Home பாலியல் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

29

மாதவிடாய்க்கு முந்தைய இந்த அறிகுறிகளை பொதுவாக PMS என்று குறிப்பிடுகின்றனர், இவை மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு முன்பு ஏற்படும் உடல் மற்றும் உளவியல் அறிகுறிகளாகும்.

ஒரு பெண்ணின் வழக்கமான மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் வரை நீடிக்கும்.

அண்டவிடுப்பு (கருமுட்டை வெளியீடு) சுழற்சிக்காலத்தின் 14-ஆம் நாள் ஏற்படும்.

வழக்கமான சுழற்சிக்காலம் கொண்ட பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் (இரத்தப்போக்கு) சுழற்சிக்காலத்தின் 28-ஆம் நாள் ஏற்படும்.

பெரும்பாலான பெண்களுக்கு PMS-இன் சில அறிகுறிகள் இருக்கும், இவை மாதவிடாய் தொடங்கிய பிறகு நீங்கிவிடும்.  PMS-இன் அறிகுறிகள், சில பெண்களுக்கு வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு கடுமையாக இருக்கலாம்.  ஒருவரின் PMS அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைச் சமாளிக்க, வாழ்க்கை முறையில் செய்துகொள்ளும் மாற்றங்களும் சிகிச்சையும் உதவும்.

காரணங்கள் மற்றும் அபாயங்கள் (Causes and Risk Factors)
காரணங்கள் (Causes)
இந்த அறிகுறிகளை ஏற்படுத்துவது எது என்பது இன்னும் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை.  எனினும், பின்வரும் காரணிகள் PMS ஏற்பட வழிவகுக்கலாம்:

ஹார்மோன் மாற்றங்கள்: மாதவிடாய்க் காலங்களில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் மாற்றங்கள்.
மூளையில் உண்டாகும் இரசாயன மாற்றங்கள்: மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், மூளையில் உள்ள செரோடோனின் போன்ற இரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வாழ்க்கைமுறை தொடர்பான காரணிகள்: உடல் பருமன் மற்றும் குறைவான உடற்பயிற்சிக்கும் PMS அறிகுறிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. மன அழுத்தம், PMS அறிகுறிகளை மேலும் மோசமடையச் செய்யலாம். உணவு, குறிப்பாக அதிக உப்பு, காஃபின் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை அறிகுறிகளை மோசமடையச் செய்யலாம்.  குறிப்பிட்ட சில மினரல்கள் மற்றும் வைட்டமின்களின் பற்றாக்குறையாலும் PMS-இன் அறிகுறிகள் மோசமாகலாம்.
அறிகுறிகளும் அடையாளங்களும் (Symptoms and Signs)
PMS அறிகுறிகள் பொதுவாக 14-ஆம் நாள் தொடங்கி, மாதவிடாய் தொடங்கியதிலிருந்து 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.  இவை உடல் மற்றும் உளவியல் அறிகுறிகளாக இருக்கலாம்.  அறிகுறிகள் லேசாக அல்லது மிதமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் இது வேறுபடலாம்.

பின்வரும் உடல் மற்றும் உணர்ச்சிகள் சார்ந்த அறிகுறிகளும் உள்ளடங்கும்:

தலைவலி
முதுகுவலி
மூட்டு வலிகள்
களைப்பு
முகப்பரு
மென்மையான அல்லது வீக்கமான மார்பகங்கள்
தூக்கக் கோளாறுகள்
வயிறு மந்தம்
வயிற்று உப்புசம்
பசியுணர்வில் மாற்றங்கள்
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
உளவியல் அறிகுறிகளில் சில:

திடீர் மனநிலை மாற்றங்கள்
மன அழுத்தம்
மன இறுக்கம்
காரணமற்ற அழுகை
கோபம்
நோய் கண்டறிதல் (Diagnosis)
PMS-ஐக் கண்டறிவதற்கென்று எந்த ஒரு குறிப்பிட்ட சோதனைகளும் இல்லை. மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் அறிகுறிகள் எத்தகையவை என்பதன் அடிப்படையில் இதனை உங்கள் மருத்துவர் கண்டறியலாம். இவை எப்படி உள்ளன என்பதைக் கண்டறிவதற்காக உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை குறித்து வைத்துக்கொள்ளும்படி உங்களைக் கேட்கலாம்.

