Home ஆண்கள் சைக்கிளிங் செய்வதால் ஆண்களின் குழந்தை பெறும் திறன் பாதிக்கப்படுமா?

சைக்கிளிங் செய்வதால் ஆண்களின் குழந்தை பெறும் திறன் பாதிக்கப்படுமா?

40

சைக்கிளிங் செய்வதால் குழந்தை பெறும் திறன் பாதிக்கப்படுமா
இந்தியாவில் சைக்கிளில் செல்பவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கெனத் தனித்தடங்களும் பிற வசதிகளும் குறைவு, ஆனாலும் சைக்கிளிங் என்பது மிகவும் செலவு குறைந்த பயண முறை. அதுமட்டுமின்றி, சைக்கிளிங் என்பது பலருக்கு மிகவும் ஆர்வமான செயல்பாடாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான ஓர் உடற்பயிற்சி முறையாகவும் பிரபலமடைந்துள்ளது.
சைக்கிளிங் செய்வதில் அதிகமாக ஈடுபடும் ஆண்களுக்கு இருக்கும் ஒரு முக்கியமான கவலை, தொடர்ந்து சைக்கிளிங் செய்வது அவர்களின் குழந்தை பெறும் திறனைப் பாதிக்குமா என்பது.
சைக்கிளிங் செய்வது குழந்தை பெறும் திறனை எப்படிப் பாதிக்க வாய்ப்புள்ளது?
விந்தணுக்கள் உற்பத்தியாக ஏதுவான வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ் ஆகும். இது உடலின் பிரதான வெப்பநிலையான 37 டிகிரி செல்ஷியஸைவிட இரண்டு டிகிரி குறைவு. விந்தகங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்ய ஏதுவான வெப்பநிலையைக் கட்டுப்படுத்திப் பராமரிப்பதில் விதைப்பை முக்கியப் பங்கு வகிக்கிறது.
விந்தணுக்கள் உற்பத்திக்கு ஏதுவான வெப்பநிலையைப் பராமரிப்பதற்காக, நமது சுற்றுப்புறத்தின் வெப்பநிலையைப் பொறுத்து, விந்தகங்கள் நமது அடிவயிற்றுப் பகுதியிலிருந்து விலகிச் செல்கின்றன அல்லது நெருங்கி வருகின்றன. கோடைக்காலத்திலும் வெப்பமான காலநிலைகளிலும், விந்தகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும், இதனால் வெப்பநிலை குறையும். குளிர்காலத்தில், விதைப்பையின் தசைகள் சுருங்கி விந்தகங்ககளை அடிவயிற்றுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும். இதனால் வெப்பநிலை கூடும். விந்தகங்களில் இந்தக் குறைவான வெப்பநிலை பராமரிக்கப்படாமல் போனால், விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கப்படலாம்.

சைக்கிளிங் செய்யும்போது, இயல்பாக உடலிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் விந்தகங்கள் உடலுக்கு அருகில் இருக்க வேண்டியிருக்கிறது. இது விந்தணுக்கள் உற்பத்தியைப் பாதிக்கலாம். அதுமட்டுமின்றி இறுக்கமான, சிந்தடிக் ஆடைகளை அணிந்துகொண்டு சைக்கிளிங் செய்தால், விந்தகங்கள் விதைப்பைக்கு அடியில் மேலே கொண்டு வரப்படும், அதோடு கடினமான இருக்கையில் உட்கார்ந்திருப்பீர்கள். இதனால், நீண்ட காலம் சைக்கிளிங் செய்வது விந்தணுக்களின் வடிவம், உற்பத்தி மற்றும் நகரும் திறனைப் பாதிக்கலாம் எனக் கருதப்பட்டது.

சைக்கிளிங் செய்வதற்கும் குழந்தை பெறும் திறனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?
2009-இல் ட்ரயத்லான் போட்டிகளில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளிவந்தபோதுதான் சைக்கிளிங் செய்வதற்கும் விந்தணுக்களின் தரத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி முக்கியத்துவம் கிடைத்தது. அந்த ஆராய்ச்சியில், எல்லா வீரர்களுக்கும் இயல்பான தரம் (தரம் மட்டுமே; குழந்தை பெறும் திறனல்ல) கொண்ட விந்தணுக்களின் சதவீதம் 10-க்கும் குறைவாக இருந்தது. அதிலும் வாரத்திற்கு ஒருமுறை 300 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக சைக்கிளிங் செய்பவர்களுக்கு இயல்பான விந்தணுக்கள் வெறும் 4 சதவீதமே இருந்தது.

கருத்தரித்தல் மருத்துவமனைகளுக்கு வரும் 2261 பேரைக் கொண்டு ஆய்வு செய்ததில், வாரத்திற்கு 5 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக சைக்கிளிங் செய்தவர்களுக்கு, உடற்பயிற்சி செய்யாதவர்களை விட விந்தணுக்களின் செறிவு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. எனினும், இது பொதுமக்கள் பங்கேற்ற ஆய்வுதானே தவிர, சைக்கிளிங் செய்பவர்களை மட்டும் வைத்துச் செய்ததல்ல.
இது சம்பந்தமாக நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆய்வில், பிரிட்டனைச் சேர்ந்த 5,282 சைக்கிளிங் வீரர்கள் கலந்துகொண்டனர். வாரத்திற்கு 3.75 மணிநேரத்திற்குக் குறைவாக சைக்கிளிங் செய்பவர்கள், 3.76-5.75 மணிநேரம் செய்பவர்கள், 5.76-8.5 மணிநேரம் செய்பவர்கள் மற்றும் 8.5 மணிநேரத்திற்கு அதிகமாக சைக்கிளிங் செய்பவர்கள் என நான்கு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர். இந்தக் குழுக்களில் உள்ளவர்களுக்கு மலட்டுத்தன்மை, விறைப்பின்மை, புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் யாருக்கு எந்த அளவுக்கு உள்ளன என்று ஒப்பிடப்பட்டது.வாரத்திற்கு 8.5 மணிநேரத்திற்கும் மேல் சைக்கிளிங் செய்தவர்களுக்கும் கூட, சைக்கிளிங் செய்வதற்கும் மலட்டுத்தன்மைக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.
சைக்கிளிங் என்பது, நல்ல ஒரு உடற்பயிற்சி, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க அற்புதமான வழி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உண்மை என்னவெனில், தொடர்ந்து சைக்கிளிங் செய்வதால் நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் ஆபத்துகள் குறைகிறது, இன்னும் பல நன்மைகளும் உள்ளன.
தொடர்ந்து உங்கள் இனப்பெருக்க உறுப்புகளை இறுக்குவது பற்றியும் அதனால் குழந்தை பெறும் திறன் பாதிக்குமோ என்றும் உங்களுக்குக் கவலை இருந்தால், இந்த நல்ல செய்தியைக் கேட்டுக்கொள்ளுங்கள்! இதுவரையிலும் செய்யப்பட்ட மிகப் பெரிய ஆய்விலும் சைக்கிளிங் செய்வதற்கும் குழந்தை பெறும் திறன் பாதிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது!