Home / ஆரோக்கியம் / ஆண்கள் பொதுவாகச் செய்கின்ற, திருத்திக்கொள்ள வேண்டிய சில பிழைகள்

ஆண்கள் பொதுவாகச் செய்கின்ற, திருத்திக்கொள்ள வேண்டிய சில பிழைகள்

உடல் ரீதியாக ஆண்கள் வலுவான இனம் என்றாலும், உடல்நலப் பிரச்சனைகளை எதிர்ப்பதில் அவர்கள் அந்த அளவுக்கு பலசாலிகள் அல்ல. இன்று நாம் பின்பற்றும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் மன அழுத்தத்தின் காரணமாகவும், ஆரோக்கியமற்ற பழக்கங்களாலும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் எளிதில் வந்துவிடுகின்றன. உடல்நலத்தைப் பொறுத்தவரை, ஆண்கள் எல்லாவற்றையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் போக்கு உள்ளது. பொதுவாக, ஆண்கள் உடல்நலத்தில் செய்யும் தவறுகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்:

1. உடல்நலப் பரிசோதனைகளைத் தவிர்ப்பது – நான் நன்றாக இருக்கிறேன், ஆகவே நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றே பல ஆண்கள் நினைக்கின்றனர். ஒருவிதத்தில் இது உண்மையென்றாலும், குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஆண்கள் குறித்த காலமுறையில் உடல் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டியது முக்கியம். அலுவலகத்தில் எதிர்கொள்ளும் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தூக்க முறைகள், பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகநேரம் பயன்படுத்துதல், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் உடலின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. பெண்களைப் போலவே, ஆண்களும் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்க அது உதவும். ஆண்கள், தங்களுக்குள்ள பிரச்சனைகள் பற்றி சரிவர வெளிப்படுத்திக் கூற மாட்டார்கள். குறிப்பாக பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி வாய்திறக்க மாட்டார்கள். அவர்கள் வெளிப்படையாக, விவரமாகப் பேசினால்தான், அவர்களின் பிரச்சனைகளை துல்லியமாகக் கண்டறியவும், தகுந்த சிகிச்சை வழங்கவும் முடியும்.

2. எல்லா ஆண்களுமே, தன்னுடையது இரும்பு இதயம், இதய நோய்கள் எல்லாம் தன்னை எட்டிப்பார்க்காது என்ற ஒரு மூடநம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், இளம் வயது ஆண்களும் கூட, இதய நோய்களில் இருந்து தப்பிவிட முடியாது. குறிப்பாக, குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய்கள் இருந்தால், அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.

3. போதைப் பழக்கம் – அதிகம் புகைபிடிப்பது, மதுப்பழக்கம், தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது, போன்றவை நீண்டகாலம் தொடரும்போது, ஆண்களுக்கு பல உடல்நலக் கெடுதல்கள் நேர அவை காரணமாகின்றன. அதிக மது அருந்துதலும், புகைப்பழக்கமும் புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை மிகவும் அதிகரிக்கும்.

4. உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள் – பெண்களைப் பொறுத்தவரை எல்லா உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். ஆனால், ஆண்களோ உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள், எல்லாவற்றையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொள்வார்கள், யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இதனால், அவர்களுக்குத் தேவையான தகுந்த உதவியும் ஆதரவும் கிடைக்காமல் போகிறது. இதன் விளைவாக, ஆண்களிடையே தற்கொலையும், போதைப் பழக்கமும், மதுப்பழக்கமும் அதிகம் காணப்படுகிறது. மனதிற்குள் பல உணர்ச்சிகளை கொந்தளிக்கவிட்டு அடக்கி வைத்திருப்பது, உறவுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தி பாதகம் விளைவிக்கலாம்.

