Home பாலியல் ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?

25

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, உடல் நலக் கோளாறுகளும், உணர்வுப்பூர்வமான நெருக்கமின்மையும், இரு பாலைச் சேர்ந்தவர்களுக்கும் பாலியல் ஆர்வம் குறையக் காரணமாக உள்ளது.

5,000 ஆண்கள் மற்றும் 6,700 பெண்கள் கலந்துகொண்டஇந்த ஆய்வின் முடிவுகள் பி.எம்.ஜே ஓபன் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பாலியல் ஆர்வத்தில் உள்ள கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது, வெறும் மருந்துகளை மட்டும் நம்பாமல், ஒரு மனிதரின் மற்ற பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் இழப்பது எப்போதுமே அசாதாரணமானதாக இருக்க வேண்டியதில்லை என்று கூறும் பாலியல் சிகிச்சை நிபுணர் அமந்தா மேஜர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தேவைகள் வேறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

‘வலியும் வேதனையும் நிறைந்தது’
“சிலருக்கு பாலியல் ஆர்வம் குறைவது இயல்பானதாக இருக்கலாம். சிலருக்கு இது வலியையும் வேதனையையும் உண்டாக்கலாம்,” என்கிறார் அவர்.

ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆண்களில் 15% பெரும், பெண்களில் 34% பேரும் கடந்த ஆண்டில் 3 மாதம் அல்லது அதற்கும் அதிகமான காலம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வம் இல்லாமல் இருந்ததாகக் கூறியுள்ளனர்.

ஆண்களுக்கு 35 – 44 வயதிலும், பெண்களுக்கு 55 – 64 வயதிலும் பாலியல் ஆர்வமின்மை மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனால், மாதவிடாய் நின்றுபோவது பெண்களுக்கு பாலியல் ஈர்ப்பு குறைவதற்கான காரணம் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று சௌத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் குடும்பங்களில் இளம் குழந்தைகளைக் கொண்டுள்ளது, பெண்களுக்கு பாலியல் ஆர்வத்தைக் குறைப்பதற்கான காரணமாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மோசமான உடல் மற்றும் மன நலம், தங்கள் துணையுடன் போதிய தகவல் பரிமாற்றம் இல்லாதது, பாலுறவின்போது உள ரீதியிலான பிணைப்பு இல்லாதது ஆகியன பெண்கள் ஆர்வம் இழக்கக் காரணங்களாக உள்ளன.

பிரிட்டனில் நடைபெற்ற பாலியல் மனநிலை மற்றும் வாழ்க்கை முறை குறித்த தேசிய கணக்கெடுப்பில், தங்கள் துணையுடன் பாலியல் விடயங்கள் குறித்து பேசுவது எளிமையானது என்று கருதியவர்கள் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கூறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்துள்ளது.

தங்கள் உறவில் மகிழ்ச்சியாக இல்லாதவர்கள், பாலியல் பிரச்சனைகள் உடைய துணைகளைக் கொண்டவர்கள் ஆகியோர் அதிகம் ஆர்வமின்றி காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சம அளவிலான பாலியல் ஆர்வம் இல்லாதது, ஒரே மாதிரியான பாலியல் ரீதியான விருப்பு வெறுப்புகள் இல்லாத துணைகள் ஆகியன பெண்கள் ஆர்வமிழக்கக் காரணமாக இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது.

“இந்த ஆய்வு மூலம் ஆண்களும் பெண்களும் பாலியல் ஆர்வம் குறைந்து இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன,” என்று சௌத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிந்தியா கிரகாம் கூறியுள்ளார்.

‘ஃபிலிபான்செரின்’ எனப்படும் பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதற்காக மருந்துக்கு முதல் முறையாக அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

மீண்டும் பாலியல் ஆர்வத்தைத் தூண்ட என்னவழி?

பாலியல் ஆர்வத்தை இழக்கத் தொடங்கும் ஆரம்ப காலத்திலேயே உங்கள் துணையுடன் இதுகுறித்துப் பேசுங்கள். பேசுவதில் தயக்கம் இருந்தால், அதை எது தடுக்கிறது என்று சிந்தியுங்கள்.
உறவு கொள்வதில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தாமல் கைகளை பற்றிக்கொள்ளுதல், வருடுதல், அணைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட நெருக்கமாவதற்கான மற்ற வழிகளையும் கையாளுங்கள்.
உங்கள் துணையின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் மதிப்பதாகவும் முக்கியமானவராக நினைப்பதாகவும் உணர வையுங்கள்.
பாலியல் சிகிச்சை நிபுணரையோ, உளவியல் ஆலோசகரையோ, பொது மருத்துவரையோ அணுகித் தீர்வு காணுங்கள்.
பாலியல் உறவு இல்லாதபோதும், உங்கள் துணையின் விருப்பத்துடன், மனம் சோராமல் தளர்வாக இருப்பதும் நன்று.