Home குழந்தை நலம் அப்பாவிடம் இருந்து ஆண் குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்..

அப்பாவிடம் இருந்து ஆண் குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்..

19

‘பெண் குழந்தைகளை கட்டுப்பாட்டோடு வளர்க்கவேண்டும்’ என்று காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், உடை அணிவது முதல் வெளியே சென்று திரும்புவது வரை பல விஷயங்களில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவளுக்கு வெளி இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கும் அவளே மூலகாரணம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூகம் என்பது ஆண்-பெண் இருபாலரையும்கொண்டது. அப்படியிருக்கையில் ஏதாவதொரு வகையில் நடக்கும் சமூக குற்றத்திற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இந்த தவறான கருத்து தவறு செய்யும் ஆண்களை சுலபமாக தப்பிக்க வழிவகை செய்துவிடுகிறது. பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. ஆண் குழந்தைகளை, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் வளர்க்கவேண்டும். வீட்டிலிருந்தே இதற்கான பாடத்தை தொடங்க வேண்டும். முதலில் அம்மா, சகோதரி என்று வீட்டிலுள்ளவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். அக்கம்பக்கத்து பெண்களையும் கேலி, கிண்டல் செய்வதை அனுமதிக்கக்கூடாது. பெண்களை பற்றி எப்போதும் ஆண் குழந்தைகளிடம் கவுரவமாகவே பேசவேண்டும்.

ஒழுக்கம்

பெண்கள் மட்டுமே ஒழுக்கம் என்ற விஷயத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். அதுபற்றிய அறிவுரை பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுத்து அதன்படி நடக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். பெண்களை எப்படி அழைக்கவேண்டும்? அவர் களிடம் எப்படி மரியாதையாக பழகவேண்டும்? என்பது போன்ற விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒழுக்கம் என்பது இருவருக்கும் பொதுவான ஒன்று என்பதை குழந்தை பருவத்திலேயே புரிய வைத்துவிடவேண்டும். ஒழுக்கத்தில் மிக முக்கியமானது பெண்களை மதிப்பது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்திடவேண்டும்.

தவறுகள்

தவறுகளை சுட்டிக்காட்டி கண்டிப்பதில் இருபாலினத்தவரிடமும் எந்த பாகுபாடும் காண்பிக்கக்கூடாது. யார் தவறு செய்தாலும் அவர்களை திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்காக கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தவறுகள் செய்வதற்கு பயமும், தவறு செய்திருந்தாலும் தங்களை திருத்தி கொள்வதற்கான மனப்பக்குவமும் உண்டாகும். மூளையும் அதற்காக பழக்கப்படும். எந்த ஒரு வேலையையும் யோசித்து நிதானமாக செய்யும் வழக்கமும் அவர்களுக்கு ஏற்படும்.

சுதந்திரம்

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்படுவதுதான் நடைமுறையில் இருக்கிறது. வெளியில் சென்று நண்பர்களுடன் அதிக நேரம் ஊர் சுற்றுவது, நேரம் கடந்து வீட்டிற்கு வருவது, மனம் விரும்பியபடி சிகை அலங்காரம் செய்துகொள்வது, விதவிதமாக உடை அணிந்துகொள்வது, வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்வது, பெண்களைப் பற்றி தவறாக விமர்சிப்பது போன்ற பல விஷயங்களில் ஆண் பிள்ளைகளின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமை கொடுத்து கண்டிப்போடு வளர்க்க வேண்டும். ஊர்சுற்றுவது பெண்களுக்கு தவறு என்றால், அது ஆண்களுக்கும் தவறுதான். காலம் கடந்து வீடு திரும்புவது, எங்கு போகிறோம் என்பதை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் போவது எல்லாம் தவறுதான். அது ஆண், பெண் இருபாலருக்குமே பாதுகாப்பற்றதும்கூட.

சமமாக பாவித்தல்

பெண்களை சமமாக பாவித்து மதிக்கும் பக்குவம் ஆண் களுக்கு வரவேண்டும். அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவருமே ஆண்-பெண் குழந்தைகளை சமமாக நடத்த வேண்டும். எந்த விதத்திலும் பெண்கள், ஆண்களுக்கு குறைந்தவரில்லை என்ற விஷயம் அவர்கள் மனதில் பதியவைக்கப்படவேண்டும்.

தவறான விமர்சனம்

பெண்களை கேலி செய்வது, மற்றவர்கள் முன் தரம்பிரித்து பேசுவது போன்றவை தவறு என்பதை புரிய வைக்கவேண்டும். எப்போது அந்த தவறை ஆண் குழந்தைகள் செய்தாலும் உடனடியாக தலையிட்டு முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். சிறுவர்கள் வெளியில் சென்று தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் பழகும்போது அவர்களின் பேச்சையும், நடத்தையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். தன்னைவிட மூத்தவர்கள் பெண்களை தவறாக விமர்சனம் செய்தால், தானும் அதுபோல் நடந்துகொள்ள முன்வருகிறார்கள். அதை அப்படியே அனுமதித்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் வரம்பு மீறி விமர்சனம் செய்ய தொடங்கி விடுவார்கள். சிலர் பள்ளி ஆசிரியைகளைகூட குரு என்றும் பார்க்காமல் தவறாக விமர்சிக்கிறார்கள். அது விளையாட்டுத்தனமானது அல்ல, விபரீதமானது என்பதை சிறுவர்களுக்கு புரியவைக்கவேண்டும்.

பெண்களை அடிப்பது

பெரும்பாலான சிறுவர்கள், பெண்களிடம் தங்கள் பலத்தைக்காட்ட நினைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே சட்டென்று அடித்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். இந்தப் பழக்கம் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. சகோதரி களுடன் சண்டை வரும்போது அவர்களை அடிக்க முற்படும் வழக்கத்தை கண்டித்து நிறுத்தாவிட்டால் அது வெளியிலும் தொடரும். இது பெரிய சிக்கலில் போய் முடியும்.

பொறுப்பு

ஆண்களுக்கு நிறைய சமூக கடமைகள் இருக்கின்றன என்பதை சிறுவயதிலே அவர்களுக்கு உணர்த்தவேண்டும். வீட்டில் உள்ள பெண்களுக்கு துணையாக இருப்பதும், அதேபோல வெளியிலிருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதும் அவர்களுடைய கடமை. இந்த பொறுப்புணர்வு வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். மனதில் அலைபாயும் எண்ணங்களை தடுத்து நிறுத்தி, கல்வியில் கவனம் செலுத்த கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும் விஷயங்களைவிட நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள் தான் மனதில் நன்கு பதியும். நல்ல குடும்பத் தலைவராக, குடும்ப பொறுப்புடன் நடந்துக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள மனைவி, அம்மா, சகோதரி மற்றும் உறவுப் பெண்களையும், மற்ற பெண்களையும் மரியாதையாக நடத்துங்கள். அதைப் பார்த்து உங்கள் ஆண்பிள்ளைகள் கற்றுக்கொள்ளட்டும்.