Home குழந்தை நலம் மற்றவர்கள் முன் குழந்தைகளை குறை கூறுவது நல்லதல்ல

மற்றவர்கள் முன் குழந்தைகளை குறை கூறுவது நல்லதல்ல

22

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.

அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.

குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.

பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.