5. மன அழுத்தம் என்பது வாழ்வில் ஒரு பகுதியே – வேலையிடத்தில் ஆண்கள், பெண்கள் இரு பாலருக்குமே அழுத்தம் அதிகமுள்ளது. எனினும், ஆண்களுக்கு இந்த அழுத்தம் அதிகமாக இருந்து தாங்க முடியாத அளவுக்குச் செல்லலாம். அதிக மன அழுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம், மன இறுக்கம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். வேலை தவிர வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, குடும்பத்துடன் கணிசமான நேரத்தை செலவிடுவது போன்றவற்றின் மூலம், ஆண்கள் தங்களை அழுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். வேலை அளவுக்கு மீறி அழுத்தம் தருவதாக இருந்தால், வேறு வேலைக்கு முயற்சி செய்வது அல்லது மேலதிகாரியிடம் அதுபற்றிப் பேசி சாத்தியமுள்ள தீர்வுகளை நோக்கி நடவடிக்கை எடுப்பது போன்றவையும் பலன் கொடுக்கும்.

6. தினமும் இரவில் ஹாட் டப்பில் குளிப்பது – மிகுந்த பணிச்சுமையில் உழன்றுவிட்டு, பல மன அழுத்தங்களுடன் வீடு வந்து சேரும்போது, ஆண்களுக்கு ஹாட் டப்பில் சிறிதுநேரம் குளியல் போட்டால் நன்றாக இருப்பது போல் தோன்றும். பலருக்கும் இது பழக்கம். ஆனால் ஆண்களுக்கு இது விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும், குழந்தை பெறும் திறனையும் பாதிக்கக்கூடும். ஆகவே, ஆண்கள் விந்தகங்கள் இருக்கும் பகுதிகளை சூடாக்கும் வகையிலான செயல்கள் எதனையும் தவிர்ப்பது நல்லது.

7. ஆண்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மாட்டார்கள் – ஆண்களுக்கு சருமப் பராமரிப்பெல்லாம் அவசியம் இல்லை என்பது தவறான கருத்து. அதிக நேரம் வெளியே இருக்கும் ஆண்களுக்கு சருமப் பராமரிப்பு மிக அவசியம். அவர்கள் சூரியனின் புறவூதாக் கதிர்களின் தீங்கிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் அவசியம்.

8. எல்லோரும்தான் குறட்டை விடுவார்கள் – எல்லோரும் தான் குறட்டை விடுகிறார்கள் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். குறட்டை, தூக்கத்தில் சுவாசம் தடைபடுவதன் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு தூக்கத்தின்போது சில வினாடிகள் சுவாசம் தடைபட்டு, மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் வழங்கல் தடைபடலாம். அதிக குறட்டை இருந்தால், அது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே மருத்துவரிடம் சென்று என்ன என்று பார்க்க வேண்டும்.

9. தனிப்பட்ட சுத்தமின்மை – சுத்தம் என்று வரும்போது ஆண்கள் கொஞ்சம் பின்தங்கியவர்கள் தான்! ஆண்கள் புகைபிடித்தல், புகையிலை பொருள்களை மெல்லுதல், வெற்றிலை பாக்கு, பீடா போன்றவற்றைப் பயன்படுத்துதல் என பல்வேறு வழிகளில் பற்களில் கரை ஏற்பட விட்டுவிடுவார்கள். ஆண்கள் அடிக்கடி பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும் மாட்டார்கள்.

10. தவறான உணவுப் பழக்கம் – காலை உணவைத் தவிர்த்தல், மதிய உணவுக்கு துரித உணவு அல்லது நொறுக்குத்தீனி எடுத்துக்கொள்ளுதல், மது அருந்திவிட்டு அதிகமாக இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை ஆண்களின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, வீட்டை விட்டு வெளியே தங்கியிருக்கும் திருமணமாகாத இளைஞர்கள் இதுபோன்ற தீய பழக்கங்களில் சிக்கிக்கொண்டு உழலும் வாய்ப்பு மிக அதிகம். வேலையில் சமாளிக்கும் அழுத்தம் மட்டுமின்றி, இந்தத் தீய பழக்கங்களும் உங்கள் முழு உடலையும் மிகவும் பாடுபடுத்தி சிதைக்கும்.

உடல்நலம் என்று வரும்போது ஆண்கள், பெண்கள் இரு பாலருமே தங்கள் உடலை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், ஆண் என்பதால் ஒருவர் உடல்நலத்தில் அக்கறை காட்டமல் இருக்க வேண்டுமென்பதில்லை! ஆரோக்கியம் அனைவருக்கும் சமமே!