Home ஆரோக்கியம் முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்

முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்

37

முத்தம் என்பது மிக நெருக்கமான செயலாகும். முத்தமிடுவது காதல் உணர்வை வெளிப்படுத்தும், இருவருக்கிடையேயான பிரத்தியேக பந்தத்தை பலப்படுத்தும், பாலியல் கிளர்ச்சியையும் கொடுக்கும். முத்தமிடும்போது நிமிடத்திற்கு 1-2 கலோரிகள் எரிக்கப்படலாம், இன்னும் அழுத்தமாக முத்தமிடும்போது இன்னும் கூடுதல் கலோரிகளும் எரிக்கப்படலாம்.

முத்தமிடுவது, மனதிற்கு நல்ல உணர்வை அளிக்கும் டோப்பமைன், ஆக்ஸிட்டோசின், செரோட்டோனின் போன்ற வேதிப்பொருள்கள் வெளியிடத் தூண்டுதலாக இருக்கும். இந்த ஹார்மோன்கள் மகிழ்ச்சி உணர்வை அளிப்பதோடு மட்டுமின்றி, உங்கள் உறவையும் வலுப்படுத்தும். முத்தமிடும்போது, வாயில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும், இதனால் பற்களில் பிளேக் உருவாவதும் சொத்தைப் பல் உருவாவதும் தடுக்கப்படும்.

10 வினாடிகள் முத்தமிடும்போது இருவருக்கும் இடையே சுமார் 8 கோடி பாக்டீரியாக்கள் இடமாறலாம் என்று ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. நீண்ட காலம் சேர்ந்து வாழும் இணையர்கள் முத்தமிடுவதன் மூலம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களைப் பரிமாறிக்கொள்ளலாம், இதனால் பிற வகை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி அவர்களுக்கு மேம்படும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒன்பது முறை முத்தமிடும் இணையர்களுக்கும் இதே போன்று பாக்டீரியாக்களின் பரிமாற்றம் நிகழும் என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

முத்தமிடுவதாலும், உமிழ்நீர் பரிமாற்றத்தினாலும் நோய்களும் தொற்றலாம், அவற்றில் சில:

1. ஜலதோஷம் & ஃப்ளூ (Cold and Flu): ஜலதோஷம் பல்வேறு வைரஸ்களால் ஏற்படுகிறது. ஃப்ளூ (இன்ஃபுளுயன்சா) நோய்த்தொற்று இன்ஃபுளுயன்சா வைரஸ் மற்றும் அது சம்பந்தமான பிற வைரஸ்களால் ஏற்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் திரவத் துளிகள் வழியாகவோ நோய்த்தொற்று உள்ளவரிடம் இருந்து சுரக்கும் சுரப்புகள் நேரடியாகப் படுவதன் மூலமாகவோ இந்தக் கிருமிகள் பரவக்கூடும். முத்தமிடும்போது நோய்த்தொற்று உள்ளவரின் உமிழ்நீர் அல்லது சளிப்படலம் நேரடியாக மற்றவரை அடைகிறது, இதனால் நோய்த்தொற்று பரவலாம்.

2. இன்ஃபெக்ஷியஸ் மோனோநியூக்ளியோசிஸ் (Infectious Mononucleosis): காளக்காய்ச்சல் எனப்படும் இந்த நோய்த்தொற்று எப்ஸ்டெயின்-பார் வைரஸ் (EBV) எனும் வைரசால் ஏற்படுகிறது. இந்நோய் பல அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது, ஆகவே முத்தமிடுவதால் இந்த வைரஸ் பரவலாம் (இந்தக் காரணத்தினால் இந்த நோயை முத்தக் காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்). ஆனால் நோய்த்தொற்று உள்ள நபரின் இருமல், தும்மல் மூலமாகவோ அல்லது அவரிடமிருந்து வெளியேறும் உடல் சுரப்புப் பொருள்களால் மாசடைந்த பரப்பை மற்றவர் தொடுவதாலோ கூடப் பரவுகிறது.

3. காய்ச்சல் கொப்புளங்கள் ( Cold sores): ஹெர்ப்ஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ்-1 (HSV-1) எனும் வைரசால் இந்த நோய்த்தொற்று உண்டாகிறது. இந்த நோய்த்தொற்று ஒருவரின் உதடுகளிலும் வாய்க்கு அருகிலும் இருக்கும் கொப்புளங்கள் மூலம் பரவும், குறிப்பாக, இந்தக் கொப்புளங்கள் திறந்திருந்தால், அவற்றிலிருந்து திரவம் கசிந்தால் எளிதாகப் பரவும்.

