Home பாலியல் ஆணுறைகள் தம் வேலையைச் செய்யாமல் தோல்வியடையுமா?

ஆணுறைகள் தம் வேலையைச் செய்யாமல் தோல்வியடையுமா?

49

ஆணுறை என்பது ஆண்கள் ஆணுறுப்பின் மீது அணிந்துகொள்ளும் கவசம் போன்ற சாதனமாகும், இவை விந்தணுக்கள் பெண்ணுறுப்பை அடையாதபடி தடுக்கின்றன. ஆணுறைகளைப் பயன்படுத்துவது சிறந்த கருத்தடை முறைகளில் ஒன்றாக உள்ளது. இவை எளிதில் கிடைக்கும், மலிவானவை, பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பளிக்கின்றன என்பது கூடுதல் நன்மை.

சில சமயங்களில், ஆணுறைகள் செயலிழக்கக்கூடும். கருத்தாய்வுகளின்படி, ஆணுறை செயலிழப்பதற்கான வாய்ப்பு சுமார் 3-5% என்றும் ஆணுறை நழுவுவதற்கான வாய்ப்பு சுமார் 1-3.5% என்றும் தெரியவந்துள்ளது.

ஆணுறைகள் செயலிழப்பதற்கான சில காரணங்கள்:

ஆணுறையைத் தவறான முறையில் பயன்படுத்துவது (Incorrect use of condom)

ஆணுறையை சரியாகப் பயன்படுத்தும் முறையைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஆணுறையைப் பயன்படுத்தும்போது சிலர் செய்யும் பொதுவான தவறுகள்:

ஆணுறையைப் பயன்படுத்தும்போது நடக்கும் சில பொதுவான தவறுகள்:

கூர்மையான பொருட்களைக் கொண்டு ஆணுறை பாக்கெட்டைத் திறத்தல். இப்படிச் செய்வதால், ஆணுறைகள் வெட்டுப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஆணுறை பாக்கெட்டின் நடுப்பகுதியில் கிழித்தல் – இதனால் ஆணுறை சேதமடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆணுறை பாக்கெட்டை விளிம்பிலேயே கிழிக்க வேண்டும்.
ஆணுறைகளை அணியும் முன்பு பிரித்தல். சில ஆண்கள் ஆணுறையை அணியும் முன்பே முழுவதுமாகப் பிரித்துவிடுவார்கள், இதனால் ஆணுறை சரியாகப் பொருந்தாமல் போகவும் நழுவிக் கழன்றுவிடவும் அதிக வாய்ப்புள்ளது.
ஆண்குறியின் அடிப்பகுதி வரை ஆணுறையை முழுவதுமாகப் பிரித்துவிடத் தவறுவது.
ஆணுறையின் முனையில் சிறிது இடத்தை காலியாக விடத் தவறுவது.
விந்து வெளியேறிய பிறகு, பெண்ணுறுப்புக்குள் இருந்து ஆணுறுப்பை வெளியே எடுக்கும்போது, ஆணுறையின் விளிம்புப் பகுதியைப் பிடித்துக் கொள்ளாமல் எடுப்பது.
ஆணுறையை தொடர்ந்து பயன்படுத்தாமை (Inconsistent use of condom)

பாலியல் கிளர்ச்சியை எழுப்பும் கிளர்வுக் கட்டத்திலேயே ஆணுறையை அணிந்துகொள்வதே பாதுகாப்பான முறையாகக் கருதப்படுகிறது. சிலர் உடலுறவின் தொடக்கத்தில் ஆணுறை அணியமாட்டார்கள், பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பை நுழைக்கத் தயாராகும் போது மட்டுமே அணிவார்கள். சிலர் விந்து வெளியேறுவதற்கு சற்று முன்பே அணிவார்கள். ஒரு வகை உடலுறவில் இருந்து மற்றொரு வகைக்கு மாறும்போது (உதாரணமாக பெண்ணுறுப்பில் புணர்வதிலிருந்து ஆசன வாயில் புணர்வதற்கு மாறும்போது) சிலர் புதிய ஆணுறையைப் பயன்படுத்தமாட்டார்கள். இப்படி தொடர்ச்சியாக ஆணுறையைப் பயன்படுத்தத் தவறுவதால் ஆணுறை செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

காலாவதியான ஆணுறை (Expired Condom)

ஆணுறைகளின் உறையில் அவற்றின் காலாவதி தேதி இருக்கும், அந்தத் தேதிக்குப் பிறகு அவை உலர்ந்துவிடும், உடையும் தன்மை பெற்றுவிடும். காலாவதியான ஆணுறையைப் பயன்படுத்தினால், அது கிழியும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

ஆணுறைகளை தவறான முறையில் சேகரித்து வைத்தல் (Improper storage of condoms)

சூரிய ஒளி நேரடியாகப் படாத, குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் ஆணுறைகளைச் சேகரித்து வைக்க வேண்டியது மிக முக்கியம். பொதுவாக ஆணுறைகளை அறை வெப்பநிலையில் சேகரித்து வைப்பது நல்லது. வெப்பமான இடங்களிலும் பர்சிலும் ஆணுறைகளை வைத்துக்கொள்வதால் அவை செயலிழக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

வழவழப்புப் பொருள் சார்ந்த பிரச்சனைகள் (Issues with lubricants)

பெண்ணுக்கு பிறப்புறுப்பு வறட்சி பிரச்சனை இருக்கும்போது, அல்லது ஆசனவழிப் புணர்ச்சிக்கு முயற்சி செய்யும்போது வழவழப்புத் தன்மை இல்லாமல் போகலாம். அப்போது உராய்வினால் ஆணுறை கிழியக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆணுறை செயலிழப்பதைத் தடுக்க, வழவழப்புள்ள ஆணுறை அல்லது ஆணுறையுடன் சேர்த்து வழவழப்புப் பொருளையும் பயன்படுத்துவது மிக முக்கியம்.

வழவழப்புக்காக தவறான பொருளைப் பயன்படுத்துவதும், ஆணுறை செயலிழக்க ஒரு காரணமாகலாம். லேட்டக்ஸ் ஆணுறைகளைப் பயன்படுத்தும் போது, நீர் சார்ந்த வழவழப்புப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் சார்ந்த வழவழப்புப் பொருள்களைப் பயன்படுத்தினால், ரப்பர் வலுவிழந்து கிழியலாம்.

தவறான அளவு கொண்ட ஆணுறை (Buying incorrect size condom)

ஆண்குறியின் நீளம் மற்றும் அகலத்துடன் ஒப்பிடும்போது ஆணுறை சிறியதாக இருந்தால், ஆணுறை அதன் திறனுக்கும் அதிகமாக இழுக்கப்படலாம், இதனால் அது கிழியும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆணுறை பெரியதாக இருந்தால், உடலுறவின்போது அது கழன்றுவிட வாய்ப்புள்ளது.

தயாரிப்பில் பிரச்சனைகள் (Manufacturing issues)

ஆணுறைகளை உற்பத்தி செய்வதற்கு என்று சில தர நிபந்தனைகள் உள்ளன. எனினும், ஒவ்வொரு ஆணுறையும் சோதனை செய்யப்படுவதில்லை. உற்பத்தி செய்யப்படும் ஆணுறைகளில், ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒரு சில ஆணுறைகள் மட்டுமே தரச் சோதனை செய்யப்படுகின்றன.  அரிதாக சில சமயங்களில், ஆணுறைகளில் உற்பத்தி சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம், இதனால் ஆணுறை செயலிழப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.