சிகிச்சை மற்றும் தடுப்பு (Treatment and Prevention)
சிகிச்சை (Treatment)

PMS-ஐச் சமாளிப்பதற்கான சில மருந்துகள்: வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தல், மருந்துகள் மற்றும் மாற்று முறை சிகிச்சைகள்

வாழ்க்கை முறை மாற்றங்கள் (Life Style Changes)

மன இறுக்கத்தைக் குறைத்தல்: தியானம், நடை பயிற்சி போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்தல்
உடற்பயிற்சி – வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம்.
இரவில் நன்றாகத் தூங்குதல்: இரவில் குறைந்தது 8 மணி நேரமாவது நன்கு தூங்க வேண்டும்
பழங்கள் – அதிக பழங்கள் சாப்பிட வேண்டும்
இவற்றைக் குறைக்க வேண்டும் – சர்க்கரை, உப்பு, காஃபின், ஆல்கஹால் போன்றவற்றைக் குறைக்க வேண்டும்
இவற்றை அதிகரிக்க வேண்டும் – அதிக திரவ ஆகாரங்கள் உட்கொள்வதால் வயிற்று உப்புசத்தைத் தடுக்கலாம்.

மருந்துகள் (Medication)

வயிற்று தசைப்பிடிப்பு வலிகள், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகளுக்கு நிவாரணம் பெற, வலி நிவாரணி மருந்துகள் பயன்படலாம்.
ஹார்மோன் கருத்தடை மாத்திரைகள் கருமுட்டை வெளியாவதைத் தடுக்க உதவலாம், இதனால் PMS அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கக்கூடும்.
ஈஸ்ட்ரோஜன் செலுத்துதல் மற்றும் படைகள் (பேட்ச்)
மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகள் (உதாரணம்: குறிப்பிட்ட சில செரோட்டோனின் மறு பயன்பாட்டுத் தடை மருந்து (SSRIகள்)) மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவலாம்
கடுமையான PMS அறிகுறிகளுக்கு, கொனடோடிராஃபின் வெளியிடும் ஹார்மோன் (GnRH) இதே போன்ற நிவாரணத்தை வழங்கலாம்.
மாற்று சிகிச்சைகள் (Alternative Therapies)

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் – ஃபோலிக் அமிலம், வைட்டமின் B6, வைட்டமின் D-யுடன் கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் E ஆகியவை PMS அறிகுறிகளைத் தணிக்கக்கூடும்
மற்றவை – PMS அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பிளாக் கொஹோஷ்,சாஸ்ட்பெர்ரி அண்ட் ஈவினிங் ப்ரிமோர்ஸ் ஆயில் போன்றவையும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இவை இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

தடுத்தல் (Prevention)

PMS அறிகுறிகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனாலும், இந்த அறிகுறிகள் கடுமையாக இல்லாதபடி குறைப்பதற்கு பின்வரும் சில நடவடிக்கைகள் உதவலாம்:

பழங்கள், முழு தானியங்கள், புரதம், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்
வழக்கமாக உடற்பயிற்சி செய்வதால் வலி குறையலாம்
ரிலாக்சிங் உத்திகளைக் கற்றுக்கொண்டு, மன இறுக்கத்தைச் சமாளிக்க வேண்டும்
சிக்கல்கள் (Complications)

சில பெண்களுக்கு PMS அறிகுறிகள் தீவிரமடைந்து மாதவிடாய்க்கு முந்தைய துன்பக் கோளாறு (ப்ரீமென்ஸ்ட்ருவல் டிஸ்ஃபோரிக் டிசார்டர் (PMDD)) எனும் பிரச்சனையாகவும் மாறலாம்.  இதன் அறிகுறிகளாவன:

மன அழுத்தம்
பீதி
தற்கொலை எண்ணம்
களைப்பு
உணவில் விருப்பம்
வயிற்று உப்புசம்
மூட்டு அல்லது தசை வலி
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு சற்று முன்பும் மாதவிடாய்க் காலத்தின்போதும் அடிவயிற்று வலி, மூட்டு வலி, வயிற்று உப்புச உணர்வு, எரிச்சல், திடீர் மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட்டு இருந்தால், அதே சமயம் இந்த அறிகுறிகள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்ட பிறகும் நீங்காவிட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்

எச்சரிக்கை (Red Flags)

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு PMS அறிகுறிகள் ஏற்பட்டு, வாழ்க்கை முறைகளை மாற்றுதல், மருந்துகள் அல்லது மாற்று சிகிச்சை முறைகள் போன்ற நடவடிக்கைகளாலும் இந்த அறிகுறிகள் நீங்காவிட்டால், அத்துடன் பீதி, தற்கொலை எண்ணம், உணவு விருப்பம், கடுமையான மன அழுத்தம் போன்ற அறிகுறிகளும் இருந்தால், நீங்கள் PMDD அல்லது வேறு மருத்துவப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.  நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.