4. ஸ்டிரெப்டோகாக்கல் தொண்டை நோய்த்தொற்று (Streptococcal throat infection): ஸ்ட்ரெப்டோகாக்கி என்பது மிகவும் பரவக்கூடிய பாக்டீரிய இனமாகும். இது தொண்டை எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. காற்றில் கலந்திருக்கும் திரவத் துளிகள் மூலம் இவை எளிதில் பரவும். முத்தமிடுவதன் மூலமும் இந்த பாக்டீரியா பரவக்கூடும்.

5. மூளைக்காய்ச்சல் (Meningitis): மூளைக்காய்ச்சல் என்பது மூளை மற்றும் தண்டுவடத்தை மூடியிருக்கும் உறை அடுக்குகளில் ஏற்படும் அழற்சியாகும். இந்த நோய்த்தொற்றானது, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து காற்றில் கலந்திருக்கும் திரவத்துளிகள் மூலமும், சளிப்படலத்தை நேரடியாகத் தொடுவதாலும், அவரது உமிழ்நீர், மலம் படுவதாலும் பரவுகிறது.

6. கை, கால், வாய் நோய்த்தொற்று (Hand, foot, and mouth disease): இது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றாகும் (பொதுவாக, பகல்நேரக் குழந்தைகள் கவனிப்பு மையம், மழலையர் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும்), இது காக்சாக்கி எனும் வைரசால் ஏற்படுகிறது. வழக்கமாக இந்த நோய்த்தொற்று, கழுவாத கைகளைத் தொடுவதால் அல்லது மலத்தால் மாசடந்தை பகுதிகளைத் தொடுவதால் பரவுகிறது. வாயில் திறந்திருக்கும் கொப்புளப் புண்கள் இருக்கும் நபரின் உமிழ்நீர் மற்றும் சளி மூலமாகவும் இது பரவுகிறது.

7. சைட்டோமேகாலோ வைரஸ் (CMV) நோய்த்தொற்று (Cytomegalovirus (CMV) infection): CMV வைரஸ் என்பது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம், ஆனால் இந்த வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகள் எதுவும் தென்படாது. எனினும், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு அறிகுறிகள் ஏற்படலாம், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது மிகப் பெரிய கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம் (இது குழந்தை பிறக்கும்போது பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்). CMV வைரசானது சளி, இரத்தம், சிறுநீர், தாய்ப்பால், விந்து, பெண்ணுறுப்புத் திரவங்கள் போன்றவற்றின் மூலம் பரவக்கூடும்.

8. மருக்கள் (Warts): வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருக்கள் இருந்தால், முத்தமிடுவதன் மூலம் அவை பிறருக்கும் பரவக்கூடும், குறிப்பாக, சமீபத்தில் ஏதேனும் அடிபட்ட பகுதி இருந்தால் எளிதில் பரவும்.

9. பல் சிதைவு (Tooth decay): உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியங்கள் உணவுத் துணுக்குகளை உண்டு, உப விளைபொருளாக அமிலங்களை உற்பத்தி செய்யும்போது, பற்கள் சிதையலாம். பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ளுதல், பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், தும்மல், முத்தமிடுதல் மற்றும் பிற வழிகளில் பரவக்கூடும்.

Diseases that can spread through kissing
முத்தமிடுவதாலும் உமிழ்நீர் மூலமாகவும் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions to prevent spread of infections by kissing and saliva):

முத்தமிடுவதால் நோய்த்தொற்றுகள் வரும் அபாயத்தைக் குறைக்க நீங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்: அவற்றில் சில:

உடல்நலம் இல்லாதபோது அல்லது அடுத்தவருக்கு உடல் நலம் இல்லாதபோது முத்தமிடுதலைத் தவிர்க்கவும்.
உங்களுக்கோ, பிறருக்கோ வாய்ப்புண், காய்ச்சல் கொப்புளங்கள், பிற வகைப் புண்கள் இருந்தால் அல்லது வாயைச் சுற்றி மருக்கள் இருந்தால் முத்தமிடுவதைத் தவிர்க்கவும்.
வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
ஜலதோஷம் இருந்தால், இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்தவும்.
குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும்போது, உதடுகளில் முத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும், அதற்குப் பதில் நெற்றியில் கொடுக்கலாம். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் நெற்றியில் முத்தமிடுவதே நல்லது (இதனால் சைட்டோமேகாலோ வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்).