பதைத் தடைசெய்ய வேண்டுமென்றால், பீரியட்ஸ் தொடங்கிய முதல் 7 நாட்கள் வரை உறவு கொள்ளலாம்.

(பீரியட்ஸ் ஆன முதல் நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்) மற்றும் அடுத்த மாத பீரியட்ஸ் வருவதற்கு முந்தைய 7 நாட்களும்தான் `பாதுகாப்பான நாட்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கருத்தடை முறை பீரியட்ஸ் ரெகுலராக இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இந்த முறையின் ஃபெயிலியர் ரேட் 25%.

*கருத்தடை ஆபரேஷன் (Sterilisation):-
இந்த கருத்தடை முறையில், விந்தணு அல்லது கருமுட்டையை எடுத்துக்கொண்டு செல்லும் கருக்குழாய்களை ஆப்ரேஷன் மூலம் மூடி விடுவார்கள். இந்த ஆப்ரேஷனைச் செய்து கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ பிறகு எப்போதுமே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.

வாசக்டமியில், ஆணின் விந்தணுவைக் கடத்திச் செல்லும் குழாயை சர்ஜன் வெட்டி, சீல் செய்து விடுவார். பெண்ணுக்குச் செய்யும் போது, ஓவரியிலிருந்து கருப்பைக்கு கருமுட்டையை ஏந்திச் செல்லும் கருக்குழாயை கட் செய்து, சீல் பண்ணி விடுவார். இதில் ஆணுக்குச் செய்யும் ஆப்ரேஷன் பெண்ணுக்குச் செய்யும் அறுவை சிகிச்சையைவிட சுலபமானது. இந்த சிகிச்சையினால் ஆண்மை குறையாது. இந்த கருத்தடை முறையில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஃபெயிலியர் ரேட் ஒரு சதவீதத்துக்கும் கீழேதான்!

***எமர்ஜென்சி கருத்தடை முறை!

பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டாலோ அல்லது ஆணுறை உபயோகப்படுத்தியும் அது கிழிந்து இருந்தாலோ எமர்ஜென்சி கருத்தடையான `மறுநாள் காலையில் பயன்படுத்தும் மாத்திரைகளை’ எடுத்துக் கொள்ளலாம். இந்த ஹார்மோனல் மாத்திரையை உறவு கொண்ட 72 மணிநேரத்துக்குள் ஒரு மாத்திரையும், அதன் பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்குள் மற்றொரு மாத்திரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்த கருத்தடை மாத்திரைகளை தற்போது தடை செய்து உள்ளார்கள்.

தம்பதிகள் கருத்தடை முறையைப் பயன்படுத்தவில்லை என்றால் ஒரு வருடத்துக்கு குழந்தைப் பிறப்பு 80% இருக்கும். கருத்தடை ஆபரேஷன் முறையைத் தவிர ஹார்மோன் முறை மருத்துவம், கருத்தடைச் சாதனம் (IUD) ஆகியவை மிக எஃபெக்ட்டிவான முறைகள். எந்த வகை கருத்தடையும் உபயோகிக்காமல், பாதுகாப்பான நாட்களை மட்டும் உபயோகித்தால் (Safe period) கர்ப்பம் ஆவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு!